Thursday, February 1, 2018

கடன் வாங்கி தற்கொலையானவர் மகனுக்கு வங்கி,'நோட்டீஸ்'

Added : பிப் 01, 2018 02:19

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வெங்கமேட்டூரில் வறட்சியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி முத்துசாமி வாங்கிய, மூன்று லட்சம் ரூபாயை செலுத்தும்படி, அவரது மகனுக்கு, வங்கி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கொடுமுடி தாலுகா வெங்கமேட்டூரைச் சேர்ந்தவர் முத்துசாமி, 70; விவசாயி. இவருக்கு சொந்தமாக, 40 சென்ட் நிலம் உள்ளது.

ஐந்து ஏக்கரை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தார். கடந்த, 2015 -1 6 - 17ம் ஆண்டுகளில் கடும் வறட்சியால், இவரது நிலத்தில் நிலக்கடலை உட்பட சாகுபடி செய்த பயிர்கள், நாசமானது.

கொடுமுடி கத்தோலிக் சிரியன் வங்கியில், இவர், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். தவிர, விவசாய பணிக்காக, தனி நபர்களிடமும் கடன் பெற்றிருந்தார்.

விவசாயம் பொய்த்ததால், கடந்த, 2016 நவ., 19ல் விஷம் குடித்து, முத்து சாமி தற்கொலை செய்து கொண்டார். மாவட்ட நிர்வாகம் மூலம் அவருக்கு, இழப்பீடும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மகன் கணேசனுக்கு, வங்கியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் செலுத்தும்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில், கலெக்டர் பிரபாகரை, கணேசன் சந்தித்து மனு வழங்கினார்.
'விவசாயம் பொய்த்ததால், தன் தந்தை இறந்துவிட்டார். அவர் இறப்பு, வறட்சியால் நடந்தது என்று அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, அவர் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி, நடவடிக்கை எடுக்க, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

சந்திரசேகர் கூறிய தாவது:

கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என தெரியவில்லை. இருப்பினும், அந்த வங்கியிடம், அவர் பெற்ற கடன், அவர் திரும்ப செலுத்திய விபரம், மீதமுள்ள தொகை, கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதா என்ற விபரத்தை அறிய வேண்டும்.

இருப்பினும், கணேசனின் மனுவை அவ்வங்கி மூலம், அவர்களது தலைமைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வரும் பதிலுக்குப்பின், விபரம் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
கத்தியை சுழற்றிய மாணவர்களுக்கு டி.சி.,

Added : பிப் 01, 2018 01:06

''கத்தியை சுழற்றிய போக்கிரி மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நீக்கம் : சென்னை பச்சையப்பன் கல்லுாரி மற்றும் மாநில கல்லுாரியில் படிக்கும், மாணவர்களில் ஒரு தரப்பினர், அவ்வப்போது பஸ்களில் ரகளை செய்வது, சாலைகளில் வன்முறையில் இறங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

ஏற்கனவே நடந்த சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், அதிரடியாக கல்லுாரிகளில் இருந்து நீக்கப்பட்டனர். சில மாதங்களாக பிரச்னை இன்றி இருந்த நிலையில், மீண்டும் வன்முறை தலை துாக்கியுள்ளது. பஸ்களில் ரகளையில் ஈடுபட்டவர்கள், தற்போது, ரயில்களில் மோதலில் ஈடுபட துவங்கி உள்ளனர். மின்சார ரயில்களில் சென்ற, கல்லுாரி மாணவர்கள், நேற்று முன்தினம், சென்னை, அம்பத்துார் அருகே உள்ள பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில், ரயிலில் கத்தி, வீச்சரிவாளுடன் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம், கல்லுாரிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 'கத்தியையும், அரிவாளையும் சுழற்றும் போக்கிரி மாணவர்கள், கல்லுாரியிலேயே இனி இருக்கக் கூடாது. அவர்களுக்கு, மாற்று சான்றிதழ் தர வேண்டும்' என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

நடவடிக்கை : இது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது: கல்லுாரிகளில் அமைதியாக மாணவர்கள் பாடம் படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்.

ஆனால், சில மாணவர்கள், மிக மோசமாக செயல்படுவதை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். ஆயுதங்களை துாக்கி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
1975 முதல் வில்லங்க விபரங்களை பார்க்கும் வசதி: பதிவுத்துறை முடிவு

Added : பிப் 01, 2018 00:31

புதிதாக வீடு, மனை வாங்குவோர், 1975 முதல் பதிவான ஆவணங்களை, ஆன் - லைனில் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பதிவுத்துறை தயாராகிவருகிறது. வீடு, மனை வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் முறையாக நடந்துள்ளதா என்பதை, வில்லங்க சான்று வாயிலாக அறியலாம். இதற்காக, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தி சான்றிதழ் வாங்குவதற்கு பதிலாக, 'ஆன்லைன்' முறையில் இலவசமாக பார்க்கும் வசதி, 2013ல், அறிமுகமானது. இதன்படி, பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே, பதிவுத்துறை இணையதளத்தில், இதற்கான பகுதியில், சொத்து குறித்த விபரங்களை அளித்தால், வில்லங்க விபரங்கள், பி.டி.எப்., வடிவில் கிடைக்கும். அதில், தற்போதைய நிலவரப்படி, 1987 முதல் பதிவான, பரிமாற்ற விபரங்களை மட்டுமே, ஆன் லைன் முறையில் பார்க்கவும், பிரதி எடுக்கவும் முடியும். அதற்கு முந்தைய விபரங்கள் தேவைப்படுவோர், வழக்கமான முறையில், கட்டணம் செலுத்தி பெற வேண்டும். தற்போது, இதற்கு தீர்வு காணும் வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் வில்லங்க சான்று சரி பார்ப்பு வசதியில், 1975 முதல், பத்திரப்பதிவு விபரங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில், நடைமுறைக்கு வர உள்ளது. அத்துடன், ஸ்கேன் செய்து, பதிவுத்துறை தொகுத்துள்ள பத்திரங்களின் விபரங்களையும், பொது மக்கள் இலவசமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - -


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தகமிஷனுக்கு ரூ.3.02 கோடி செலவு

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷனுக்கு, 3.02 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.




ஜெ., மறைவால் காலியான, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, எம்.எல்.ஏ., பதவி காலியானது. அதை நிரப்ப, டிச. 21ல், தேர்தல் நடந்தது. இதில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பொதுவாக இடைத்தேர்தலுக்கு, ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு,

மூன்று பொதுப் பார்வையாளர்கள், மூன்று செலவினப் பார்வையாளர்கள், இரண்டு போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்புப் பணிக்கு, 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர்.தொகுதியில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பறக்கும் படை, கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டது. இதன் காரணமாக, தேர்தல் செலவு அதிகரித்தது. பொதுவாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு, 70 லட்சம் ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, 3.02 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உரியவர்கள், கணக்கு காட்டியதையடுத்து, அவர்களிடம், பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தேர்தல் கமிஷன் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. இதுவரை இல்லாமல், முதன் முறையாக,

ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த நிகழ்வும் அரங்கேறியது.

பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடிக்க முடியாத நிலையில், அதிகப்படியான துணை ராணுவம், கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமான நடைமுறைப்படி தேர்தலை நடத்தி இருந்தால்,அரசுக்கு, இரண்டு கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும்.

புகார் அளிக்க வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 59 வேட்பாளர் கள் போட்டியிட்டனர். அவர்கள், தங்களின் செலவு கணக்கை, தேர்தல் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பித் தனர். அந்த விபரம், செலவினப் பார்வையாளர்கள் பராமரித்த, நிழல் கணக்கு விபரம், தேர்தல் கமிஷன் இணையதளமான, tn.electiond.gov.inல், வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், செலவு கணக்கை காண்பிக்காமல் இருந்தால், பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் நிரூபண மானால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் தகுதி யிழப்பு செய்யப்படுவதுடன், மூன்று ஆண்டு கள், தேர்தலில் போட்டியிட,தடை விதிக்கபடும்.
மருத்துவக் கல்வி இயக்குனர் நியமன வழக்கு: டீனுக்கு மிரட்டல் : நீதிமன்றத்தில் தகவல்

Added : பிப் 01, 2018 02:32

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்த, டீனுக்கு மிரட்டல் வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி   இயக்குனராக 2017 ஏப்.,25ல் தமிழக அரசு நியமித்தது.இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி,உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

 தனிநீதிபதி, 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராகநியமித்த அரசாணையைரத்து செய்கிறேன். மனுதாரரை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்,' என்றார். இதை எதிர்த்து, தமிழக அரசுமற்றும் எட்வின் ஜோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல் நீதிபதிகள், 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்விஇயக்குனராக நியமித்த அரசாணை மற்றும் ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரிடீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணி மூப்பு அடிப்படையில் மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.

ரேவதி,'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்றஅவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,''உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக, புதிய பட்டியல் தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவெடுத்து தெரிவிக்க 2 நாட்கள் அவகாசம்தேவை,'' என்றார். மனுதாரர் வழக்கறிஞர், ''வழக்கால் எட்வின் ஜோ டீனாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் நீங்கள்தான் எனக்கூறி, ரேவதிக்கு பல்வேறு வகைகளில் மிரட்டல் வருகிறது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் அரசுக்கு அவகாசம் அளித்து பிப்.,2 க்குஒத்திவைத்தனர்.

காலநீட்டிப்பிலேயே காலம் தள்ளும் வல்லுனர் குழு : போராடத்தயாராகும் ஊழியர்கள்

Added : பிப் 01, 2018 02:36

சிவகங்கை: ஓய்வூதியத் திட்ட வல்லுனர் குழுவின் இயங்கும் காலத்தை 7 முறை நீடித்தும் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என, அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் செயல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஊழியர்களின் சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.
இதனால் ஓய்வூதிய பணப்பலன் பெறுவதில் சிக்கல் உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டத்தையடுத்து ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் 5 பேர் வல்லுனர் குழுவை 2016 பிப்., 26 ல் அரசு அமைத்தது. அரசு ஊழியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது.
இப்பிரச்னை சட்ட சபையில் எழுப்பப்பட்டதால், இக்குழு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இக்குழு அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நவ., 14 மற்றும் 2017 மார்ச் 2 என, இரண்டு முறை தலா மூன்று மாதங்களுக்கு
நீட்டிக்கப்பட்டது. குழுத் தலைவராக இருந்த
சாந்தாஷீலா நாயர் ராஜினாமா செய்ததால்
வல்லுனர் குழு நடவடிக்கை முடங்கியது.

ஆக., 3 ல் புதிய தலைவராக ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை அரசு நியமித்தது. இக்குழுவின் அறிக்கையை பெற்று நவ., 30 க்குள் ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என, உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. அதன்பின் டிச., 14 மற்றும் ஜன., 4ல் இரண்டு முறை தலா ஒரு மாதத்திற்கு அக்குழு நீடிக்கப்பட்டது. அந்த நீட்டிப்பும் நேற்றுடன் முடிவடைந்தது. அக்குழு இதுவரை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஓய்வூதிய மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழுவை ஏழு முறை நீடித்தும் பயன் இல்லை. எங்களை ஏமாற்றவே நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் அளித்த உறுதியை கூட காப்பாற்ற அரசு தயாராக இல்லை. இதனால் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி
வருகிறோம், என்றார்.
கும்பகோணம் மாசிமக விழா; மார்ச் 1ல் தீர்த்தவாரி

Added : பிப் 01, 2018 02:52

தஞ்சாவூர்: கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், மாசிமக விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், மகாமக விழா சிறப்புடையது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தில், மகம் நட்சத்திரம், பவுர்ணமியன்று, மாசிமக விழா நடைபெறுவது வழக்கம்.

அன்று மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையம்மன் தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி, ஏராளமானோர் புனித நீராடுவர்.
இத்தகைய சிறப்பு பெற்ற மாசிமக விழாவை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் முன்புறமுள்ள தேருக்கு, 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின் முகூர்த்தகாலுக்கு அபிஷேகங்கள் செய்து, தேரின் மேல் பந்தக்கால் நடப்பட்டது.
மாசிமக விழா, வரும் பிப்., 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, 20ம் தேதி கொடியேற்றமும், 23ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலாவும், 24ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல், ஓலைச்சப்பரம், ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், 27ம் தேதி ஐந்து தேரோட்டமும், மார்ச், 1ம் தேதி முக்கிய விழாவான, தீர்த்தவாரி மகாமககுளத்தில் நடக்கிறது.

நான்கு நாட்கள் நடக்கும்

குருஷேத்ரா விழா, நான்கு நாட்கள் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பிறமாநில மாணவர்கள், இந்தோனேஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மாணவர்கள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான மாணவர் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள், தொழில்நுட்ப தகவல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

NEWS TODAY 14.02.2026