Friday, July 6, 2018

ஏழு நிமிடங்களில், 'ஹவுஸ்புல்'

Added : ஜூலை 06, 2018 04:07

சென்னை:தீபாவளி ரயில் பயணத்திற்கு, நேற்று முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு, 'ஏசி' வகுப்பு டிக்கெட்டுகளும், உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பின.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை, நவ., 6ம் தேதி, செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. நவ., 2 வெள்ளிக்கிழமை என்பதுடன், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. எனவே, 5ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, பலரும் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது.ரயில்களில், 120 நாட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதன்படி, நவ., 2ல், ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முக்கிய ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.தென் மாவட்டங்களுக்கு, கன்னியாகுமரி, திருச்செந்துார், நெல்லை, ராமேஸ்வரம், அனந்தபுரி, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேஸ்வரம், மன்னை, மங்களூரு, சேலம், காரைக்கால், உழவன், வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் முக்கிய மானவை.
முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு மற்றும், 'ஏசி' மூன்றடுக்கு வசதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பி முன்பதிவு முற்றிலும் முடிந்தன.சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்தன.

இதனால், படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் நிலையங்களுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல ரயில்களில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில்உள்ளனர்.

எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் இயக்கப்படும், பல்லவன், வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 2ல் பயணம் செய்ய, நேற்றிரவு வரை, குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் இருந்தன. நேற்று இணையதளத்தில் 80 சதவீதமும், டிக்கெட் கவுன்டர்களில் 20 சதவீதமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 3ல் பயணம்செய்ய இன்றும், நவ., 4ல் பயணிக்க நாளையும், நவ., 5ல், பயணம்செய்ய, வரும், 8ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

விஜிலென்ஸ் ஏமாற்றம்

'தீபாவளிக்கான பயணத்திற்கு முன்பதிவு துவங்குவதால், பயணியர் கூட்டத்தில், இடைத்தரகர்கள் வருவர்; அவர்களை பிடித்து விடலாம்' என்ற நம்பிக்கையில், ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள், சென்னையில் உள்ள ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், திடீர் சோதனை நடத்ததிட்டமிட்டிருந்தனர்.ஆனால், முன்பதிவு துவங்கிய ஏழு நிமிடங்களில், முக்கிய ரயில்கள் அனைத்தும், 'ஹவுஸ்புல்' ஆனதால், விஜிலென்ஸ் அதிகாரிகள், யாரையும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சிறப்பு ரயில்கள் உண்டு

ஏழு நிமிடங்களில், தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு முடிந்து விட்டதால், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தீபாவளிக்கு நிச்சயம் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்புவெளியிடப்படும்' என்றார்.
ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் தேவையில்லை

Added : ஜூலை 06, 2018 01:46

புதுடில்லி:ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 

'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன், அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது.

ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்துவிடுமோ என்ற பயம், பலருக்கும் உண்டு.இந்நிலையில்,பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

'அரசு அடையாளஅட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பள்ளி, கல்லுாரி மதிப்பெண் பட்டியல்,'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் உட்பட பல்வேறு அரசு ஆவணங்களும், இந்த செயலியில்பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
மாவட்ட செய்திகள்

தென் மாவட்ட ரெயில்களில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு 7 நிமிடங்களில் முடிந்தது


தென் மாவட்ட ரெயில்களில் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி, 7 நிமிடங்களில் முடிவடைந்தது.

பதிவு: ஜூலை 06, 2018 05:30 AM
சென்னை,

சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு வி‌ஷயமாக தங்கியிருக்கும் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின்போது, குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். இதில் பெரும்பாலானோர் ரெயில் பயணங்களையே தேர்வு செய்கிறார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் 6–ந்தேதி வருகிறது. எனவே 2–ந்தேதியான வெள்ளிக்கிழமையே ஏராளமானோர் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். ரெயில்வே டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 2–ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்பதிவு டிக்கெட் எடுக்க பயணிகள் முண்டியடித்து வருவார்கள் என்பதால் எழும்பூர், சென்டிரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று காலை முன்பதிவு கவுண்ட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் பயணிகள் வரவில்லை.

அப்படி வந்த பயணிகளுக் கும் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு, டிக்கெட் வினியோகம் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே நவம்பர் 2–ந்தேதிக் கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சரியாக 8.07 மணிக்கு (7 நிமிடங்களிலேயே) முன்பதிவு முடிந்தது.

குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், வைகை, பொதிகை, மலைக்கோட்டை, ராமேஸ்வரம், நெல்லை, அனந்தபுரி, முத்துநகர் உள்ளிட்ட எல்லா ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இதனால் பல பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் ஒருவேளை டிக்கெட் கிடைத்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில், வேறு வழியின்றி காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளையும் வாங்கிச் சென்றனர்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் வரலாறு காணாத வகையில், காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. அதேபோல நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 250–ஐ தாண்டிச் சென்றது.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மட்டும் 536 இடங்கள் காலியாக இருந்தன. அதுவும் விரைவில் காலியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:–

எல்லா ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் பெரும்பாலானோர் ஆன்– லைன் மூலமே டிக்கெட் எடுத்துள்ளனர். அதனால் தான் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதை தவிர்க்க ஆன்–லைன் மூலம் டிக்கெட் எடுப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஆன்–லைன் மூலமே விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மாவட்ட செய்திகள்

சென்னையில் பரவி வரும் ‘5–ந்தேதி மார்க்கெட்’ கலாசாரம்



சென்னையில் ‘5–ந்தேதி மார்க்கெட்’ என்ற புது கலாசாரம் பரவி வருகிறது. பொருட்களை குடும்ப தலைவிகள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.

பதிவு: ஜூலை 06, 2018 05:45 AM
சென்னை,


மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக முந்தைய காலங்களில் சந்தைகள் தோற்றுவிக்கப்பட்டன. கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, பல கிராம மக்கள் வாங்கும் வகையில் ஒரு பொதுவான இடத்திலோ சந்தைகள் அமைக்கப்பட்டன. அங்கு பல்வேறு வகையான மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

ஒரு பொருளை கொடுத்து இன்னொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறையும் இருந்தது. இதில் பரிணாம வளர்ச்சி பெற்று கடைகள் வந்தன. வீதிக்கு, வீதி திரும்பும் திசை எல்லாம் தற்போது கடைகள் இருக்கின்றன.

எந்திரமயமான வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்காரர் கூட யார்? என்று தெரியாத அளவுக்கு காலையிலிருந்து இரவு வரை வேலைப்பளு சிலந்தி வலை போன்று நம்மோடு பின்னி பிணைந்துவிட்டது. இதனால் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்க கூட நேரமில்லாதவர்கள் இணையதளத்திலேயே பதிவு செய்து பொருட்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

சென்னையில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடையை கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதை பார்க்கமுடியும். பால், மளிகை பொருட்களை கடைக்காரர்கள் அதில் போட்டுவிட்டு செல்வார்கள். மாதத்திற்கு ஒரு முறை கடைகாரர்களுக்கு பணம் கணக்கிட்டு குடியிருப்புவாசிகள் வழங்குவார்கள். மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட்டு, கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் இறைப்பதை போல கூடையில் வியாபாரிகள் போட்டுச்செல்லும் பொருட் களை எடுப்பதை பார்க்க முடிகிறது.

சந்தைகளை தேடிச்சென்று பொருட்கள் வாங்கிய காலம் மாறி, வீட்டின் வாசலுக்கே பொருட்கள் வந்து விற்பனை செய்யும் காலம் தற்போது வந்துவிட்டது. நேரமின்மை, பணிப்பளு, சோர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் தேடி செல்வதை விடவும், தன்னை தேடி பொருட்கள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து விட்டனர். பழங்கள், காய்கறிகள், வளையல், தின்பண்டங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் வியாபாரிகள் வீடு தேடி வந்து விற்பனை செய்கிறார்கள்.

விதி விலக்காக இருந்த மளிகை பொருட்களும் தற்போது வீடு தேடி வரத்தொடங்கிவிட்டது. காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களை வாரத்துக்கு ஒரு முறை வாங்கலாம். ஆனால் மளிகை பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்பதால் சில்லரையாக அவ்வப்போது கடைக்கு சென்று வாங்குவதை விடவும், ஒரு மாதத்துக்கான பொருட்களையும் மொத்தமாக வாங்குவதையே பெரும்பாலான குடும்ப தலைவிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் நாளிலும், அலுவலகம், கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்திலும் பெரும்பாலும் சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் மாத சம்பளதாரர்களை குறிவைத்து சென்னையில் தற்போது ‘5–ந்தேதி மார்க்கெட்’ என்ற புது கலாசாரம் பரவி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான கிராக்கி நிலவி வருகிறது.

இதன்படி, சென்னை திருவான்மியூர், கொரட்டூர், வில்லிவாக்கம், ஆவடி, மாதவரம், எம்.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் வைத்து மளிகை சாமான்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் 5–ந்தேதியை அடிப்படையாக வைத்து மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் வெவ்வேறு தேதிகளை நிர்ணயித்து, மளிகை சந்தை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஒரு படி (1½ கிலோ எடை) என்ற அளவில் விற்பனை செய்யப்படும் இந்த பொருட்கள், கடைகளில் விற்பனை செய்யப்படுவதோடு ஒப்பிடுகையில் விலை குறைவு என்பதால் குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியோடு, ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இவர்களுக்கு ‘5–ந்தேதி மார்க்கெட்’ மாதாந்திர மளிகை சந்தை வரப்பிரசாதமாக அமைகிறது. அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதோடு, சுத்தமாகவும் இருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இணைந்து சந்தைகளை அமைக்கிறார்கள். சந்தை அமைக்கும் தினத்துக்கு முந்தைய தினம் இரவே அந்த பகுதிகளுக்கு மினி லாரிகளில் பொருட்களை கொண்டு வந்து விடுகிறார்கள். இரவு அங்கேயே தங்கிவிட்டு, அதிகாலையில் மினி லாரிகளில் இருந்து மளிகை மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள். காலையிலேயே பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் குவிந்து விடுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:–

சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி கொண்டு வந்து, மளிகை சாமான்களை விற்பனை செய்கிறோம். மொத்த விலைக்கு வாங்கி கொண்டு வருவதால், குறைவான லாபம் வைத்து விற்கிறோம். கடை வாடகை கிடையாது, கடையை நடத்துவதற்கான மின்சார கட்டணம் இப்படி எந்தவித கட்டணமும் இல்லாததால் மற்ற கடைகளோடு ஒப்பிடுகையில் குறைவான விலைக்கு எங்களால் கொடுக்க முடிகிறது.

ஆந்திர மாநிலத்திலும் இதுபோன்ற மாதாந்திர மளிகை சந்தைகள் உள்ளன. அங்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோன்றுதான் தற்போது சென்னை நகரத்திலும் மாதாந்திர மளிகை சந்தை பிரபலமாகி வருகிறது. மாத சம்பளம் வாங்குபவர்கள்தான் மளிகை பொருட்களை ஒரு மாதத்துக்கும் சேர்த்து வாங்குவார்கள். இதனால் பெரும்பாலும் மாத சம்பளம் வாங்குபவர்களை குறிவைத்துதான் நாங்கள் விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செலவு மிச்சம்

இதுகுறித்து குடும்ப தலைவிகள் கூறியதாவது:–

மாத சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நிறைவான தரத்துடன், குறைவான விலையில் இருக்கிறது. மாத பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல இருப்பதால் மாதந்தோறும் அவர்களிடம் பொருட்களை வாங்குகிறோம். ஒவ்வொரு மாதமும் வந்து விற்பனை செய்பவர்கள் என்பதால் வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றுவது இல்லை. இதேபோன்று குறைவான விலையில் அதிகமான பொருட்களையும் வாங்கி இருப்பு வைக்க முடிகிறது. கடைகளில் வாங்குவதை காட்டிலும் 30 முதல் 40 சதவீதம் வரையிலும் செலவு மிச்சமாகிறது.

விலைவாசி அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், இதேபோன்ற மளிகை சந்தைகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும். சாலையோரத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாத, நெரிசல் இல்லாத இடங்களிலேயே வியாபாரிகள் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற கடைகளை அதிகாரிகள் ஊக்குவிக்கவேண்டும். எனவே வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அப்படி தொந்தரவு ஏதேனும் கொடுத்தால் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிகாரிகளை எதிர்த்து போராட்டத்தை நடத்தவேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய செய்திகள்

பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம்: ரெயில்வே அறிவிப்பு



பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 06, 2018 04:30 AM
புதுடெல்லி,

ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இணையபெட்டகம் (டிஜிலாக்கர்) செயலியில் சேமிக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதா? சென்னை ஐகோர்ட்டு கண்டனம்



8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

பதிவு: ஜூலை 06, 2018 05:45 AM
சென்னை,

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிவித்து நிலத்தை அளவீடுசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில், கே.வி.சுசீந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மேற்கு மாவட்ட, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளேன். சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்வதைக் கண்டித்து, எங்கள் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மாரியம்மன் கோவில் திடலில், வருகிற 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். இந்த கூட்டத்துக்கு எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்க உள்ளார்.

இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்துவிட்டோம். அதுமட்டுமல்ல, கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதியே, ஓமலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு மனு கொடுத்துவிட்டேன். அவர் பரிசீலிக்காததால், கடந்த 26-ந்தேதி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஓமலூர் இன்ஸ்பெக்டரிடம் மற்றொரு மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இந்த பொதுக்கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் வராமல், அமைதியான முறையில் நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தும், அனுமதி வழங்க போலீசாருக்கு விருப்பம் இல்லை. எனவே, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீதிபதி வருத்தம் தெரிவித்தார். திட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற வழக்கை ஊக்குவிக்க முடியாது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் என்ற மிகப்பெரிய திட்டத்தை தமிழக அரசு முதல் முதலாக கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை- சேலம் இடையே உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள் எல்லாம் மிகப்பெரிய மாநகரங்களுடன் இணைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, சென்னை-சேலம் இடையே ஏற்படும் பயண காலதாமதத்தை இந்த திட்டம் குறைக்கிறது. 8 வழிச்சாலை வசதி கிடைக்கும்போது, இந்த பகுதிகளில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் தொடங்குவார்கள். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை அதிகம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

இந்த 8 வழிச்சாலை திட்டம் குறித்து இந்த கோர்ட்டில் இருந்த வக்கீல்களிடம் கருத்து கேட்டேன். அனைவருமே, இந்த திட்டத்தை வரவேற்பதாகவும், ஆதரிப்பதாகவும் கூறினார்கள். ஒரே ஒரு வக்கீல் மட்டும், 8 வழிச்சாலையை தரை மார்க்கமாக அமைப்பதற்கு பதில், உயர்மட்ட மேம்பாலமாக அமைத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று கூறினார்.

பெரும் செலவில் உருவாக்கப்படும், இந்த 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் குறித்து தெரியாமலும், புரிந்துக் கொள்ளாமலும் எதிர்க்கக் கூடாது. இதற்காக, கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தக் கூடாது. இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி டி.ராஜா உத்தரவில் கூறியுள்ளார்.

SANGEETHA @ NAVALUR

NEWS TODAY 26.01.2026