Saturday, May 26, 2018


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 இன்று, 'ரிசல்ட்'

Added : மே 26, 2018 07:21



சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.

சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரலில் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவுகள், வரும், 28ல், வெளியாகும் என, கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, இன்றே வெளியாகின்றன.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலர், அனில் ஸ்வரூப் தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு இன்று வெளியாகும்' என, குறிப்பிட்டுள்ளார். பின், நேற்றிரவு, சி.பி.எஸ்.இ., தரப்பில் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. அதைத்தொடர்ந்து, ஜூன், 9 வரை, தேர்வு முடிவுக்கு பிந்தைய, கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 21ம் ஆண்டாக, இந்த கவுன்சிலிங்கை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.இதற்காக, 1800 11 8004 என்ற, தொலைபேசி எண்ணில், அனுபவம் பெற்ற உளவியலாளர்கள் கவுன்சிலிங் வழங்குகின்றனர். தேர்வு முடிவு விபரங்களை, www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 650 கோழிகள் சாவு




சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோழிப்பண்ணை கூரை சரிந்ததில் 650 கோழிகள் செத்தன.

மே 26, 2018, 04:01 AM
தலைவாசல்,

சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. அவ்வப்போது லேசாக மழை பெய்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் பலர் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்வதை பார்க்க முடிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. மேலும் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதுதவிர சேலம் சத்திரம் சீத்தாராமன் செட்டி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கி நின்றது.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தலைவாசல் பட்டுதுறை, மணிவிழுந்தான், சிறுவாச்சூர், வரகூர், புத்தூர், ஊனத்தூர், சார்வாய், சாமியார் கிணறு, காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

மணிவிழுந்தான் வடக்கு கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி தோட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை கூரை சூறைக்காற்றுக்கு சரிந்து விழுந்தது. இதில் 650 கோழிகள் செத்தன. மேலும் பல இடங்களில் குடிசைகள் காற்றுக்கு சரிந்து விழுந்தன. இதேபோல் மரங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன.

ஏற்காட்டில் நேற்று மதியம் முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் கனமழை பெய்தது. பின்னர் இரவில் மழை தூறிக்கொண்டே இருந்தது. கருப்பூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது ஸ்டெர்லைட் திட்டவட்டம்




தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Thoothukudi #Sterlite

மே 25, 2018, 05:00 PM

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும், ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை பொதுமக்கள் தரப்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்ற போது வன்முறை வெடித்தது, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்தும் தூத்துக்குடியில் பதட்டமான நிலை நீடிக்கிறது. ஆலையை மூட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது. நேற்று மாவட்ட ஆட்சியர் பேசுகையில் ஆலை இனி செயல்பட வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பி.ராம்நாத் தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில், இப்போது ஆலை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்தஒரு அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. போராட்டங்கள் எல்லாம் திடீரென எங்கிருந்தோ உருவாகுகிறது. போராட்டங்களின் பின்னணியில் ஏதோ தூண்டுதல் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். தொண்டு நிறுவனங்கள் சிலவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து இன்னும் பணம் வருகிறது.

அப்படிவரும் நிதி இதுபோன்ற வன்முறைக்கு திருப்பிவிடப்படுகிறது. இப்பிரச்சனைகளுக்கு சட்டப்பூர்வமாகவே தீர்வு காண முடியும் என கூறிஉள்ளார். ஆலையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ள பி.ராம்நாத், அப்படியொன்றை நாங்கள் இதுவரையில் யோசிக்கக்கூட இல்லை, 20 வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் தூத்துக்குடிக்கு வந்ததற்கு காரணம் உள்ளது, அந்த காரணம் இன்னும் மாறவில்லை. எனவே இரண்டாவது ஆலையை வேறு மாநிலங்களில் அமைக்க இடம் கிடைத்தும் நாங்கள் செல்லவில்லை, நாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். எங்களுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை, அதில் மாற்றம் இருக்காது என கூறிஉள்ளார்.

தலையங்கம்

பா.ஜ.க. அரசாங்கத்தின் 4–ம் ஆண்டு விழா




இன்று பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து 4–வது ஆண்டுவிழா. 2014–ல் இதே நாளில்தான் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் அரசாங்கத்தை அமைத்தது.

மே 26 2018, 03:00

இன்று பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து 4–வது ஆண்டுவிழா. 2014–ல் இதே நாளில்தான் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் அரசாங்கத்தை அமைத்தது. 2014–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் போட்டியிட்டன. 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3–வது முறையும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற இலக்கில் போட்டியிட்டது. ஆனால் நரேந்திரமோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிட்டது. அந்தநேரம் சில கூட்டங்களில், ‘டீ விற்றவர் பிரதமராக நினைப்பதா?’ என்றுகூட பேசப்பட்டது. ஆனால் மக்களிடையே அதுவே பெரும்பலமானது. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 543 இடங்களில், பா.ஜ.க. 282 இடங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறமுடியாமல் 44 இடங்கள் மட்டுமே பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் 62 இடங்களில்தான் வெல்லமுடிந்தது. தொடர்ந்து நடந்த பல சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.தான் அதிகமாக வெற்றிபெற்றது.

2014–ம் ஆண்டு மே மாதம் 26–ந்தேதி நரேந்திரமோடி பதவி ஏற்றார். பதவி ஏற்கும் முன்பு பா.ஜ.க. எம்.பி.க்களிடையே பேசும்போது, மிக உணர்ச்சிகரமாக பேசினார். 2019–ம் ஆண்டு நாம் சந்திக்கும்போது, எனது ஆட்சியில் ‘ரிப்போர்ட் கார்டு’டன்தான் உங்களை சந்திப்பேன் என்று கூறினார். எனது அரசாங்கம் எனக்கான அரசாங்கம் அல்ல, இந்த நாட்டுக்கான அரசாங்கம். இது ஏழைகளுக்கான அரசாங்கம், அவர்களுக்கான எல்லாவற்றையும் நான் செய்வேன் என்று உறுதி அளித்தார். கடந்த ஆண்டு 3–வது ஆண்டு விழாவின்போதே, அவர் அனைத்து மத்திய மந்திரிகளையும் தங்கள் துறையின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் ‘ரிப்போர்ட் கார்டு’களை கொடுக்கச்சொன்னார்.

இன்று நாடு முழுவதும் பா.ஜ.க.வின் 4–ம் ஆண்டு விழா நடக்கிறது. ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கும் விழாவில் ஒரு பேரணி நரேந்திரமோடி தலைமையில் நடக்கிறது. இந்த பேரணி முடிவில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் தன் அரசாங்கத்தின் 4–ம் ஆண்டு சாதனைகளை விளக்கும் ‘ரிப்போர்ட் கார்டை’ மக்களுக்கு தாக்கல் செய்யப்போகிறார். இதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் அனைத்து மத்திய மந்திரிகளையும் சுற்றுப்பயணம் செய்யும்வகையில் பல திட்டங்களை வகுத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கும்நிலையில் மந்திரிகள் மக்களை சந்தித்து, பா.ஜ.க. அரசாங்கத்தின் சாதனைகளை புள்ளி விவரங்களோடு தெரிவிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். பொதுமக்களை பொறுத்தமட்டில், நீங்கள் ‘ரிப்போர்ட் கார்டு’ தாருங்கள், நாங்கள் 2014–ம் ஆண்டு தேர்தலின்போது, பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன உறுதிமொழிகளெல்லாம் கூறப்பட்டிருந்ததோ, அந்த உறுதிமொழிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? இதுதவிர, இதுவரையில் பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல், வெளியேயும் பிரதமரும், மத்திய மந்திரிகளும் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? என்பதை பார்த்துவிட்டு மதிப்பெண் போடுவோம் என்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் அடுத்த தேர்தலில் நீங்கள் எவ்வளவு ஆதரவை எங்களிடமிருந்து பெறுவீர்கள் என்று காட்டுவோம் என்பதுதான் வாக்காளர்களின் கணிப்பாகும்.
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகும் இடம் மதுரையா?, தஞ்சாவூரா?



தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகும் இடம் மதுரையா?, தஞ்சாவூரா? என்பது பற்றி எந்த நேரத்திலும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது.

மே 26, 2018, 05:00 AM

சென்னை,

2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன. கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடிக்கடி டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா சென்னை வந்தபோதும்கூட, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி அவரிடம் வலியுறுத்தினர். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இறுதிநிலை வந்துவிட்டது.

மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது முடிவு செய்திருக்கிறது. கர்நாடக தேர்தலையொட்டி, தேர்தல் முடிந்தபிறகு எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில், எந்த நேரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், உடனடியாக அதைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, May 25, 2018

இந்தப் பேருந்தை இயக்கினால் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது! - அரசுப் பேருந்து ஓட்டுநர் போர்க்கொடி 

எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி  vikatan 25.05.2018



இந்தப் பேருந்து சாலையில் இயங்கும் நிலையில் உள்ளதா? என்பதைச் சோதனை செய்யுங்கள்.!’ என்ற கோரிக்கையோடு தேனி மாவட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அரசுப் பேருந்தோடு வந்தார் ஓட்டுநர் முருகேசன். போடி பணிமனையில் தனக்கு வழங்கப்பட்ட பேருந்து மோசமான நிலையில் இருப்பதைக் கண்ட முருகேசன், அதிகாரிகளுடன் முறையிட்டுள்ளார். எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், நேற்று தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குப் பேருந்தை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பேருந்தைச் சோதனை செய்து தகுதிச் சான்றிதழ் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர், ‘இந்தப் பேருந்து சாலையில் இயங்க தகுதியற்றது.!’ எனச் சான்றிதழ் வழங்கினார். இச்சம்பவம் தேனி போக்குவரத்துத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.



ஓட்டுநர் முருகேசனிடம் பேசினோம். `பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவன் நான். கடந்த 10 வருடங்களாக அரசுப் போக்குவரத்து துறையில் பணியாற்றுகிறேன். நான்கு மாதங்களாக தேனி முதல் போடி வழி உப்புக்கோட்டை பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட பேருந்து சாலையில் இயக்குவதற்கு தகுதி இல்லாத பேருந்து. ஜன்னல், மேற்கூரை, இருக்கைகள் என அனைத்தும் உடைந்து இருக்கும். எனக்கு வேறு பேருந்து கொடுங்கள். இந்தப் பேருந்தை இயக்கினால் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளது’ என அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. அதனால், நேற்று போடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி புதிய பேருந்துநிலையத்தில் விட்டுவிட்டு நேராக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

இப்பேருந்து சாலையில் இயங்கத் தகுதி உள்ளதா என்பதற்கான தகுதிச் சான்றிதழ் கேட்டேன். ஏழு குறைகளைக் கண்டறிந்து, இப்பேருந்து தகுதியற்ற ஒன்று என சான்றிதழ் வழங்கினார்கள். அதை போடி பணிமனைக்கு அனுப்பிவிட்டேன். மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறோம். அந்த மக்களின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் பேருந்துகளை எப்படி இயக்குவது?’’ என வேதனையோடு தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் பெரும்பாலான பேருந்துகள் சாலையில் இயங்கத் தகுதியற்ற ஒன்று எனவும், அதன் ஆயுள் காலம் முடிந்து பல வருடங்கள் ஆன பின்பும், பயன்படுத்தப்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்தத் தடுமாறுபவரா? 


ஞா. சக்திவேல் முருகன்
Chennai: vikatan 25.05.2018

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி, ஒரு வாரம் ஆகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியுமா எனத் தடுமாறுபவர்களுக்குக் கல்விக்கடன் வழங்க வங்கிகள் தயாராகிவருகின்றன.





மத்திய அரசு, `கல்விக்கடன் கேட்டு வருபவர்களை அலைக்கழிக்காமல் கல்விக்கடன் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அனைத்து தேசிய வங்கிகளையும் ஒருங்கிணைத்து, `வித்யாலட்சுமி’ (www.vidyalakshmi.co.in) என்ற இணையதளத்தின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் வங்கிக்கு நேரில் செல்லாமல் 40-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம்.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், `வித்யாலட்சுமி’ இணையதளத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். இதில், மாணவர் மற்றும் பெற்றோரின் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கியின் சேமிப்புக்கணக்கு விவரங்கள், கல்லூரி மற்றும் படிக்கவுள்ள பாடப்பிரிவு குறித்தும், கல்விக்கடனாக எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும், தேர்வுக் கட்டணம், புத்தகக் கட்டணம், கம்ப்யூட்டர் மற்றும் இதரக் கருவிகள் வாங்கினால் அதற்கான விவரங்கள், விடுதிக்கான கட்டணங்கள், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

மேலும், பெற்றோரின் வருமான விவரத்தையும் குறிப்பிட வேண்டும். இதற்காக வருமானச் சான்றிதழ் அல்லது பெற்றோர் மாதாந்திரச் சம்பளம் பெறுபவராக இருந்தால் வங்கியில் சம்பள வரவு விவரங்கள் அல்லது வருமானவரித் தாக்கல் செய்திருந்தால் அதற்கான விவரங்களையும் வழங்க வேண்டும்.

நான்கு லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாகக் கடன்பெற நினைப்பவர்கள், கடனுக்கு உத்தரவாதமாக என்னென்ன சொத்து விவரங்களை வழங்க இருக்கிறீர்கள், உங்களுக்கான நிதி வாய்ப்புகள் போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். 7.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள், கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவரின் விவரத்தையும் வழங்க வேண்டும்.

கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில், கல்விக்கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவீர்கள்? ஒவ்வொரு தவணையிலும் உங்களால் எவ்வளவு தொகையைத் திருப்பிச் செலுத்த முடியும் போன்ற தகவலையும் வழங்கவேண்டியிருக்கும். இத்தனை விவரங்களையும் வழங்கிய பிறகு, மதிப்பெண் சான்றிதழையும் கல்லூரிச் சேர்க்கைக்கான கடிதத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, கடன் பெற விருப்பம் உள்ள மூன்று வங்கிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

இணையதளத்தில் தகவலைப் பதிவுசெய்த 15 நாள்களுக்குள் வங்கியிலிருந்து தகவல் வரும். 7.5 லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாகக் கடன் கேட்டிருந்தால், 30 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும்.

சில வங்கிகளின் இணையத்திலேயே கல்விக்கடனுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தியும் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கல்விக்கடன் பெறுபவர்களுக்கு, மத்திய அரசு கல்விக்கடன் வட்டி மானியம் வழங்குகிறது. கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க, கால நிர்ணயம் எதுவும் கிடையாது. ஏற்கெனவே கல்லூரியில் சேர்ந்து படித்துவருபவர்களும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் கல்விக்கடன் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவிக்கலாம். மாவட்டத்தின் முன்னோடி வங்கியாக அறிவிக்கப்பட்ட வங்கியை அணுகியும் உங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளரை அணுகி தீர்வு காணலாம்.



கடந்த ஆண்டு இணையத்தின் வழியே விண்ணப்பித்துக் கல்விக்கடன் பெற்றவர்களிடம் பேசினோம். ``கடந்த ஆண்டு, என்னுடைய மகளுக்குப் பொறியியல் கலந்தாய்வில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணமாகப் பெருந்தொகையைச் செலுத்தவேண்டியிருந்ததால், கல்விக்கடன் பெற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்தோம். விண்ணப்பித்த ஒரு வாரத்தில் எங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள வங்கியிலிருந்து அழைப்பு வந்தது. அந்த வங்கியிலேயே எங்களுடைய மகளுக்குச் சேமிப்புக்கணக்குத் தொடங்கியிருந்ததால், கல்விக்கடன் கிடைப்பதற்கு எளிதாக இருந்தது.

கல்விக்கடன் பெற்றபோது, மகளின் வங்கிக்கணக்கில் பெற்றோரின் பெயரை இணைக்கச் சொன்னார்கள். ஆதார் கார்டு, பெற்றோரின் வருமானவரிச் சான்றிதழையும் சம்பளச் சான்றிதழையும் கூடுதலாகக் கடன் தர, மதிப்பீடு (சிபில் ஸ்கோர்) விவரங்கள் கேட்டனர். அனைத்து விவரங்களையும் வழங்கிய ஒரு வாரத்தில் வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வந்து பார்வையிட்டார்கள். அதன் பிறகு நான்கு நாள்களில் வங்கிக்கடன் கிடைத்துவிட்டது.

 வங்கியில் சரியான விவரங்களை முழுமையாக வழங்கினால், உடனுக்குடன் கல்விக்கடன் கிடைத்துவிடும். முக்கிய ஆவணங்களும், கொஞ்சம் பொறுமையும், கனிவான பேச்சும் இருந்தால் லோன் கிடைப்பது எளிது. வங்கியில் உதவி செய்யவே காத்திருக்கின்றனர். சிலசமயம், கொஞ்சம் காத்திருக்கச் சொன்னால்கூட பொறுமை இல்லாமல் வங்கி அதிகாரிகளைக் கடிந்துகொள்வதும், வார்த்தைகளால் வறுத்தெடுப்பதுமாக இருந்தால் நம்முடைய நம்பகத்தன்மையை யோசிப்பார்கள்" என்றனர்.

NEWS TODAY 27.07.2026