Saturday, May 26, 2018

தலையங்கம்

பா.ஜ.க. அரசாங்கத்தின் 4–ம் ஆண்டு விழா




இன்று பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து 4–வது ஆண்டுவிழா. 2014–ல் இதே நாளில்தான் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் அரசாங்கத்தை அமைத்தது.

மே 26 2018, 03:00

இன்று பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து 4–வது ஆண்டுவிழா. 2014–ல் இதே நாளில்தான் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் அரசாங்கத்தை அமைத்தது. 2014–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் போட்டியிட்டன. 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3–வது முறையும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற இலக்கில் போட்டியிட்டது. ஆனால் நரேந்திரமோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிட்டது. அந்தநேரம் சில கூட்டங்களில், ‘டீ விற்றவர் பிரதமராக நினைப்பதா?’ என்றுகூட பேசப்பட்டது. ஆனால் மக்களிடையே அதுவே பெரும்பலமானது. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 543 இடங்களில், பா.ஜ.க. 282 இடங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறமுடியாமல் 44 இடங்கள் மட்டுமே பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் 62 இடங்களில்தான் வெல்லமுடிந்தது. தொடர்ந்து நடந்த பல சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.தான் அதிகமாக வெற்றிபெற்றது.

2014–ம் ஆண்டு மே மாதம் 26–ந்தேதி நரேந்திரமோடி பதவி ஏற்றார். பதவி ஏற்கும் முன்பு பா.ஜ.க. எம்.பி.க்களிடையே பேசும்போது, மிக உணர்ச்சிகரமாக பேசினார். 2019–ம் ஆண்டு நாம் சந்திக்கும்போது, எனது ஆட்சியில் ‘ரிப்போர்ட் கார்டு’டன்தான் உங்களை சந்திப்பேன் என்று கூறினார். எனது அரசாங்கம் எனக்கான அரசாங்கம் அல்ல, இந்த நாட்டுக்கான அரசாங்கம். இது ஏழைகளுக்கான அரசாங்கம், அவர்களுக்கான எல்லாவற்றையும் நான் செய்வேன் என்று உறுதி அளித்தார். கடந்த ஆண்டு 3–வது ஆண்டு விழாவின்போதே, அவர் அனைத்து மத்திய மந்திரிகளையும் தங்கள் துறையின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் ‘ரிப்போர்ட் கார்டு’களை கொடுக்கச்சொன்னார்.

இன்று நாடு முழுவதும் பா.ஜ.க.வின் 4–ம் ஆண்டு விழா நடக்கிறது. ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கும் விழாவில் ஒரு பேரணி நரேந்திரமோடி தலைமையில் நடக்கிறது. இந்த பேரணி முடிவில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் தன் அரசாங்கத்தின் 4–ம் ஆண்டு சாதனைகளை விளக்கும் ‘ரிப்போர்ட் கார்டை’ மக்களுக்கு தாக்கல் செய்யப்போகிறார். இதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் அனைத்து மத்திய மந்திரிகளையும் சுற்றுப்பயணம் செய்யும்வகையில் பல திட்டங்களை வகுத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கும்நிலையில் மந்திரிகள் மக்களை சந்தித்து, பா.ஜ.க. அரசாங்கத்தின் சாதனைகளை புள்ளி விவரங்களோடு தெரிவிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். பொதுமக்களை பொறுத்தமட்டில், நீங்கள் ‘ரிப்போர்ட் கார்டு’ தாருங்கள், நாங்கள் 2014–ம் ஆண்டு தேர்தலின்போது, பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன உறுதிமொழிகளெல்லாம் கூறப்பட்டிருந்ததோ, அந்த உறுதிமொழிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? இதுதவிர, இதுவரையில் பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல், வெளியேயும் பிரதமரும், மத்திய மந்திரிகளும் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? என்பதை பார்த்துவிட்டு மதிப்பெண் போடுவோம் என்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் அடுத்த தேர்தலில் நீங்கள் எவ்வளவு ஆதரவை எங்களிடமிருந்து பெறுவீர்கள் என்று காட்டுவோம் என்பதுதான் வாக்காளர்களின் கணிப்பாகும்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...