Saturday, July 14, 2018

நீட் உயர் நீதிமன்ற உத்தரவு; மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான இடங்கள் ஒதுக்கிடுக: முதல்வர் பழனிசாமிக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்

Published : 13 Jul 2018 19:44 IST
சென்னை



முதல்வர் பழனிசாமி, டி.கே.ரங்கராஜன் எம்.பி. | கோப்புப் படம்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்கள் பாதிக்கப்படாமலிருக்க, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், ''மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் (NEET) நுழைவுத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் வழக்கு தொடுத்தேன்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டுமென்று உத்திரவிட்டதுடன், கலந்தாய்வை நிறுத்திவைத்து புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டனர். இதனால் தமிழில் நீட் தேர்வெழுதிய 24,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை தமிழக அரசின் கல்வி அமைச்சரும் வரவேற்றுள்ளார் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படுகிற போது தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், ஏற்கெனவே கலந்தாய்வின் மூலம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமலிருக்க, தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்து அவர்களின் அனுமதியையும் பெற வேண்டும். ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்ற மாணவ மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

ஏசி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

By DIN | Published on : 13th July 2018 08:48 PM


சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து கரூா், போடி ஆகிய பகுதிகளுக்கு படுக்கையுடன் கூடிய குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக அதிநவீன வசதிகளைக் கொண்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அண்மையில் தொடங்கி இயக்கி வருகிறது. 250-க்கும் மேற்பட்ட இப்புதிய பேருந்துகளில் பல வசதிகள் இருந்தாலும், குறிப்பிடும்படி படுக்கையுடன் கூடிய குளிா்சாதன வசதிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் தேவையறிந்து தனியாா் நிறுவனங்களால் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக சென்னை எழும்பூரிலிருந்து படுக்கை வசதியுடன் கூடிய குளிா்சாதனப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. புதிதாக இயக்கப்பட்ட அதிநவீனப் பேருந்துகளில் 40 பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேருந்துகள் வரப்பெற்று, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா், பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
யுஜிசி அமைப்பே தொடர வேண்டும்: முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு

By DIN | Published on : 14th July 2018 01:40 AM |




மத்திய அரசு அமைக்க உத்தேசித்துள்ள உயர் கல்வி ஆணைய சட்ட முன்வரைவு குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

இந்திய உயர் கல்வி ஆணையம் கொண்டு வருவது அவசியமற்றது. ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்பே தொடர வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்தாகும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவே, இந்திய உயர் கல்வி ஆணைய சட்ட முன்வரைவு மீதான தமிழக அரசின் கருத்தாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு (எம்.ஹெச்.ஆர்.டி.) அனுப்பப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்தெரிவித்தார்.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு (எம்.ஹெச்.ஆர்.டி.) அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, இதுதொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை வரவேற்றுள்ளது.

இதில் கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 7 கடைசித் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கான கால அவகாசம் ஜூலை 20 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கும், சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கல்வியாளர்களும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் உயர் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கானத் திட்டமே இது எனவும் கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

முதல்வர் தலைமையில் ஆய்வு: இந்தச் சட்ட முன்வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் க.சண்முகம், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அளித்த பேட்டி: யுஜிசி அமைப்பு கடந்த 1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. யுஜிசி-யை ரத்து செய்துவிட்டு, புதிதாக இந்திய உயர் கல்வி ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்குவது தேவையற்றது.

ஏற்க முடியாது: மேலும், கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த ஆணையம் கவனிக்கும்; உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் எம்.ஹெச்.ஆர்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, யுஜிசி அமைப்பே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்தாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசின் கருத்தாக... இந்த முடிவு தமிழக அரசின் கருத்தாக உடனடியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு (எம்.ஹெச்.ஆர்.டி.) அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் மீது கருத்துத் தெரிவிக்க ஜூலை 20 வரை கால அவகாசம் இருக்கிறது என்றபோதும், உடனடியாக இந்தக் கருத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விடும் என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By DIN | Published on : 14th July 2018 01:35 AM

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு தானாகவே கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், இத்தீர்ப்பை வெள்ளிக்கிழமை அளித்தது. மருத்துவப் படிப்பில் சேர நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி ஆமிரா ஃபாத்திமா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு 2016-இல் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள், கடுமையான நிதி நெருக்கடி ஆகியவை காரணமாக இப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசு 2013-ஆம் ஆண்டு முதல் ஏற்று நடத்தி வருகிறது. இப்பல்கலை.க்கு உள்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் அரசின் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாறாக, ரூ.5,54,370 வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி. சிவபாலமுருகன், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 2.20 லட்சம் முதல் ரூ. 2.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் ரூ.13,500 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவருக்கு சுமார் ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலை. சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். நந்தகுமார் வாதிடுகையில், கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை கல்லூரி நிர்வாகத்துக்கு உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் உதவும் பொருட்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ரஞ்சித் குமார், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசுக் கல்லூரியும் அல்ல. நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் அல்ல. இதனால், தாங்களாகவே கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அக்கல்லூரிக்கு அதிகாரம் இல்லை' என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி யு.யு. லலித் அமர்வு சார்பில் மற்றொரு நீதிபதி அருண் மிஸ்ரா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

தீர்ப்பு விவரம் வருமாறு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு தானாகவே கல்விக் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை இல்லை. மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இரு வாரங்களில் தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழுவிடம் அக்கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும். அந்தக் கட்டணங்களை நிர்ணயிக்கும் நடைமுறைகளை நிகழாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்னதாக அரசின் கட்டண நிர்ணயக் குழு முடிக்க வேண்டும். அக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட குறைவாக இருக்கும்பட்சத்தில், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து கணக்கிட்டு மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். மேலும், நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம் 2018-2019-ஆம் கல்வி ஆண்டுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பல்கலை கல்வி கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்கும்'

Added : ஜூலை 14, 2018 03:06

புதுடில்லி:'அண்ணாமலை பல்கலையில், கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தின் அண்ணாமலை பல்கலையில், 2013 - 14 கல்வியாண்டில், முதல் முறையாக துவக்கப்பட்ட, எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர்ந்த, 150 மாணவர்கள், ஆண்டுக்கு, 5.54 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டுமென, பல்கலை கூறியது.இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. 'கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, பல்கலைக்கே அதிகாரம் உள்ளது' என, உயர் நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அருண் மிஸ்ரா, உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.விசாரணை முடிவில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 'அண்ணாமலை பல்கலை கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கே உள்ளது.

'கடந்த, 2018 - 19 கல்வியாண்டு முதல், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, குழு அமைக்கப்பட வேண்டும்' என, கூறினர்.
'கொடை' யில் வீசும் காற்றால் சுற்றுலா பயணிகள் அவதி

Added : ஜூலை 14, 2018 05:34


கொடைக்கானல்:கொடைக்கானலில் வீசும் பலத்த காற்றால் மரங்கள் சாய்ந்தன. சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோடை வாச தலமான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மாறுபட்ட சீதோஷ்ண நிலை, சாரல் மழை,பலத்த காற்றுஎன்ற சூழல் நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் இங்கும் குளிர்காற்று வீசுகிறது.

மலைப்பகுதியில் சாரல் மழையுடன் வீசும் பலத்த காற்றுக்கு சிவனடி ரோடு, செட்டியார் பூங்கா பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மரங்கள் விழுவதால்ஆங்காங்கேவாகனங்கள்செல்லமுடியாமல் போக்குவரத்து , மின்சாரம் தடைகள் ஏற்படுகின்றன.

நேற்று முன்தினம்பிரையன்ட்பூங்கா பகுதியில் மரங்கள் சாய்ந்து நகராட்சி கடைகள் மீது விழுந்ததில் கடைகளில் இருந்த பொருட்கள் சேதமானது. தீயணைப்பு துறையினர் மரங்களைஅப்புறப்படுத்தினர்.

சுற்றுலா தலங்களான பிரையன்ட் பூங்கா , ஏரி ரோடு, கலையரங்க கட்டண வாகன நிறுத்துமிடங்களில ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
'பிசியோதெரபிஸ்ட்' கொலையில் மறைக்கப்படும் இடைத்தரகர்கள்

Added : ஜூலை 14, 2018 03:38

திருச்சி:திருச்சியில், 'பிசியோதெரபிஸ்ட்' கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கூலிப்படைக்கும், கொலைக்காரர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர்களை போலீசார் மறைத்து, தப்ப வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்த விஜயகுமார், 36, என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில், 8ம் தேதி, திருச்சி காவிரி ஆற்றில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.விசாரித்த ஸ்ரீரங்கம் போலீசார், திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஈஸ்வரி, 21, மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த, 25 - 33 வயதுடைய கூலிப்படையினர், மூன்று பேரை கைது செய்தனர்.
ஈஸ்வரி, சென்னையில், சி.ஏ., படித்தபடியே, வேலை பார்த்து வந்தார். இவருக்கும், விஜயகுமாருக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்துள்ளது.அவர்கள் உல்லாசமாக இருந்த போது, அதை, 'வீடியோ' எடுத்து, ஈஸ்வரியை விஜயகுமார் மிரட்டி வந்ததாகவும், அதிலிருந்து தப்பிக்கவே, கூலிப்படையினரை தயார் செய்து, விஜயகுமாரை கொலை செய்ததாகவும், ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தில், தானே நேரில் சென்று, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கூலிப்படையினரை ஏற்பாடு செய்ததாக, போலீசார் கூறுகின்றனர். ஆனால், கூலிப்படையினரை ஏற்பாடு செய்ய, ஈஸ்வரிக்கு சிலர் உதவியுள்ளனர்.அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, ஈஸ்வரிக்கும், கூலிப்படையினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர்களை, மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொலை வழக்கில் சிக்கியுள்ள ஈஸ்வரி, 10ம் வகுப்பில், 498 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் இரண்டாமிடமும், பிளஸ் 2வில், 1,183 மதிப்பெண்ணும் பெற்று, படிப்பில் சிறந்து விளங்கிஉள்ளார். தற்போது, சென்னையில், சி.ஏ., படித்து வரும் ஈஸ்வரிக்கு தாய் இல்லை. தந்தையும், தங்கையும் உள்ளனர்.கைது செய்யப்பட்ட நால்வரும், நேற்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

NEWS TODAY 28.01.2026