Saturday, December 30, 2017

பொங்கல் சிறப்பு பஸ்கள் அடுத்த வாரம் அறிவிப்பு

Added : டிச 30, 2017 04:46

சென்னை: 'பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு பஸ், ரயில்களில் முன்பதிவு செய்ய, பயணியர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்படும், சிறப்பு பஸ்களுக்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது:


பொங்கல் பண்டிகை, ஜன., 14ல் கொண்டாடப்படுகிறது.இதற்காக, வரும், 11 முதல், 14ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களில் இருந்து வெளியூர் செல்லவும், 16 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும், 2,275 பஸ்களுடன், மூன்று நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக, 5,000 பஸ்கள் இயக்கப்படும்.


ஜன., 8 முதல், சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். சென்னையில், பண்டிகை கால போக்குவரத்து நெரிசலை குறைக்க, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, ஜன., 4 அல்லது 5ல், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


'லீவு'க்கு தடை


பண்டிகை நாட்களில், பஸ் சேவை பாதிக்காமல் இருக்க, ஓட்டுனர், நடத்துனர்கள், ஜன., 10 முதல், 17 வரை, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
சர்க்கரையில்லா ஐஸ்கிரீம் அறிமுகம்! : ஆவின் நிறுவனத்தின் புத்தாண்டு 'ஸ்பெஷல்'

Added : டிச 30, 2017 04:46

ஆவின் நிறுவனம், புத்தாண்டை முன்னிட்டு, முட்டையில்லா கேக் விற்பனை, சர்க்கரை சேர்க்காத ஐஸ்கிரீம் போன்ற, புதிய பொருள்கள் விற்பனையில் இறங்கியுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான, ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை, விற்பனை செய்து வருகிறது.

ஆவினின் வருவாயை பெருக்கும் விதமாக, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, புத்தாண்டை முன்னிட்டு, குறைவான விலையில், முட்டையில்லா கேக் விற்பனையை, ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குனர் காமராஜ் கூறியதாவது: ஆவினின் வருவாயை பெருக்குவதற்காக, சிங்கப்பூருக்கு, இதுவரை, மூன்று கண்டெய்னர்களில், பால் ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது, புத்தாண்டை முன்னிட்டு, முட்டை சேர்க்காத கேக், அறிமுகப்படுத்தி உள்ளோம். அந்த கேக் வகைகள், ஆவின் பாலகங்களில், 250 கிராம், 200 ரூபாய்; 500 கிராம், 350 ரூபாய்; 1 கிலோ, 700 ரூபாய் என, விற்பனை செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை சேர்க்காத, ஐஸ் கிரீம், உணவக விற்பனைக்காக, 500 கிராம் பன்னீர், 400 கிராம் தயிர், ஆகியவையும் அறிமுகம் செய்ய உள்ளோம்.மேலும், சிங்கப்பூரில், ஆவின் நெய், பட்டர், தயிர், பால்கோவா போன்ற பொருட்களை, விற்பனை செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. ஆவின் பொருள்களை, சிங்கப்பூரில் விளம்பரப்படுத்த, தமிழ் வானொலியான, 'ரேடியோ ஜிங்கிள்' என்ற, வானொலியில் விளம்பரம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

-நமது நிருபர்-
கோவில் திறப்பு நள்ளிரவில் இல்லை

Added : டிச 30, 2017 02:52



சென்னை: 'ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நள்ளிரவில் நடை திறக்கப்படுவதில்லை' என, அறநிலையத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அரசு, புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் நள்ளிரவு நடை திறக்க உத்தரவிட்டது. அதற்கு, பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஆகம விதிகளுக்கு புறம்பாக இருப்பதால், புத்தாண்டு நடை திறப்பு கைவிடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, பகலி
ல் கூடுதல் நேரம் கோவில்கள் திறந்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
 
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்ற பக்தி கோ‌ஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். 
 
சென்னை, 

மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியும், சிவாலயங்களில் திருவாதிரையும் குறிப்பிடத்தக்க விழாக்களாக அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் மிக சிறப்புக்குரியதாக அமைந்துள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில்களில் உள்ள பெருமாளை வழிபட்டு உள்ளனர். இந்த கோவிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.

இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19–ந் தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனமும், விஸ்வரூப தரிசனமும், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏகாதசிக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. சொர்க்கவாசல் வழியே பெருமாளை தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய காத்து நின்றனர். அதிகாலை 2.20 மணிக்கு ரூ.300 டிக்கெட் வைத்திருப்பவர்களும் கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்தங்கி ரத்தின அங்கி அலங்காரத்துடன் மகா மண்டபத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார்.

அதிகாலை 4 மணிக்கு மேளதாளம் முழுங்க, வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை உச்சரிக்க, நம்மாழ்வாரின் செந்தமிழ் வேதம் எனப்படும் திருவாய்மொழி பாசுரம் பாடப்பட்டன. இந்த பாசுரத்திற்கு இடையே உற்சவர் மகாமண்டபத்தில் இருந்து உள்பிரகாரத்தில் வலம் வந்தார். அதன்பின், தங்கவர்ணம் பூசப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சொர்க்கவாசல் கதவுகளுக்கு அருகே பெருமாள் வந்தார்.
சரியாக காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பார்த்தசாரதி பெருமாள், திருவாய்மொழி மண்டபத்திலுள்ள மண்டபத்தில் புண்ணிய கோடி விமானத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி கோ‌ஷம் எழுப்பினர். நேற்று நள்ளிரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
இன்று (சனிக்கிழமை) முதல் ஜனவரி 6–ந் தேதி வரை மாலை 6 மணிக்கும், 7–ந் தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கோவில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு கீதை சுலோகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஷ்ப அங்கி சேவையில் பக்தர்களுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியே சென்றனர். இதையொட்டி பூமார் குழுவினரின் இன்னிசை, பஜனை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது. நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்திருந்தார்.
இதேபோல், தியாகராயநகரில் உள்ள திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். லட்டு, குங்குமம், கற்கண்டு மற்றும் ஆன்மிக புத்தகம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் கேசவபெருமாள் கோவில், கொடுங்கையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட சென்னையில் உள்ள பல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்களுக்கு ரூ.300 கட்டண தரிசனம் மற்றும் அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்பட்டு இருந்தது. அனுமதி அட்டையில் வரவேண்டிய நேரம், எந்த வழியாக வரவேண்டும் போன்ற எந்த தகவலும் இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் பக்தர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நள்ளிரவு 2.30 மணிக்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வயதான பெண் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிகாலையில் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

அதில் ஒரு சிலர் நரசிம்மர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள வாசல் வழியாக வந்த அனுமதி அட்டை வைத்திருந்தவர்களிடம் அனுமதி அட்டையை வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற பக்தர்களிடம் அனுமதி அட்டை இல்லாததால் பலர் வெளியேற்றப்பட்டனர்.

வயதான பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய ஒவ்வொரு வாசலாக அலைக்கழிக்கப்பட்டனர். பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகாரத்தில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி வயதான பல பெண் பக்தர்கள் பலர் தவறி கீழே விழுந்தனர். வரும்காலங்களிலாவது வயதான மற்றும் பெண் பக்தர்களுக்கு முறையான வசதியை அறநிலையத்துறை செய்துதர வேண்டும் என்று பெண் பக்தர் ஒருவர் கூறினார்.
செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
 
செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்பட்டது. இதையொட்டி கிராம மக்களை அச்சுறுத்தி வந்த அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், திருவடிச்சூலம், இருங்குன்றம்பள்ளி, அஞ்சூர், தைலாவரம், திருமணி உள்ளிட்ட பகுதிகளில் தானியங்கி கூண்டுகள் அமைத்தும், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண்காணித்து வந்தனர்.

கடந்த 2014–ம் ஆண்டு தானியங்கி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. வனத்துறை அதிகாரிகளும் அதை உறுதி செய்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 5 அதிநவீன கூண்டுகள் மற்றும் தானியங்கி கேமராக்களை அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
2016–ம் ஆண்டிலும் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. ஆனால் இதுநாள் வரை சிறுத்தையை பிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது காட்டுப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் மீண்டும் சிறுத்தை செங்கல்பட்டு அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் சிறுத்தையின் கால் தடம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்களால் நிம்மதியாக வாழமுடியும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மேலும் சிறுத்தையை பிடிக்க பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கூண்டுகளையும், தானியங்கி கேமராக்களையும் மீண்டும் சிறுத்தை நடமாட்டமுள்ள பகுதிகளில் அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று பூங்கா துணை இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 30, 2017, 04:15 AM

வண்டலூர்,


வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குனர் சுதா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் முறையாக ஆன்–லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற 14, 15, 16 தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5½ மணி வரை நுழைவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக 30 நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மற்றும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க பார்வையாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை மற்றும் காவல் துறையை சார்ந்த பணியாளர்கள் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதற்காக நாற்காலி, மேசை வசதியுடன் உணவு சாப்பிடும் இடம் ஒன்று நுழைவுவாயில் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்கா விலங்குகளுக்கு பார்வையாளர்கள் உணவளிப்பதை தவிர்க்கும் பொருட்டு விலங்கு இருப்பிட பகுதிகளுக்குள் உணவு பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இவற்றை பாதுகாத்து வைப்பதற்கு பொருட்கள் வைப்பறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தற்பொழுது உள்ள வசதிகளுடன் மேலும் சுமார் 1,500 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கூடுதலாக வாகனம் நிறுத்தும் இடம் ஒன்று வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைக்க ஆங்காங்கே கூடுதலாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் போது பார்வையாளர்களின் வசதிக்காக காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார வாரியம் போன்ற துறைகளை ஒருங்கிணைத்து வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் பார்வையாளர்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களின் நெரிசலை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் வன மண்டலங்களில் இருந்து 130–க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எதிர்பாராத தீ சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு வாகனம் ஒன்று காணும் பொங்கல் அன்று தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவ குழு ஒன்று காணும் பொங்கல் அன்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்யும் பொருட்டு மாநகர போக்குவரத்து மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150–க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக 200–க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலித்தீன் பைகளை பூங்காவினுள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. மேற்படி பொருட்களை கொண்டுவரும் பார்வையாளர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி இயக்குனர் எம்.சண்முகம் உடன் இருந்தார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாளில் இருந்து மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்பற்றத்தக்கவையாக இருக்கிறது. 
 
மிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாளில் இருந்து மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்பற்றத்தக்கவையாக இருக்கிறது. ‘தன்னை பார்க்கவரும் யாரும் மாலையோ, பொன்னாடையோ அணிவிக்கவேண்டாம்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டார். மிக எளிமையான பன்வாரிலால் புரோகித் விமான பயணம் மேற்கொள்ளும்போது, உயர்வகுப்பில் பயணம் செய்வதில்லை. ‘எகானமி’ வகுப்பில்தான் பயணம் செய்கிறார். தனி விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ அவர் பயணம் செய்வதில்லை. சமீபத்தில் அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக சென்றபோது ரெயிலில்தான் பயணம் செய்தார். இதேபோல, சேலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் பயணம் செய்தார். அவரைப்போலவே இப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தான் பணியாற்றும் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிக்காக எந்த கிராமம் என்றாலும் சரி, எந்தஊர் என்றாலும் சரி, தன்னுடைய அரசு காரில் பயணம் செய்வதில்லை. அரசு பஸ்சில் சாதாரண பயணிகளோடு பயணம் செய்கிறார்.

மாவட்ட கலெக்டரே பஸ்சில் பயணம் செய்யும்போது, மற்ற அதிகாரிகளும் பஸ்சில்தான் பயணம் செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு பெட்ரோல் செலவு மிச்சம் என்று ஒருபக்கம் கூறினாலும், கலெக்டர், ‘‘மக்களோடு மக்களாக’’ அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது, உடன் பயணம்செய்யும் பயணிகள் அல்லது பஸ் நிலையத்தில் கலெக்டரை பார்க்கும் பொதுமக்கள் தங்கள் குறைகளையெல்லாம் அவரிடம் அங்கேயே சொல்லிவிடுகிறார்கள். கலெக்டரும், மக்களிடம் நேரடியாகப்பேசி, அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்கிறார். கவர்னர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் இவ்வாறு பொது போக்குவரத்தை பயன்

படுத்தும்போது, நிச்சயமாக பொதுமக்களும் அவ்வாறு பயணம் மேற்கொள்வதை பெருமையாக கருதுவார்கள். ஏற்கனவே ரெயில்வேயில் உயர்அதிகாரிகள் மாதம் ஒருமுறை அலுவல் ரீதியாக ரெயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கவர்னர் வழிகாட்டினார். கடலூர் கலெக்டர் அவரைப்போல அரசு பஸ்சில் பயணம் செய்கிறார். கவர்னரும், மாவட்ட கலெக்டரும் நல்ல ஒரு முன்னுதாரணத்தை செய்துகாட்டுகிறார்கள். மக்களுக்காக பணியாற்றுபவர்கள் மக்களோடு பயணம் செய்யும்போது, அவர்கள் பிரச்சினைகளை அறிந்து நிறைவேற்றுவதற்கான முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தினந்தோறும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் மாசு ஏற்படுகிறது. நம்நாட்டில் பெட்ரோல், டீசல் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. பொது போக்குவரத்தை எல்லோரும் பயன்படுத்தினால் இறக்குமதி செலவும் குறையும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார். டெல்லியில் நடந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து விரிவாக்கத்தை தொடங்கிவைத்து அதில் பயணம் செய்யும்போது, பொதுமக்களும் தங்கள் சொந்த மோட்டார் வாகனங்களில் பயணம் செய்யாமல், பொது போக்குவரத்தில் பயணம் செய்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைப்பதாகவும் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...