Tuesday, July 31, 2018

‘இமெயிலைக்’ கண்டுபிடித்த தமிழர் மீது அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது

Published : 30 Jul 2018 16:40 IST

மசாசூட்ஸ்,

 

மசாசூட்ஸ் டவுன்ஹால் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சிவா அய்யாதுரை - படம் உதவி: ட்விட்டர்

இமெயிலைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவரும், தமிழருமான சிவா அய்யாதுரை மீது இனிவெறியுடன் அமெரிக்கர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அமெரிக்கவாழ் இந்தியரான சிவா அய்யாதுரையின் பூர்வீகம் தமிழகத்தில் சிவகாசியாகும். சிறு வயதில் இருந்த அமெரிக்காவில் அய்யாதுரை வளர்ந்து வருகிறார். அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவராக அய்யாதுரை விளங்கி வருகிறார்.

நாம் பயன்படுத்தும் இமெயிலை கண்டுபிடித்து, உலகிற்கு அறிமுகம் செய்தவர் அய்யாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மசாசூட்ஸ் மாநிலத்தில் செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் சிவா அய்யாதுரை சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இந்த மாநிலத்தில் செனட் உறுப்பினர் எலிசபெத் வாரணை எதிர்த்து அய்யத்துரை போட்டியிடுகிறார்.

இதற்காக அய்யாத்துரை தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அய்யாதுரை சாலையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

மசாசூட்ஸ் நகரில் உள்ள கிரேட் பாரிங்டன் பகுதியில் உள்ள டவுன்ஹால் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அய்யாதுரை ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அங்கு வந்த எலிசபெத் வாரணின் ஆதரவாளர் ஒருவர், அய்யாத்துரையின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால், அந்த நபரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அய்யாத்துரை தொடர்ந்து ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தார்.

இனவெறி கூடாது, யாருடனும் இனவெறியுடன் நடக்கக்கூடாது என்று அய்யாத்துரை பேசினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தநபர் அய்யாத்துரையை ஒலிபெருக்கியோடு சேர்த்து முகக்தில் குத்தினார்.



சிவா அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்டகாட்சி

இதில் அய்யாத்துரையின் முகத்தில் ஒலிபெருக்கி பட்டு, பல், உதடுபகுதி கிழிந்து ரத்தம் வடிந்தது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த அய்யாதுரையின் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்தனர்.

இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த போலீஸார் விரைந்துவந்து அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் பால் சாபோலா எனத் தெரியவந்தது.

இந்த சம்பவத்தை அய்யாதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.

இணையத்தைக் கலக்கும் ஏழு மாத ஜப்பான் குழந்தை: என்ன காரணம் தெரியுமா?

By ANI | Published on : 30th July 2018 04:49 PM |



டோக்யோ: ஜப்பானில் ஏழு மாத குழந்தை ஒன்று தனது அழகான தலை முடியாலும், முகபாவங்களாலும் இணையத்தில் 'சூப்பர் ஸ்டாராக' உருவெடுத்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஏழு மாத பெண் குழந்தை சாங்கோ. கொழு கொழு கன்னமும், பெரிய வட்ட கண்களும் என்று உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடன் இருக்கும் இவளது சிறப்பம்சம் என்றால் அவளது அழகு கொஞ்சும் அடர்த்தியான தலைமுடிதான். இந்நிலையில் இவள் பெயரில் கடந்த மே மாதம் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் கணக்குத் துவங்கப்பட்டது.

அதில் இருந்து இவளது பதிவுகள் ஓவ்வொன்றும் இன்ஸ்ட்டாகிராமில் மிகவும் பிரபலம் ஆகி விட்டன. இதுவரை வெறும் 47 பதிவுகள் மட்டுமே இவளது கணக்கிலிருந்து பதியப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 10 ஆயிரம் லைக்குகளைப் பெறுகின்றன. இதுவரை நடக்கவோ, பேசவோ செய்ய்யாத இவளை இன்ஸ்ட்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது 1.5 லட்சத்தை எட்டி விட்டது.

ஒவ்வொரு பதிவிலும் வித விதமான முக பாவங்களுடன் , மாறுபட்ட தலையலங்காரத்துடன் இணைய உலகின் சூப்பர் ஸ்டாராகவே சாங்கோ வலம் வருகிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது எனலாம்.
மருத்துவப் படிப்பைக் கைவிட்டு பி.இ. படிப்பில் சேர்ந்த 3 மாணவர்கள்

By DIN | Published on : 31st July 2018 02:26 AM

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு முதல் சுற்று முடிவில் மூன்று மாணவர்கள் தங்களுடைய மருத்துவப் படிப்பு இடங்களை ஒப்படைத்து விட்டு, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த புதன்கிழமை தொடங்கியது. 5 சுற்றுகளாக இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பி.இ. முதல் சுற்று மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இரண்டாம் சுற்றில் 20,000 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதன்கிழமை (ஆக.1) மாலை 5 மணி வரை தங்கள் விருப்ப இடங்களை ஆன்-லைனில் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
முதல் சுற்றில் 6,768 பேர் சேர்க்கை: கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த 7,303 பேரில் 7,136 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 6,768 பேருக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்லூரி சேர்க்கைக் கடிதத்தை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.

மருத்துவப் படிப்பை கைவிட்ட 3 பேர்: மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள், அதைக் கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பினால், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்து தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த பிறகு ஒரு நாள் உள்ள கால அவகாசத்துக்குள் ஏதாவது ஒரு உதவி மையத்தில் தங்களுடைய எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு உத்தரவை ஒப்படைத்துவிடவேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

அந்த வகையில், முதல் சுற்று பி.இ. கலந்தாய்வு முடிவில் 3 மாணவர்கள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பி.இ. இடங்களைத் தேர்வு செய்து இறுதி ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் வழக்கு விசாரணையை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தர
வு

By DIN | Published on : 31st July 2018 01:14 AM |



பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்ததுடன், குற்றம்சாட்டப்பட்டோர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள், பிஎஸ்என்எல் பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கௌதமன், சன் டி.வி. ஊழியர் கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை 14 -ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 7 பேரும் குற்றம் இழைத்தவர்களாகவே கருத முடிகிறது. எனவே, 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர். பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, விகாஸ் சிங், ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் ஆஜராகி, 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றனர்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நாங்கள் தலையிட்டால் விசாரணை பாதிக்க நேரிடும். எனவே, தலையிடுவதை தவிர்க்கிறோம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி முறையிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், பதிவு செய்யப்பட்டுள்ள விசாரணை முடிவுகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
மருத்துவ தேர்வு விடைத்தாளுக்கு மறுமதிப்பீடு இல்லை: ஐகோர்ட்

Added : ஜூலை 30, 2018 23:32

சென்னை : 'மருத்துவ தேர்வு விடைத்தாளுக்கு, மறு மதிப்பீடு கோர, மாணவிக்கு உரிமையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை தேர்வை எழுதிக் கொள்ள, மாணவிக்கு, அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை, சேலையூரில், பாரத் நிகர்நிலை மருத்துவ பல்கலை உள்ளது. மருத்துவப் படிப்பில், சோபிகா என்ற மாணவி சேர்ந்தார். இறுதியாண்டு தேர்வில், சில பாடங்களின் விடைத்தாள்களை வழங்கவும், அவற்றை மறு மதிப்பீடு செய்யவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'பல்கலைக்கு எதிரான போராட்டத்துக்கு, என் தாய் தலைமை வகித்தார். அதனால், நான் எழுதிய தேர்வில், மதிப்பெண் வழங்காமல், தேர்ச்சி பெறாமல் ஆக்கி விட்டனர். 'எனவே, விடைத்தாள்களை வழங்க வேண்டும். மறு மதிப்பீடு செய்தால், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன்' என, கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, பல்கலையின் துணை வேந்தர், டாக்டர் கனகசபை, நீதிமன்றத்தில் ஆஜரானார். பாரத் நிகர்நிலை பல்கலை தரப்பில், 'மாணவர்களுக்கு எதிராக, விரோதம் காட்ட வேண்டிய தேவையில்லை. மறு மதிப்பீட்டுக்கு இடமில்லை' என, கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: பல்கலை விதிகளின்படி, விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டுக்கு வழி இல்லை; மாணவர்களிடம் விடைத்தாள்களை வழங்கவும், வழி இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, விடைத்தாள்களை வழங்கினாலும் கூட, விதிகளின்படி மறு மதிப்பீடு செய்ய முடியாது. அதனால், இந்த சலுகையை பெற, மனுதாரருக்கு உரிமை இல்லை. துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், கடைசி தேதி முடிந்து விட்டதாகவும், பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துணை தேர்வு எழுத தயார் என்றால், நீதிமன்றத்தில் இருக்கும் துணை வேந்தரிடம், விண்ணப்பத்தை ஏற்கும்படி கேட்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, துணை வேந்தரும் சம்மதம் தெரிவித்தார்.எனவே, இன்றைக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும்பட்சத்தில், உடனே ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். ஆக., ௧ல் துவங்கும் தேர்வை எழுத, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு பஸ்கள் உடைப்பு; தி.மு.க.,வினர் கைது : கருணாநிதி உடல்நிலை குறித்த தகவலால் ஆவேசம்

Added : ஜூலை 31, 2018 01:12



சேலம்: சேலத்தில், மூன்று அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்த, தி.மு.க.,வினர், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில், பின்னடைவு ஏற்பட்டதாக, நேற்று முன்தினம் இரவு தகவல்கள் வெளியாகின.

தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.நேற்று முன்தினம் நள்ளிரவு, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின், புதிய குளிர்சாதன பஸ்சின் கண்ணாடியை, உடையாப்பட்டி பை - பாசில், சிலர் கல் வீசி உடைத்தனர்.

கல் வீச்சு : தொடர்ந்து, கோவையில் இருந்து சேலம் வந்த, விரைவு பஸ் கண்ணாடியை, அதே கும்பல் கல் வீசி தாக்கியது.மேலும், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த, அரசு டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை, மர்ம கும்பல் கல்வீசி உடைத்தது. பஸ் டிரைவர், போலீசில் புகார் அளித்தார். அம்மா பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, 22 - 26 வயதுடைய, நால்வரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும், தி.மு.க.,உறுப்பினர்கள். இவர்களுக்கு தலைமையேற்று, பஸ்கள் மீது கல் வீச உத்தரவிட்ட, தி.மு.க., பிரமுகர் பிரகாஷ், 30, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில், அரசு பஸ்கள் மீது கல் வீச்சு நடந்ததில், கண்ணாடிகள் உடைந்தன.

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில், மயிலாடு துறை சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது, சிலர் கல் வீசியதில், முன்பக்க கண்ணாடி உடைந்தது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் வந்த அரசு பஸ், கீழவாசல் அருகே உடைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஐந்து பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

சாலை மறியல் : பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த, தி.மு.க., தொண்டர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலுார் போலீசார் பேச்சு நடத்தி, 'கருணாநிதி நலமாக உள்ளார்' என தெரிவித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.கருணாநிதி உடல் நிலை குறித்து, நேற்று முன்தினம் இரவு பரவிய வதந்தியை தொடர்ந்து, அரசு பஸ்கள் படிப்படியாக டிப்போக்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.அப்போது, பெரம்பலுாரில் இருந்து திருச்சி சென்ற ஒரு அரசு பஸ், டிப்போவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு பஸ் மீது, தி.மு.க.,வினர் கல்வீசி தாக்கினர். இதில், இரண்டு பஸ்களின் கண்ணாடி உடைந்தது.
சுங்கச்சாவடியில் இலவசம் : கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற தகவலை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, தமிழகம் முழுவதும் இருந்து, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னைக்கு கிளம்பினர்.

இவர்கள், கார் மற்றும் வேன்களில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக, சென்னைக்கு சென்றனர். இவ்வாறு செல்லும் கட்சியினரை நிறுத்தி, கட்டணம் வசூலித்தால், பிரச்னை ஏற்படும் என்பதால், உளுந்துார்பேட்டை டோல்கேட் நிர்வாகம், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, டோல்கேட்டில் உள்ள, 12 கட்டண வசூல் மையங்களிலும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியது. இதனால், கட்டணமின்றி வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.நேற்று காலை, 6:45 மணி முதல், மீண்டும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க துவங்கினர். உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருணாநிதி குறித்து அவதூறு : துவங்கியது கைது நடவடிக்கை 

31.07.2018

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி குறித்து, சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்புவோரை, கைது செய்யும் நடவடிக்கையை, போலீசார் துவக்கி உள்ளனர்.



உடல் நலக் குறைவு காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைய வேண்டி, தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில், கருத்துக்களை

பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், கருணாநிதி ஆட்சியில் நடந்த சாதனைகளையும் பட்டியலிடுகின்றனர்.

இதற்கு, நாம் தமிழர் கட்சி, பா.ஜ., கட்சி உறுப்பினர்கள், எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கருணாநிதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என, சமூக வலைதளங்களில், மோதல் வலுத்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கருணாநிதி குறித்து, சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்பியவர்களை, போலீசார் கைது செய்ய துவங்கி உள்ளனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, பிச்சனுார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன், 23. நாம் தமிழர் கட்சி, நகர இளைஞர் பாசறை அமைப்பாளராக உள்ளார்.

இவர், இரண்டு நாட்களாக, கருணாநிதிக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். எனவே, 'அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குடியாத்தம் நகர தி.மு.க., துணைத் தலைவர், ஞானப்பிரகாசம், 45, போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்தனர்.

NEWS TODAY 31.01.2026