Saturday, July 28, 2018

வங்கியில் 1,800 ரூபாய், ஏ.டி.எம் கார்டு இருந்தும் இறந்த சிறுமிகள்... தலைநகரில் பட்டினிச்சாவு!

எம்.குமரேசன்

டெல்லியில் பட்டினியால் மரணமடைந்த மூன்று சிறுமிகளில் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ.1800 இருந்துள்ளது.



பட்டினியால் இறப்பது என்பது, கொடுமையிலும் கொடுமை. இந்தியாவில் அதுவும் தலைநகர் டெல்லியிலேயே இந்த வேதனைச் சம்பவம் நிகழ்ந்து, கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு, பெண் ஒருவர் நேற்று மூன்று சிறுமிகளைக் கொண்டுவந்தார். டாக்டர்கள் சிறுமிகளைப் பரிசோதித்தபோது, மூன்று பேரும் இறந்துபோனது தெரியவந்தது. மான்ஷி (வயது 8), ஷிகா (வயது 4), பெரா (வயது 2) ஆகியோர்தாம் பட்டினிக்குப் பலியான சிறுமிகள்.



சிறுமிகளின் தந்தை பெயர் மங்கள்சிங்; தாயின் பெயர் பீனா. மங்கள்சிங் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. டெல்லி மண்டவாலி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கார் நிறுத்தும் அளவே உள்ள சிறிய இடத்தில் வசித்துவந்துள்ளனர். வீட்டின் சொந்தக்காரர் பிரதீப், நேற்று மங்கள்சிங் குடும்பத்தினர் இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, சிறுமிகள் சுயநினைவற்றுக் கிடப்பதைப் பார்த்தார். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட, பட்டினிச்சாவு என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. கிட்டத்தட்ட ஏழு நாளாக சிறுமிகள் எந்த உணவையும் சாப்பிடவில்லை எனச் சொல்லப்படுகிறது. உடற்கூறு ஆய்வில் சிறுமிகளின் வயிற்றில் உணவுப்பொருள் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. பலியான சிறுமிகள், பல ஆண்டுகாலமாக ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்ததாகவும் உடற்கூறு ஆய்வு குறிப்பிடுகிறது.

சில நாள்களுக்கு முன் மங்கள்சிங்கின் ரிக்‌ஷா காணாமல்போய்விட்டது. இதனால் கிடைத்த அரைவயிற்றுக் கஞ்சியும் மங்கள்சிங் குடும்பத்தாருக்குக் கிடைக்கவில்லை. குடிப்பழக்கமும் மங்கள்சிங்குக்கு இருந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ரிக்‌ஷாவைக் கண்டுபிடிப்பதாகக் கூறிவிட்டு மங்கள்சிங் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். `அப்பா ஏதாவது வாங்கி வருவார்' என்று சிறுமிகள் வெறும் வயிற்றுடன் காத்திருந்தனர். கடைசி வரை அப்பாவும் வரவில்லை; உணவும் கிடைக்கவில்லை. காய்ந்த வயிற்றுடன் சிறுமிகள் சுயநினைவு இழந்தனர்.

வீட்டு உரிமையாளர் பிரதீப் ``அருகில் உள்ள சேரிப் பகுதியில் இவர்கள் வசித்தனர். டெல்லியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இவர்களின் குடிசைக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. என் நண்பர் ஒருவர்தான் வேறு இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக இவர்களை இங்கே தங்கவைத்தார். இப்படிப்பட்ட சூழலில் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. பட்டினியால் இறப்பது கொடுமையிலும் கொடுமை. தெரிந்திருந்தால் நாங்கள் உணவு அளித்திருப்போமே!'' என்று வேதனைப்படுகிறார்.

குழந்தைகள் இறந்துபோனது தெரியாமல் மங்கள்சிங் இன்னும் காணாமல்போன ரிக்‌ஷாவையோ அல்லது புது வேலையையோ தேடி அலைந்துகொண்டிருக்கிறார். டெல்லி போலீஸாரும் அவரைத் தேடிவருகின்றனர்.

சிறுமிகளின் தாய் பீனாவிடம், ``குழந்தைகள் எப்படி இறந்தனர்?'' என்று போலீஸார் கேட்டபோது, ``முதலில் எனக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்'' என்று போலீஸாரிடம் அவர் திருப்பிக் கேட்டுள்ளார். 'பட்டினிக் கொடுமை, அவர்களை அந்தப் பாடுபடுத்தியிருக்கிறது' என்பதைக் கண்டு போலீஸாரே கண்கலங்கிவிட்டனர்.



இதில் இன்னோரு சோகம் என்னவென்றால், 8 வயதுச் சிறுமி மான்ஷியின் வங்கிக்கணக்கில் 1,800 ரூபாய் பணம் இருந்ததுதான். மான்ஷி படித்துவந்த அரசுப் பள்ளியிலிருந்து சிறுமியின் பெயரில் இந்த வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் கார்டும் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு, பள்ளிச் சிறார்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள், நோட்டுகள், யூனிஃபார்ம்கள் வாங்குவதற்கு அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்கி பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும். இந்த விவரம்கூட சிறுமிக்குத் தெரிந்திருக்கவில்லை. பாவம்... பட்டினி அவர்களை அப்படிப் படுத்தியெடுத்திருக்கிறது.

மாண்டவலி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்தான் மான்ஷி 3-ம் வகுப்பு படித்துள்ளார். பள்ளியில் சிறுமிகளுக்கு மதிய உணவும் இலவசமாகவே வழங்கப்பட்டது. ஆனால், மான்ஷி ஜூலை மாதத்தில் இரு நாள்கள்தாம் பள்ளிக்கு வந்திருக்கிறார். கடைசியாக ஜூலை 10-ம் தேதி பள்ளிக்கு வந்த மான்ஷி, அதற்குப் பிறகு வரவே இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு மான்ஷி இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளார். வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்தே வருவார், நடந்தே செல்வார். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சிறுமி நடந்து செல்வதைப் பார்த்த ஆசிரியர்கள், அது பற்றிக் கேட்டதற்கு ``என்னை அழைத்துச் செல்ல, வீட்டில் யாரும் கிடையாது'' என்று மான்ஷி பதில் அளித்தாராம்.

சிறுமிகளின் பட்டினிச்சாவு, டெல்லியை உலுக்கியெடுத்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிஸோடியா, இந்தப் பகுதி எம்.எல்.ஏ. ``சிறுமிகளின் பட்டினிச்சாவு, என்னை நொந்துபோகச் செய்துவிட்டது. மொத்த அரசு இயந்திரமும் செயலிழந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு ரேஷேன் கார்டு ஏன் வழங்கப்படவில்லை எனத் தெரியவில்லை. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார் மணீஷ் சிஸோடியா.

இந்தப் பட்டினிச்சாவு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஓர் அவமானம்!

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...