Sunday, June 24, 2018

தே.மு.தி.க.,வில் உண்மை அறியும் சோதனை!

Added : ஜூன் 24, 2018 00:23


தே.மு.தி.க.,வில், எவ்வளவு தொண்டர்கள், உண்மையிலேயே உள்ளனர் என்பதை அறியும் சோதனையை, அக்கட்சி தலைவர், விஜயகாந்த் அரங்கேற்றியுள்ளார்.தே.மு.தி.க.,வில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உட்கட்சி தேர்தல், சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பழைய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதாக, மாவட்ட செயலர்கள் கணக்கு காட்டி வருகின்றனர். ஆனால், தே.மு.தி.க., தலைமை நடத்தும் விழாக்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு கூட்டம் சேர்வது இல்லை.இதனால், மாவட்ட செயலர்கள் கூறும் எண்ணிக்கையில், உறுப்பினர்கள் உள்ளனரா என்ற சந்தேகம், விஜயகாந்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க, புதிய நடவடிக்கையை, விஜயகாந்த் துவக்கியுள்ளார்.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சென்னை, கோயம்பேடு, தலைமை அலுவலகத்திற்கு, தினமும் வரவழைக்கப்படுகின்றனர்.அவர்களுடன், விஜய காந்த் தனித்தனியாக புகைப்படம் எடுக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், எவ்வளவு பேர் போட்டோ எடுத்துள்ளனர் என்ற விபரங்களை, மாநில நிர்வாகி ஒருவர் வாயிலாக, விஜயகாந்த் கணக்கு எடுத்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி, ஜூலை, 10 வரை நடக்கவுள்ளது. அதன்பின், மாநிலம் முழுவதும் இருந்து, எவ்வளவு தொண்டர்கள் வந்து, தன்னுடன் போட்டோ எடுத்தனர்; உறுப்பினர் அட்டை வாங்கியவர்களில், பலரும் வராத காரணம் என்ன; இதுபற்றியெல்லாம், மாவட்ட செயலர்களிடம் விளக்கம் கேட்க, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை, மாவட்ட செயலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், விஜயகாந்தை சந்தித்து, போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
காவியத் தாயின் இளையமகன் படைப்பதனால் என் பெயர் இறைவன்

Added : ஜூன் 24, 2018 00:12




ஐந்தாயிரம் திரைப்பட பாடல்கள், ஆறாயிரம் கவிதைகள், 232 புத்தகங்கள், தத்துவங்கள், ஆன்மிக கருத்துகள் என தமிழ் கவிதை உலகின் தலை சிறந்த கவிஞர் என்ற பெருமைக்குரியவர். பட்டி தொட்டியெல்லாம் தனது பாடல் வரிகளால், மக்களின் மனங்களை ஈர்த்தவர் கண்ணதாசன். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி கிராமத்தில், 1927 ஜூன், 24ல், கண்ணதாசன் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலம், கவிதையில் யாரும் எட்டாத உயரத்தை பிடித்தார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வமாக இருந்த இவர், பல்வேறு சிரமங்களை கடந்து, எழுத்து பயணத்தை துவக்கினார். முதலில் பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதினார். சண்ட மாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

இதில் பிரபலமடைந்த இவர், பின் பாடல்கள் எழுத தொடங்கினார். இயல்பான எளிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு பாடல்களை எழுதி, பாமர மக்களையும் தன் பக்கம் ஈர்த்தார். அவர் மறையும் வரை, பாடல் எழுதுவதில் அவர் தான் சக்கரவர்த்தி. தன்னம்பிக்கை, காதல், வீரம், தத்துவம், சோகம், பக்தி என மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும், தனது பாடல்களில் எழுதினார். சில படங்களில் நடிக்கவும் செய்தார். சில படங்களை இயக்கியுள்ளார். சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.
அர்த்தமுள்ள இந்து மதம், ஏசு காவியம் போன்ற நுால்களை எழுதியுள்ளார். மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும், இவரது கவிதை வரிகளுக்கும் என்றும் மரணமில்லை.

விருதுகள்

சாகித்ய அகாடமி (சேரமான் காதலி) , தேசிய விருது (குழந்தைக்காக திரைப்படம்) போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அரசியல்

துவக்கத்தில், திராவிடர் கழகத்தில் இருந்த கண்ணதாசன், பின் கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகினார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பதவி வகித்துள்ளார்.

முத்தான பாடல்களில் சில

* அச்சம் என்பது மடமையா...
* உலகம் பிறந்தது எனக்காக...
* சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்..
* மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?
* நினைப்பதெல்லாம் நடந்து வி்ட்டால்...
* தெய்வம் தந்த வீடு...
* அதோ அந்த பறவை...
* கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...
* நினைக்க தெரிந்த மனமே...
* பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
* நான் பேச நினைப்பதெல்லாம்...
* உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்..
* சி்ட்டுக்குருவி முத்தம் கொடுத்து...
* வீடு வரை உறவு...
* தாழையாம் பூ முடிச்சு
* மலர்ந்து மலராத...
* மனைவி அமைவதெல்லாம்...
* வாழ நினைத்தால் வாழலாம்...
* எங்கிருந்தாலும் வாழ்க...
* நிலவுக்கு என்மேல்...
* பசுமை நிறைந்த நினைவுகளே...
* பரமசிவன் கழுத்திலிருந்து....
80 ஆயிரம்!  இன்ஜி., கல்லுாரிகளில் காலியாகும் இடங்கள்...
 'கவுன்சிலிங்' நடக்கும் முன் விபரம் அம்பலம்



dinamalar 24.06.2018



அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலையில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, 80 ஆயிரம் இடங்கள் காலியாகி உள்ளன. இன்ஜி., படித்தவர்களுக்கு, குறைந்த சம்பளத்தில் கூட, வேலை கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளதால், பெரும்பாலான மாணவர்கள், அந்தப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்ட வில்லை என, தகவல் வெளியாகி உள்ளது.



அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், இந்தாண்டு, 'ஆன்லைன்'

கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, ஜூன், 8 முதல், 17 வரை, 42 உதவி மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதில், 1.10 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்;

மீதமுள்ள, 50 ஆயிரம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ள னர்.அதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற, 1.10 லட்சம் பேருக்கு மட்டும், வரும், 28ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடபடுகிறது. ஆப்சென்ட் ஆனவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற, 1.10 லட்சம் பேரிலும், தங்களுக்கு பிடித்தமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு கிடைக்காமல், 12 ஆயிரம் பேர் வரை, இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்பில்லை. எனவே, அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 1.78 லட்சம் இடங்களில், 80 ஆயிரம் இடங்கள் வரை காலியாகும் நிலைமை உருவாகியுள்ளது.

கல்லுாரிகள் அதிர்ச்சி

மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த

மாற்றத்தால், இன்ஜினியரிங் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.தற்போதைய நிலையில், மீதமுள்ள நிர்வாக இடங்களை யாவது முழுமையாக நிரப்ப வேண்டும்; இல்லையெனில், மாணவர் எண்ணிக்கை சரிந்து,கல்லுாரிகளை நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள, கணிதப்பிரிவு மாணவர்களை இழுத்து, குறைந்த கட்டணத் தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க, சில கல்லுாரிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளன.

வேலைவாய்ப்பு இல்லை

அதேநேரத்தில், இன்ஜினியரிங் மீதான மாயை குறைந்துள்ளது குறித்து, பெற்றோர் கூறிய தாவது:இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களில் பலர், உரிய காலத்தில், தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவதில்லை. படித்து முடித்தாலும், குறைந்த சம்பளத்தில் கூட வேலை கிடைப்ப தில்லை.மாணவர்கள் எதிர்பார்க்கும் அள விற்கு, பெரிய அளவிலான வேலை வாய்ப்பும் இல்லை. இதனால், நான்கு ஆண்டு களாக படிப்புக்காகும் செலவை, மீட்டு எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, கடன் இல்லாமல் படிக்க வைக்க, குறைந்த கட்டணத் தில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில், பிள்ளைகளை சேர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதுச்சேரி ஜிப்மரில் இடஒதுக்கீடு:மருத்துவ கவுன்சிலுக்கு 'நோட்டீஸ்'

Added : ஜூன் 24, 2018 02:31

சென்னை: புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டிராத ஆதி திராவிட சமூகத்தினருக்கு, மருத்துவ கல்லுாரிகளில் இடம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, 'ஜிப்மர்' மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த, சரண்தேவ் என்பவர் தாக்கல் செய்த மனு: ஜிப்மரில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, புதுச்சேரியை சேர்ந்த, ஆதி திராவிட சமூகத்தினருக்கென, ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை, புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். சமீபத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, புதுச்சேரியை சேர்ந்த, ஆதி திராவிடர்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ௧௦வது வரிசையில் நான் இருந்தேன்.பட்டியலை கவனமுடன் பரிசீலிக்கும் போது, அதில் இடம் பெற்றிருந்த, ஐந்து பேர், புதுச்சேரியை சேர்ந்த ஆதி திராவிட சமூகத்தினர் அல்ல; அவர்களின் பூர்வீகம், புதுச்சேரி அல்ல என்பது தெரிய வந்தது. 'வேறு மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களுக்கு, குடியேறிய மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு சலுகையை பெற உரிமையில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, ஒரு இடத்தை காலியாக வைக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஜிப்மருக்கு,

நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ௨௬ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
குருவாயூர் ரயில் தொடர் தாமதம் : குமரி ரயில் பயணிகள் கடும் அவதி

Added : ஜூன் 24, 2018 02:26


நாகர்கோவில்: குருவாயூர்- சென்னை ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பகல் நேரத்தில் மதுரை, திருச்சி, சென்னை செல்லும் குமரி மாவட்ட பயணிகளுக்கு வசதியாக உள்ளது. அதிகாலை 5:40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் வரும் இந்த ரயில் 6:00 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். எர்ணாகுளம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் வரும் ரயில்கள் தாமதமாகின்றன. இதனால் குருவாயூர் ரயிலும் தொடர்ந்து தாமதாகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு தான் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தது. பெங்களூருவிலும் இருந்து கன்னியாகுமரி வரும் ரயில்தான், குமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரசாக புறப்படுகிறது.இந்த ரயிலும் தாமதமாவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

ராஜபாளையத்தை சேர்ந்தவர் ரேபிஸ் தாக்கி பலி

Added : ஜூன் 24, 2018 02:26


காஞ்சிபுரம்: நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 47, உயிரிழந்தார். காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் பகுதியில் இவர் மளிகைக் கடை வைத்திருந்தார். மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன், அவருக்கு நாய் கடித்துள்ளது. அதற்கு உரிய சிகிச்சை பெறவில்லை. ரேபிஸ் முற்றிய நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சேகரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் ராஜபாளையம் சென்றுவிட்டனர். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை இறந்து விட்டார். 'ரேபிஸ்' நோய் பரவாமல் இருக்க, அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சிகிச்சையளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் 13 ஆயிரம் பேருக்கு இடம்

Added : ஜூன் 24, 2018 00:31

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், 12 ஆயிரத்து, 683 இடங்கள் நிரம்பிஉள்ளன.அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. இந்த இடங்கள் மற்றும், நிகர்நிலை பல்கலை மற்றும், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி களில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.முதற்கட்ட கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதன் முடிவுகள், https://mcc.nic.in என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 12 ஆயிரத்து, 683 பேர், மருத்துவப் படிப்புக்கான இடங்களைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள், ஜூலை, 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும்.

இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 10, 11ல் நடைபெற உள்ளது.அகில இந்திய கவுன்சிலிங்கில், மருத்துவ இடம் பெற்றவர்கள், அந்த இடத்தைக் கைவிட்டால், தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை கைவிடாத மாணவர்கள், மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என, மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...