Sunday, July 29, 2018

ராகயாத்திரை 12: மனத்தில் பூத்த ராக மலர்

Published : 05 Jul 2018 14:56 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



‘இது நம்ம பூமி’ படத்தில் கார்த்திக், குஷ்பு

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். சிவகுமார் நிஜமாகவே நல்ல ஓவியர். அவர் சில படங்களில் ஓவியராக நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த ஒரு படம்தான் ‘மனிதனின் மறுபக்கம்’ (1986). அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு அருமையான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்திருக்கிறது. ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன’ என்ற அந்தப் பாடலை ஜானகியின் குரலில் கல்லுக்குள்ளும் ஈரம் கசிய வைக்கும் வகையில் அமைத்திருப்பார் இசைஞானி.


சரியான பதில்சொன்ன பலரில் முதல்வர்களான ஸ்ரீரங்கம் ஹிமயா, அய்யன்கோட்டையன் முத்து ஆகியோருக்குப் பாராட்டுகள்.

மென்மையான காதல் பாடல்களுக்கு இந்த ராகத்தை ராஜா பயன்படுத்தியிருப்பார். ‘டிசம்பர் பூக்கள்’ (1986) என்றொரு திரைப்படம். இந்த முறை ஓவியராக நடித்தது மோகன். அந்தப் படத்தில் ‘மாலைகள் இடம் மாறுது... மாறுது’ என்ற இனிமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். யேசுதாஸ் சித்ரா குரல்களில் ஆரம்ப கோரஸ், வயலின், குழல், சிதார் என வழக்கமான பக்கவாத்தியக் கச்சேரி நடத்தியிருப்பார். பாடல் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. யாரும் முகரவில்லை என்றாலும் காட்டு மலர் மணம் குறையுமா? அதுபோன்றதே இந்தப் பாடலும்.

நாட்டுப்புற மெட்டில்...

காதல் என்றால் நடிகர் முரளி இல்லாமலா? திரைப்படம் முடிந்த பிறகும் காதலைச் சொல்லாமல் தயங்கும் கதாபாத்திரங்களுக்காக வார்க்கப்பட்டவர்போல பல படங்களில் நடித்திருப்பார். அவர் அறிமுகமான ‘பூவிலங்கு’ (1984) படத்தில் இந்த ராகத்தில் இடம்பெற்றது அந்த அட்டகாசமான பாடல். இளையராஜாவே பாடியுள்ள ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடலே அது. குழல் இசையோடு தொடங்கும் அந்தப் பாடலில் நாட்டுப்புற மெட்டில் இந்த ராகத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

அதே போல் ‘இது நம்ம பூமி’ (1992) என்ற திரைப்படம். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனவை. அதில் ஒரு மென்மையான பாடல் ‘ஒரு போக்கிரி ராத்திரி’. மனோ சுவர்ணலதாவின் குரல்களில் ஒலிக்கும். அதுவும் பிருந்தாவன சாரங்காதான். விறுவிறுப்பான இரண்டு பாடல்களை இந்த ராகத்தில் சொல்லலாம். ஒன்று ‘பிரியங்கா’ (1994) என்ற திரைப்படத்தில் வந்தது.

இந்தியில் சக்கை போடு போட்ட ‘தாமினி’ என்ற இந்திப் படத்தின் மறுஆக்கம் இப்படம். அதில் ஓர் அருமையான பாடல் அமைத்திருப்பார் ராஜா. ‘இந்த ஜில்லா முழுக்க நல்லாத் தெரியும்’ என்னும் அந்தப் பாடலில் உற்சாக ஊர்வலம் நடத்திய குரல்கள் மனோ, சித்ராவினுடையவை. இன்னொரு பாடல் அதே மனோ, சுனந்தாவுடன் பாடியது. ‘மெதுவாத் தந்தியடிச்சானே’ என்ற பாடல். படம் ‘தாலாட்டு’ (1993). சிவரஞ்சனியுடன் இணைந்து அரவிந்த்சாமி கஷ்டப்பட்டு நடனமெல்லாம் ஆடியிருப்பார். பாடல் அருமையான பிருந்தாவன சாரங்கா.

ராஜா – சுந்தர்ராஜன் கூட்டணியில்..

இன்னொரு அருமையான பாடல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வந்த ‘குங்குமச்சிமிழ்’ (1985) என்ற படத்தில் வந்த ‘பூங்காற்றே தீண்டாதே’ என்ற பாடல்தான். சுந்தர்ராஜன் என்றால் இசையூற்றுதான் சுரந்து வழியுமே இசைஞானிக்கு. ஜானகியின் குரலில் ‘அடி பெண்ணே’ (முள்ளும் மலரும்) போல் அமைந்த ஒரு பாடல் இது.

ஸ்ரீதரின் இறுதிக் காலப் படங்களில் ஒன்று ‘தந்துவிட்டேன் என்னை’ (1991). விக்ரம் சேதுவாக உருவெடுக்கும் முன் சாதுவாக நடித்த திரைப்படம். அதில் ஒரு மென்மையான கிராமியச் சாயலுடன் கூடிய மெல்லிசைப் பாடல் ‘முத்தம்மா முத்து முத்து’ என்ற பாடல். அருண்மொழி, உமாரமணன் குரல்களில் வந்த ஒரு இனிய பிருந்தாவன சாரங்கா.

இசைஞானியின் இசையில் இந்த ராகத்தில் சிறப்பாக அமைத்த பல பாடல்களில் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் (1989)’ படத்தில் வரும் இந்தப் பாடலும் ஒன்று. பி.சுசீலாவின் திறமைக்குக் களம் தந்த பாடல்களில் (உதா- பூப்பூக்கும் மாதம் தைமாதம், ஆசையில பாத்தி கட்டி) இதற்கும் இடமுண்டு. ‘மனதில் ஒரே ஒரு பூப் பூத்தது’ என்ற பாடல் அது. ‘குழலினிது யாழினிது என்பார் சுசீலா குரலினிமை அறியாதவர்’ எனக் குறளே எழுதும் அளவுக்கு இனிமையான பாடல். ‘குழலூதும் கண்ணனின் வண்ணமே நீ’ எனத் தொடங்கும் சரணம் இந்த ராகத்தின் சாரம்.

பின்னணி இசையிலும் ராகம்

நாம் திரைப்படப் பாடல்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். பின்னணி இசையைப் பற்றி ஆராய வேண்டுமானால் அதற்கு நாட்களும் பத்தாது; நாளிதழ் தாள்களும் பத்தாது. இளையராஜா ஒவ்வொரு படத்திலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தை வேறு வேறு உணர்வுகளுக்குப் பயன்படுத்தியிருப்பார். உதாரணம், ‘சிந்து பைரவி’ படத்தில் சிந்து பைரவி ராகம் படம் முழுவதும் இழையோடும்.

‘சின்னக் கவுண்டர்’ திரைப்படத்தில் சுகன்யா மொய்விருந்து வைக்கும் இடத்தில் நெகிழ்ச்சியான உணர்வுகளுக்குப் பிருந்தாவன சாரங்கா ராகத்தைத் தந்திகளால் (சிதார்) இழை இழையாக நெய்திருப்பார். முதலில் பின்னணி இசை இல்லாமல் மியூட் மோடில் வைத்துக் கேளுங்கள். பின்னர் இசையுடன் கேளுங்கள். பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.

பிற இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களில் இரண்டு பாடல்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ‘அன்புள்ள அப்பா’ (1987) என்ற திரைப்படம். அதில் ஓர் அருமையான பிருந்தாவன சாரங்கா – ‘மரகதவல்லிக்கு மணக்கோலம்’ என்ற பாடல். யேசுதாஸின் குரலில் , ஷெனாய் போன்ற இசைக்கருவிகளுடன் பிரமாதப் படுத்தியிருப்பார்கள் சங்கர்-கணேஷ் இருவரும்.

இந்த வாரக் கேள்வியோடு முடிப்போம் . மயிலிடம் தோகையைக் கேட்ட பாடல் எது? படம் எது? கண்டுபிடிக்க ஒரு குறிப்பு: ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் பிரபலப் பாடல்.

தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...