Friday, July 6, 2018

இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்

Added : ஜூலை 06, 2018 01:48

சென்னை:இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு மட்டும், ஒற்றை சாளர கவுன்சிலிங் நேரில் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு கவுன்சிலிங் துவங்குகிறது. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை மறுநாள் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00, 10:30 மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, 'இ - மெயில்' மற்றும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்பட்டுஉள்ளன.
மெட்ரோ உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி

Added : ஜூலை 06, 2018 01:47

சென்னை:மெட்ரோ ரயில் பயணியருக்கு, நிலையங்களில் உள்ள தனியார் ஓட்டலில், 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரல் வரையும், விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும்,மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில்பயணியர் வருகையைஅதிகரிக்க, பல்வேறு ஏற்பாடுகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துவருகிறது.

இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் ஓட்டலில், பயணியருக்கு, பாதி கட்டணத்தில் உணவுகள் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.இதன்படி, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள, உடுப்பி ருசி ஓட்டல்களில் சாப்பிடும் பயணியருக்கு, நேற்று முதல், 20ம் தேதி வரை, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது.

திருடனை பிடித்த நிஜ, 'ஹீரோ'வுக்கு டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை

Added : ஜூலை 06, 2018 00:41




சென்னை : செயின் பறிப்பு திருடனை, சினிமா, 'ஹீரோ' போல, துணிச்சலாக, தனி நபராக விரட்டிப்பிடித்த சூர்யாவுக்கு, சென்னை மாநகர போலீசார், டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளனர்.

சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர், அமுதா, 50; டாக்டர். வீட்டின் கீழ் தளத்தில், 'கிளினிக்' நடத்தி வருகிறார். இவர், ஏப்ரல், 17ம் தேதி இரவு, 8:40 மணிக்கு கிளினிக்கில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த, 10 சவரன் செயினை பறித்து தப்பினான். கிளினிக்கை விட்டு வெளியே வந்த, அமுதா கூச்சலிட்டார்.

அப்போது, அங்கு நின்றிருந்த, அண்ணாநகர், சி.வி.நகர், பாரதி தெருவைச் சேர்ந்த சிறுவன், சூர்யா 17, துணிச்சலாக, சினிமா ஹீரோ போல, செயின் பறிப்பு திருடனை, மின்னல் வேகத்தில் துரத்தினான். திருடனை கீழே தள்ளி, நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, செயினை மீட்டான். அவனது துணிச்சல் நடவடிக்கையால் வியந்த, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது, 'ஏசி மெக்கானிக் கடையில் வேலை பார்க்கிறேன். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லை. உடன் பிறந்தோரும் கிடையாது. ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுங்கள்' என, கமிஷனரிடம், சூர்யா கேட்டுள்ளான்.

ஒன்பதாம் வகுப்பு படித்துள்ள அவனை, போலீசார் தொடர்ந்து படிக்க வைக்க முயன்றனர். ஆனால், அவன், 'வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' என, தெரிவித்து விட்டான். எனவே, அவனுக்கு, 18 வயதாகட்டும் என, போலீஸ் கமிஷனர் காத்திருந்தார்.

தற்போது, அண்ணா சாலையில் உள்ள, டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளார். சென்னை, வேப்பேரியில், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், நேற்று, டி.வி.எஸ்., நிறுவன, மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர், சீனிவாசன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

சூர்யாவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 'ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ்' நிர்வாகிகள் மற்றும் எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் தலைவர், ரவி பச்சமுத்து ஆகியோர், மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

'ஒளிவீசும் எதிர்காலம்!'

டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை பெற்ற சூர்யா கூறியதாவது: திருடனை பிடிக்கும் போது, பலர் உதவி செய்வர்; பாராட்டுவர் என, நினைத்து பார்க்கவில்லை. போலீஸ் கமிஷனர், தன் மகன் போல், என் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளார்.

அண்ணா நகர் காவல் நிலைய போலீசார், தங்களின் செல்லப்பிள்ளை போல பார்த்துக் கொள்கின்றனர். டாக்டர் மல்லிகாவும், அவர்களது குடும்பத்தில் ஒருவன் போல் பாசம் காட்டி வருகிறார். அறிமுகமே இல்லாதவர்கள் பாராட்டுகின்றனர். போலீசார் என் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, மூன்று லட்சம் ரூபாயை, 'டிபாசிட்' செய்துள்ளனர்.

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான், போலீசாரால் குற்றங்களை குறைக்க முடியும். திருடனை துணிச்சலுடன் பிடிக்கும் போது, வேகம், விவேகம் இரண்டும் முக்கியம். செருப்பு இல்லாமல், பள்ளிக்கு சென்றுள்ளேன். 'ஏசி மெக்கானிக்' கடையில் வேலை பார்த்த போது, என் வருமானத்திற்கு ஏற்ப, செருப்பு வாங்கி அணிந்து வந்தேன். ஒரு நாளாவது, 'ஷூ' போட மாட்டோமா என, ஏங்கியுள்ளேன்.

சென்னை மாநகர போலீசாரால், 'ஷூ' போட்டு, காக்கி சீருடை அணிந்து, டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலைக்கு செல்லப் போகிறேன். நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவன் கூறினான்.
கேரளாவில் படித்த மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

Added : ஜூலை 06, 2018 05:28


மதுரை: கேரளாவில் பிளஸ் 2 படித்த மாணவர்களை தமிழக மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி எரும்பிலி அதுல்சந்த் தாக்கல் செய்த மனு: எட்டாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருவனந்தபுரத்தில் படித்தேன். நீட் தேர்வை கேரளாவில் எழுதினேன். 'நீட்' தேர்வில் 339 மதிப்பெண் பெற்றேன். தமிழக மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தேன். மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு வெளியிட்ட பட்டியலில் எனது பெயர் இல்லை.
எனது பெற்றோர் தமிழகத்தில் பிறந்தவர்கள். இங்குள்ள கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள். தற்போதைய இருப்பிடச் சான்று சமர்ப்பித்தேன். கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வழக்கு முடிவுக்குவரும்வரை எம்.பி.பி.எஸ்.,சேர்க்கையில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதுல்சந்த் மனு செய்தார்.
கேரளாவில் பிளஸ் 2 படித்து, தமிழகத்தில் நீட் எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த 2 மாணவர்கள் கவுன்சிலிங்கில் அனுமதிக்க உத்தரவிட மனு செய்தனர். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''மனுதாரர்களை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

'சான்றிதழை பறி கொடுத்த மாணவனுக்கு உதவ தயார்'

Added : ஜூலை 06, 2018 05:34


சென்னை:சான்றிதழ்களை பறி கொடுத்த மாணவன், அரசை அணுகினால், உதவிகள் அளிக்க தயாராக இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர், பூபதிராஜா; மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, சென்னை வந்தார். படிப்பு சான்றிதழ்கள் வைத்திருந்த பையை, பறி கொடுத்து விட்டார். சான்றிதழ்கள் இல்லாததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இது குறித்து, பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்த, உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரலை அழைத்து, அந்த மாணவனுக்கு உதவும்படி தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் முன், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''சான்றிதழ்களை பறி கொடுத்த மாணவனுக்கு, உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால், மாணவன் இதுவரை அதிகாரிகளை அணுகவில்லை,'' என்றார்.
அதற்கு, நீதிபதி வைத்தியநாதன், ''அரசிடம் உதவி கேட்டு, மாணவன் வரும் பட்சத்தில், விரைந்து செய்து கொடுக்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.
காஸ் சிலிண்டர்கள் வெடித்து குடும்பமே பலி கடன்தொல்லையால் மதுரையில் விபரீதம்

Added : ஜூலை 06, 2018 01:36




திருப்பரங்குன்றம்:மதுரையில் கடன் தொல்லையால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து மனைவி, மகளை கொலை செய்த மிட்டாய் வியாபாரி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 37. இவரது மனைவி காஞ்சனா,30, மகள் அக் ஷயா,6. மூன்றரை ஆண்டுகளுக்கு முன், மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் வாடகை வீட்டில் குடியேறினர். மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை வாங்கி சில்லரையில் ராமமூர்த்தி விற்றுவந்தார். காஞ்சனா கடை ஒன்றில் வேலை செய்தார். அக்ஷயா தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 3:00 மணிக்கு வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அருகில் வசிப்பவர்கள் வந்தபோது ராமமூர்த்தி தீக்காயங்களுடன் சத்தமிட்டபடி ஓடிவந்து ரோட்டில் விழுந்தார். '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில விநாடிகளில் வீட்டிற்குள் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டதுடன், தீ வீட்டின் வெளியே பரவியது. அதற்குள் அங்கு வந்த ஆம்புலன்சில் ராமமூர்த்தியை அனுப்பிவிட்டு, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், மணிகண்டன், எஸ்.ஐ., க்கள் மணிக்குமார், சாந்தா ஆகியோர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் காஞ்சனா, அக் ஷயா கருகி கிடந்தனர். இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்த நிலையில் கிடந்தன.

தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்தது தெரிந்தது. துாங்கிக்கொண்டிருந்த மனைவி, மகளை காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொலை செய்த ராமமூர்த்தியும் தீ விபத்தில் சிக்கி இறந்தார்.

போலீசார் கூறியதாவது: ராமமூர்த்திக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். சிலிண்டர் வெடித்த சத்தம் ஒரு கி.மீ., சுற்றளவிற்கு கேட்டுள்ளது. 50 அடி உயரத்திற்கு தீ பரவியுள்ளது.சிலிண்டர் வெடித்ததில் வீட்டு கதவின் ஒரு பகுதி உடைந்து 20 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டது. வீட்டினுள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை சூழ்ந்திருந்தது, என்றனர்.

கடன் தொல்லையால்ஓராண்டில் 13 பேர் பலி

மதுரையில் கடந்த ஓராண்டில் 13 பேர் கடன்தொல்லைக்கு ஆளாகி இறந்துள்ளனர். கடந்த 2017 செப்., 25ல் மதுரை யாகப்பா நகரில் தனியார் பள்ளி நர்சரி பள்ளி நிர்வாகி குறிஞ்சிகுமரன் மற்றும் குடும்பத்தினர் 8 பேர் விஷம் குடித்தனர். இதில் 7 பேர் இறந்தனர். இந்தாண்டில் ஏப்.,2ல் மதுரை பழங்காநத்தத்தில் மூர்த்தி என்பவரின் மனைவி பிரியா தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த பட்டியலில் ராமமூர்த்தி குடும்பமும் சேர்ந்தது பரிதாபம்.
ஏழு நிமிடங்களில், 'ஹவுஸ்புல்'

Added : ஜூலை 06, 2018 04:07

சென்னை:தீபாவளி ரயில் பயணத்திற்கு, நேற்று முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு, 'ஏசி' வகுப்பு டிக்கெட்டுகளும், உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பின.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை, நவ., 6ம் தேதி, செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. நவ., 2 வெள்ளிக்கிழமை என்பதுடன், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. எனவே, 5ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, பலரும் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது.ரயில்களில், 120 நாட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதன்படி, நவ., 2ல், ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முக்கிய ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.தென் மாவட்டங்களுக்கு, கன்னியாகுமரி, திருச்செந்துார், நெல்லை, ராமேஸ்வரம், அனந்தபுரி, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேஸ்வரம், மன்னை, மங்களூரு, சேலம், காரைக்கால், உழவன், வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் முக்கிய மானவை.
முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு மற்றும், 'ஏசி' மூன்றடுக்கு வசதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பி முன்பதிவு முற்றிலும் முடிந்தன.சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்தன.

இதனால், படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் நிலையங்களுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல ரயில்களில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில்உள்ளனர்.

எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் இயக்கப்படும், பல்லவன், வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 2ல் பயணம் செய்ய, நேற்றிரவு வரை, குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் இருந்தன. நேற்று இணையதளத்தில் 80 சதவீதமும், டிக்கெட் கவுன்டர்களில் 20 சதவீதமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 3ல் பயணம்செய்ய இன்றும், நவ., 4ல் பயணிக்க நாளையும், நவ., 5ல், பயணம்செய்ய, வரும், 8ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

விஜிலென்ஸ் ஏமாற்றம்

'தீபாவளிக்கான பயணத்திற்கு முன்பதிவு துவங்குவதால், பயணியர் கூட்டத்தில், இடைத்தரகர்கள் வருவர்; அவர்களை பிடித்து விடலாம்' என்ற நம்பிக்கையில், ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள், சென்னையில் உள்ள ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், திடீர் சோதனை நடத்ததிட்டமிட்டிருந்தனர்.ஆனால், முன்பதிவு துவங்கிய ஏழு நிமிடங்களில், முக்கிய ரயில்கள் அனைத்தும், 'ஹவுஸ்புல்' ஆனதால், விஜிலென்ஸ் அதிகாரிகள், யாரையும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சிறப்பு ரயில்கள் உண்டு

ஏழு நிமிடங்களில், தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு முடிந்து விட்டதால், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தீபாவளிக்கு நிச்சயம் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்புவெளியிடப்படும்' என்றார்.

NEWS TODAY 26.01.2026