Sunday, July 8, 2018


இன்று வருகிறார் ரஜினி  அரசியல் பணிகள் ஆரம்பம் 

 
dinamalar 8.7.2018

டார்ஜிலிங்கில் படப்படிப்பை முடித்து, நடிகர் ரஜினி, இன்று சென்னை திரும்புகிறார். மீண்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார்.




கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், புதுப்படத்தில், ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மற்றும் அம்மாநிலத்தில் உள்ள மலைப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பை முடித்து, இன்று சென்னை திரும்புகிறார். நாளை முதல், அரசியல்

பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:ரஜினி மக்கள் மன்றத்திற்கு, தமிழகம் முழுவதும், 70 சதவீத அளவுக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 100 சதவீதம் பணி முடிவடைந்ததும், அவர்களை அழைத்து, சென்னையில் பேச உள்ளார். ராகவேந்திர திருமண மண்டபத்தில், மாவட்ட வாரியாக, பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், ரஜினி கலந்துரையாடும் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை, 40 லட்சத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வரவுள்ளதால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒன்றாக வரும் என்றும், ரஜினியிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், அரசியல் பணிகளில், மீண்டும் தீவிரம் காட்ட, ரஜினி திட்டமிட்டுள்ளார். 'டிவி' விவாதங்களில், யார் யார் பேச வேண்டும் என்பதற்காக, ஊடகவியல் தொடர்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான நிர்வாகிகளை, விரைவில், ரஜினி அறிவிக்க உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க மேற்கு வங்க மாணவிக்கு அனுமதி

Added : ஜூலை 08, 2018 01:37


சென்னை:மேற்கு வங்கத்தில் படித்த மாணவி, பொதுப்பிரிவுக்கான மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

சென்னை, சூளைமேட்டை சேர்ந்தவர், கே.சுரேந்திரன். இவரது மகள், ஐஸ்வர்யா; அடிப்படை கல்வி முதல், பிளஸ் ௨ வரை, மேற்கு வங்கத்தில் படித்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்க, ஐஸ்வர்யாவை பரிசீலிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், ''ஐஸ்வர்யாவின் சொந்த மாநிலம், தமிழகம் என்பதற்கான சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அவரது கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.ஏ.திவாகர் ஆஜராகி, ''ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவரது கோரிக்கை தவறு என கூற முடியாது; இதே நீதிமன்றம், ஆவணங்களை வழங்காத மாணவனை, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மேற்கு வங்கத்தில், பள்ளி படிப்பை முடித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்பிக்கவில்லை.சொந்த மாநிலம், தமிழகம் என, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு ஆதாரமாக ஆவணங்களை சமர்பிக்கவில்லை.

அரசு வேலைக்காக, தொழில் செய்வதற்காக, வணிகத்துக்காக, வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும், சொந்த மாநிலத்தில் உள்ள நிரந்தர முகவரியை, ஒருவர் இழந்து விட மாட்டார்.இந்த வழக்கின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது, மனுவை நிராகரிக்க வேண்டும் என்றாலும், பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, மனுதாரரை அனுமதிக்கும்படி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இடஒதுக்கீட்டுக்கான பிரிவில் பரிசீலிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வற்புறுத்தினால், அது நிராகரிக்கப்படக் கூடியது. விசாரணை, வரும், ௩௦ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கிடையில், மருத்துவ கல்விக்கான தேர்வுக்குழு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நிர்பயா வழக்கு: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 05:36


புதுடில்லி:நிர்பயா வழக்கில், குற்றவாளிகளின் மறுசீராய்வு மனு மீது, நாளை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தலைநகர் டில்லியில், 2012, டிச., 16ல், மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், அக் ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய ஐந்து பேருக்கு, மரண தண்டனை விதித்து, டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2014ல், சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தான்.மீதமுள்ளோர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை உறுதி செய்து, 2017ல் உத்தரவிட்டது.

இந்நிலையில், அக் ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோர், தண்டனையை குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது, நாளை, பிற்பகல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
9 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை: 46 நாட்களில் தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 05:38 



  போபால்: ம..பி.யில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவாக விசாரித்த கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் ம..பி. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி முதல்முறையாக 46 நாட்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ம.பி. மாநிலம் சாகர் மாவட்டம் ரெக்லி என்ற பகுதியைச் சேரந்தவன் நாராயணன் பட்டேல், இவர் கடந்த மே மாதம் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சாகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் குற்றவாளி நாராயண் பட்டேலுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுதன்ஸூசக்சேனா தீர்ப்பளித்தார்.

இது குறித்து சாகர் மாவட்ட எஸ்.பி., சத்தியேந்திர சுக்லா கூறுகையில், குற்றவாளி கடந்த மே 24-ம்தேதி கைது செய்யப்பட்டான். அவன் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 72 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. டி.என்.ஏ. சோதனை அறிக்கைகள் உள்பட அனைத்தும் 46 நாட்களில் விசாரணை முடிந்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ;குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

முதல் தண்டனை

ம.பி.யில் கடந்த ஆண்டு டிசம்பரில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒப்புதல் கிடைக்க பெற்று கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் படி முதல் முறையாக பலாத்கார குற்றவாளி நாராயணன் பட்டேலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மூதாட்டி சீறுநீரகத்தில் 47 கற்கள் அகற்றம்

Added : ஜூலை 08, 2018 06:18

ராமநாதபுரம்:மூதாட்டியின் சிறுநீரகப் பையில் உருவான 49 கற்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.

ராமநாதபுரம் மாவட்டம், விளங்களத்துார் இருளன் மனைவி உடையாள்,65. இவருக்கு சிறுநீர்ப் பை வீக்கத்துடன் காணப்பட்டது. ஐந்தாண்டுகளாக இந்த பிரச்னையால் அவதிப்பட்ட உடையாள், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது, சீறுநீரகப் பையில் ஏராளமான கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் அறிவழகன் லேசர் முறையில், சிறு நீரகப் பையில் இருந்த கற்களை அகற்றினார். 47 கற்கள் முற்றிலும் அகற்றப்பட்டன.
முட்டை சப்ளையில் கைமாறிய கோடிகள்
3 நாள், 'ரெய்டில்' கிடைத்த முக்கிய ஆவணம்
 dinamalar 8.07.2018

தமிழக அரசுக்கு, சத்துணவு முட்டை, சத்துமாவு வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மற்றும் அதன்துணை நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய, 38 மணி நேர சோதனையில், முட்டை சப்ளையில் ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் கைமாறியதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதில், தமிழக பெண் அமைச்சருக்கு சிக்கல் எழுந்துள்ளது.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வட்டூரைச் சேர்ந்தவர் குமாரசாமி, 55. ஆண்டிப்பாளையத்தில், 'கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

பல குழுக்கள் :

இந்நிறுவனம், வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த, 5ல், நிறுவனம், வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என, மாவட்டம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், பல குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் முழுவதும், நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குன ராக உள்ள, ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி சுதாதேவி, ஆண்டிபாளையம் அருகேயுள்ள, கொல்லம்பட்டியைச் சேர்ந்தவர்.

சிக்கின : குமாரசாமியின் உறவின ரான சுதாதேவி, பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரது வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தனியார் நிறுவன வங்கி கணக்கில் இருந்து, சுதாதேவி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கின. இச்சோதனை, 38 மணி நேரத்துக்கு பின் முடிவுற்றது. நேற்று, ஆண்டிபாளையத்தில் மட்டும் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சத்துணவு திட்டத்துக்காக, 2017 - 18ம் ஆண்டில், 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக, கிறிஸ்டி நிறுவனம், ஒரு முட்டை, 434 காசு வீதம், 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. அதில், 10 சதவீதம் அமைச்சருக்கும், 5 சதவீதம், அதிகாரிகளுக்கும் என, 61.80 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், பெண் அமைச்சர் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கல், சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் திறப்பு உட்பட விழாக்களுக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அமைச்சர்கள் இருவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிறிஸ்டி நிறுவன சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, விழாக்களில் பெண் அமைச்சர் கலந்து கொள்ள வில்லை.

திருமண பரிசு :

அமைச்சரின் வளர்ப்பு மகள் திருமணம், கடந்தாண்டு நடந்தது. இதில், கிறிஸ்டி நிறுவனத்தின் சார்பில், விலை உயர்ந்த கார் மற்றும் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆவணங்களும், சோதனையில் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ரூ.246 கோடி, 'டிபாசிட்' :

கடந்த, 2016, நவம்பர்,8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், திருச்செங்கோடைச் சேர்ந்த தனிநபர் கணக்கில், 246 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்திருப்பதாக, தகவல் கிடைத்தது. இதில், 'பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், டிபாசிட் செய்திருப்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது, மொத்த தொகையில், 45 சதவீதத்தை வரியாக கட்டியும், 25 சதவீதத்தை வட்டியில்லா டிபாசிட்டாக வைத்திருக்கவும் சம்மதித்துள்ளதாக தெரியவந்தது. மேலும், அந்த வங்கியில், 800 பேர் பெயரில், 10 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை, பணம் போடப்பட்டுள்ளது. தற்போது, திருச்செங்கோடில் நடந்த வருமானவரி சோதனையின் போது, குறிப்பிட்ட அந்த வங்கியிலும் சோதனை நடந்தது, பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துஉள்ளது.

காசாளர் மீது புகார் : நாமக்கல் மாவட்டம், ஆண்டிப்பாளையம், கிறிஸ்டி ப்ரைடு கிராம் நிறுவனத்தில், வருமானவரி சோதனையின் போது, காசாளர் கார்த்திகேயன், 32, தற்கொலைக்கு முயன்றதாக, சென்னை வருமான வரித்துறை அதிகாரி,தயானந்த பிரசாத் புகார் அளித்தார்.இதன்படி, திருச்செங்கோடு ரூரல் போலீசார், கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -
மும்பை, சென்னை விமானங்கள் ரத்து சுற்றுலா பாதிக்கும் அபாயம்

Added : ஜூலை 08, 2018 06:13


மதுரை:மதுரை- சென்னை தனியார் நிறுவன விமான சேவை ரத்தான நிலையில், மும்பை செல்லும் 'ஏர் இந்தியா' விமானமும் ஜூலை 13 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா பாதிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது மதுரையில் இருந்து 'ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா' விமானங்கள் மும்பை செல்கின்றன. மும்பையில் இருந்து மதுரை வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் மதுரை--சென்னை--மும்பை 'ஏர் இந்தியா' விமானம் ஜூலை 13 முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த விமானம் மும்பையில் காலை 8:55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 10:55க்கு செல்லும். அங்கிருந்து 11:30க்கு புறப்பட்டு மதியம் 12:35க்கு மதுரை வரும். மதுரையில் இருந்து மதியம் 1:15க்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2:20க்கும், அங்கிருந்து 2:55க்கு புறப்பட்டு மாலை 4:50க்கு மும்பை செல்லும். இந்த விமானம் ஹஜ் யாத்திரைக்கு இயக்கப்பட உள்ளதால், சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் மதுரை -சென்னை ஏ.டி.ஆர்., ரக 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 'போயிங்' ரக விமானத்தை இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மதுரையில் இருந்து சென்னை, மும்பை, டில்லி, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்படும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிராவல் கிளப் நிர்வாகிகள் ஸ்ரீராம், முஸ்தபா, விஸ்வநாதன் ஆகியோர் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனிடம் வலியுறுத்தி உள்ளனர்.கிளப் முன்னாள் தலைவர் முஸ்தபா கூறுகையில், ''ஏர்இந்தியா விமானம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா வரும் வடமாநில பயணிகள் பெரும்பாலும் இந்த விமானத்தை பயன்படுத்துகின்றனர்.

சென்னை தனியார் நிறுவன விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழில் பாதிக்கும். வடமேற்கு மாநிலத்தவர் மும்பை வழியாகதான் மதுரை வருகின்றனர். ஹஜ் யாத்திரைக்கு வேறு விமானங்களை பயன்படுத்தலாம்,'' என்றார்.

மதுரை எம்.பி., கோபால கிருஷ்ணன் அறிக்கை: மதுரை- மும்பை இடையே இயக்கப்பட்டஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமதுரை மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய விமானமாக இருந்தது. 42 ஆண்டுகள் பயனுள்ள சேவை அளித்தவரலாற்றுச் சிறப்புமிக்கது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஆன்மிகம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவில் மதுரைஉலக அளவில் பயணிகளை கவர்ந்து வருகிறது.
மதுரை - மும்பை இடையேஏர் இந்தியா விமான சேவையை தொடர விரைந்துநடவடிக்கைவேண்டும் என,மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

NEWS TODAY 26.01.2026