Saturday, July 14, 2018

நீட் உயர் நீதிமன்ற உத்தரவு; மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான இடங்கள் ஒதுக்கிடுக: முதல்வர் பழனிசாமிக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்

Published : 13 Jul 2018 19:44 IST
சென்னை



முதல்வர் பழனிசாமி, டி.கே.ரங்கராஜன் எம்.பி. | கோப்புப் படம்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்கள் பாதிக்கப்படாமலிருக்க, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், ''மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் (NEET) நுழைவுத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் வழக்கு தொடுத்தேன்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டுமென்று உத்திரவிட்டதுடன், கலந்தாய்வை நிறுத்திவைத்து புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டனர். இதனால் தமிழில் நீட் தேர்வெழுதிய 24,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை தமிழக அரசின் கல்வி அமைச்சரும் வரவேற்றுள்ளார் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படுகிற போது தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், ஏற்கெனவே கலந்தாய்வின் மூலம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமலிருக்க, தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்து அவர்களின் அனுமதியையும் பெற வேண்டும். ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்ற மாணவ மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.01.2026