Saturday, August 11, 2018

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத ‘பேய்’ மழை; 26 பேர் பலி- சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை

Published : 10 Aug 2018 10:46 IST

  திருவனந்தபுரம்



கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 


கேரளாவில் நீரில் மூழ்கியுள்ள வீடுகள்


இதில் இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.



பாலக்காட்டில் வீடுகளில் நீர் சூழ்ந்ததால் உள்ளே சிக்கியவர்களை தூக்கி வரும் மீட்பு குழுவினர்

மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள போதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இடுக்கி அணை

இதுபோலவே முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டால் அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் அங்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேண்டிய உதவிகள் செய்வதாகக் கூறியுள்ளார். நிலைமையைக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அப்போன்ஸ் கண்ணன்தானம் கூறுகையில் ‘‘கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ எனக் கூறினார்.


வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகள்



பாலக்காடு மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடும் பாரதப் புழா ஆறு - படம்: ஏஎன்ஐ

இளைஞர்களிடையே மாற்றம்


By வை. இராமச்சந்திரன் | Published on : 10th August 2018 11:00 AM



இளைஞர்கள் என்றாலே நாள் முழுவதும் முகநூல், கட்செவி அஞ்சலில் மூழ்கிக் கிடப்பவர்கள், சினிமா நடிகர்கள் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்பவர்கள், திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்காவது இருக்குமானால், தயவுசெய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான இன்றைய இளைஞர்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட சிலரை ரோல் மாடலாக வைத்து, சமூகப் பணியில் அக்கறை செலுத்துகின்றனர். வாரத்தில் ஆறு நாள் சொந்தப் பணி. ஒரு நாள் சமூகப் பணி என கருதி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்து வருகின்றனர்.

அதோடு இப்பணி, தங்களோடு நின்றுவிடக் கூடாது எனக் கருதி, வளர்ந்து வரும் மாணவர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சமூகத்தில், இளைஞர்களிடையே மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

முன்பெல்லாம் ரத்த தானம் என்றாலே பலரும் ஓடி ஒளிவார்கள். ஆனால், தற்போது ரத்த தானம், உடல் தானம் போன்ற விழிப்புணர்வுகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. அதோடு இலவச கண் சிகிச்சை முகாம், ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவி புரிதல், டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் பணிகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, சமூக நலன் கொண்ட இளைஞர்களை திரட்டி, சமூகப் பணிகளை செய்கின்றனர். இப்பணி திறம்பட நடைபெறவும், தொடரவும் வெளியூரில் பணியில் இருக்கும் அந்தந்த ஊர் இளைஞர்கள் பொருளாதார உதவிகளை செய்து ஊக்கப்படுத்துகின்றனர்.
மேலும், குளங்களை தூர்வாருதல், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகளில் சுகாதாரம் பேணுதல், வழிபாட்டுத் தலங்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிகளின் தேவைக்கு ஏற்ப இளைஞர்கள் பணி செய்வதை சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் காண முடிகிறது. குறிப்பாக மரக்கன்று வைத்து பராமரிக்கும் பணி, குளத்துக் கரைகளில் பனங்கொட்டைகள் முளைக்க வைத்தல் போன்ற பணிகளை, ஏதோ கடமைக்கு என செய்யாமல், ஆத்மார்த்தமாக இன்றைய இளைஞர்கள் செய்கின்றனர்.

அதில் சிறு உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் பல்வேறு தொழில்கள் புரியும் சுமார் 20 இளைஞர்கள் இணைந்து, பசுமை இயக்கம்' எனும் பெயரில், கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மரக்கன்று வைத்து பராமரித்தலை முதன்மைப் பணியாக மேற்கொண்டாலும், நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் துப்புரவுப் பணி, நகர் பகுதியில் டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சலை தடுக்கும் வகையில் அனைத்து வார்டுகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரப் பணி உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இவர்களின் பணியிலேயே மிகவும் உச்சமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நீர் நிலைகளில் துப்புரவுப் பணி, தற்போது நடைபெறும் திருவிழாவையொட்டி பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வும், தவிர்க்கமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை, பயன்படுத்தியபின் வனத்தில் வீசாமல் இருக்க குப்பைத் தொட்டிகள் உருவாக்கியும் பணி செய்தது பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது.

இதே போன்று, அருகே உள்ள குறிப்பன் குளம் என்னும் கிராமத்தில், சாலையோரம், குளத்துக் கரையோரம் என ஊரைச் சுற்றிலும், அப்பகுதியைச் சேர்ந்த இளந்தளிர்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் 610 மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 35 வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், நாம் நேரில் சென்று பார்க்கும்போது, நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் வருகிறார்கள் என்றால், 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். கிரிக்கெட் மட்டைகளை தூக்கிச் செல்வதை தவிர்த்து இப்பணியில் அவர்கள் பங்கேற்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம் பணியைத் தொடங்கி, பிற்பகல் 2.30 மணி வரை பணியை தொடருகின்றனர்.
தற்போது ஆலங்குச்சிகளை சேகரித்து, நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வரும் இந்த அமைப்பினர், ஆலங்குளம் பகுதியில் நாற்கரச் சாலையால் மரங்கள் வெட்டப்படும் பகுதிகளில், பின்னாளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு ஏற்படும் செலவினங்களுக்கு வாரந்தோறும் யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அப்பகுதியில் பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடும் சிலர் இவர்களின் ஒரு நாள் பணிக்கான செலவை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதே போன்று, சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருவது, சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள் முழுமையாக அகற்றப்படும் பட்சத்தில், அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் எழுந்து, குழுவாக சேர்ந்து இப்பணிகளை மேற்கொண்டால், இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தமிழக சாலையோரம் முழுதும் பசுமையாகிவிடும்.

இக்குழுக்களை புதிதாக உருவாக்குதல் கடினம் எனக் கருதினால், ஒவ்வொரு ஊரிலும் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக் குழுக்கள் உள்ளன. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் நபர்கள் கிடைத்து விட்டால் போதும், இந்த பசுமைத் திட்டம் மிக எளிதாக அமைந்துவிடும்.
இந்த இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் ஒருங்கிணைக்க, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் வெற்றி காணலாம்.

ஏன் நஷ்டமடைந்தது ஏர் இந்தியா?


By என். முருகன் | Published on : 10th August 2018 01:15 AM

உலகப் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா' நிறுவனம். நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்தைத் தனியார் மயமாக்கிவிடலாம் என்ற கொள்கை முடிவினை எடுத்தது மத்திய அரசு. அதை வாங்க முன்வரும் தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியது. ஆனால், ஏர் இந்தியாவை எந்தவொரு தனியார் அமைப்பும் வாங்க முன்வராதது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஏர் இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எவ்வளவு நஷ்டம் வந்தாலும், தங்களுக்கு வரும் வருமானம் குறையப்போவதில்லை என்ற எண்ணம்தான் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். அந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கத் தாங்கள்தான் காரணம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

நம் நாட்டில், 1950 மற்றும் 1960-ஆம் ஆண்டுகளில் ஏர் இந்தியா', இந்தியன் ஏர்லைன்ஸ்' என்று இரண்டு பிரிவுகளாக இயங்கிய தேசிய விமான நிறுவனம் நம் நாட்டின் பெருமைக்கு உகந்ததாக இருந்தது. உலகின் சிறந்த விமான நிறுவனங்களுக்கு ஈடாக நம் நாட்டின் இரண்டு விமான நிறுவனங்களும் இயங்கின.

ஏர் இந்தியாவில் பணிபுரிந்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் வளைகுடா நாடுகளும் தங்களது விமான நிறுவனங்களை உருவாக்கின. அப்படிப் புகழ் சேர்த்த காலம் போய், இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள், தில்லி, மும்பை போன்ற நம் நாட்டு விமான நிலையங்களில் காத்துக் கிடக்காமல், துபை விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை உருவாகிவிட்டது!

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன்களுக்கும், வியாபாரத் தோல்விக்கும் அடிப்படைக் காரணம், அது சரியாக நிர்வகிக்கப்படாததுதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாக பணிபுரிந்தார். அவர் பிரதமரான பின், கனடாவின், வான்கூவர் நகரில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஏர் இந்தியாவின் ஜெட் விமானத்தில் பயணம் செய்தார். அம்மாநாட்டுக்கு ஜெட் விமானத்தில் வந்த மற்றொருவர் புரூனை நாட்டின் அதிபரான சுல்தான். அன்றிலிருந்து, இந்தியாவின் அரசியல் தலைவர்கள் பலரும் ஏர் இந்தியாவின் ஜெட் விமானங்களில் அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளும் பழக்கம் உருவானது. ஆனால், அந்த பயணங்களுக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களை அரசு செலுத்தாமல் விட்டதால் ஏர் இந்தியா கடன்சுமையை சுமக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

அடுத்ததாக, இந்திய நாட்டின் வான்வெளியில் வெளிநாட்டின் விமானங்கள் தங்கு தடையின்றி செல்லும் கொள்கையை நமது அரசு உருவாக்கியது. இதன் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், இந்த வருவாய்க் குறைவை கணக்கிலெடுக்காமல் தொடர்ந்து ஏராளமான விமானங்கள் வாங்கப்பட்டதால் கடன்கள்அதிகரித்தன. 2006-07-ஆம் ஆண்டில், இந்தியன் ஏர்லைன்ஸ் 40 ஏர் பஸ் எனும் உயர்ரக விமானங்களை வாங்க முடிவெடுத்தது. ஏர் இந்தியா 50 போயிங் விமானங்களை வாங்க முடிவெடுத்தது.

ஆனால், உயர்ரக விமானங்களை இயக்கத் தேவையான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும், தேவையான விமான நிறுத்த இடங்களை உருவாக்கவும் இல்லை. அரசு விமான நிறுவனங்களின் ஆய்வுக் கணக்கீட்டின்படி ஐந்து 777 போயிங் மற்றும் ஐந்து 737 போயிங் விமானங்கள் மூன்று ஆண்டுகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் 84 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த பறக்காத விமானங்களை இயக்க வேண்டும் என்பதற்காக, மிக அதிக சம்பளத்தை வழங்கி 150 வெளிநாட்டு பைலட்டுகளை பணியில் அமர்த்தின, நம் நாட்டின் அரசு விமான நிறுவனங்கள். நல்லவேளையாக, பி-787 ட்ரீம் லைனர்ஸ்' எனும் உயர்ரக விமானங்களை வாங்க உத்தரவிட்டும் அவை ஏர் இந்தியாவிற்கு வரவில்லை. வந்திருந்தால் அவையும் இயங்காமல் அதிக நஷ்டம் உருவாகியிருக்கும். இந்த விமானங்களை வாங்க ஏர் இந்தியா அளித்த முன்தொகைக்கு, குறிப்பிட்ட காலத்தில் விமானங்கள் வழங்கப்படாவிட்டால் முன்பணத்திற்கு வட்டி வசூலிக்கப்படும்' என்ற ஒப்பந்த விதியை ஏற்படுத்தாததால் நஷ்டம் உருவானது. அது போலவே, குறிப்பிட்ட நாளில் விமானங்கள் வழங்கப்படாவிட்டால் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற விதியும் உருவாக்கப்படவில்லை.

விமான நிறுவன அதிகாரிகளின் கவனக் குறைவினால் இந்த விதிமுறைகள் உருவாக்கப்படவில்லையா, அல்லது உயர்விமானத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு சாதகமான வகையில் இந்த விதிமுறைகள் உருவாக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.

2007-ஆம் ஆண்டில் தொடங்கி, 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்தது நமது நாட்டின் ஏர் இந்தியா- இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு அரசு நிறுவனங்களின் இணைப்பு. இதற்கான காரணம் இதுவரை கூறப்படவில்லை. ஒரே மாதிரியான இரண்டு நிறுவனங்களிலும் பணி புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைத்திருக்கலாம். அதாவது, பயணிகளின் பயணச்சீட்டு மற்றும் பைகளை சரிபார்த்து, அவர்களை விமானத்தில் ஏற்ற 20 பேர் வீதம் இரண்டு விமான நிறுவனங்களுக்கு 40 பேர் இருந்தால், இந்த இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டபின், 20 பணியாளர்களே போதும்.
ஆனால், அது நடக்கவில்லை. அதற்குக் காரணம் தொழிலாளர் சங்கங்கள் என்று கூறப்படுகிறது. இன்றும், நமது விமான நிலையங்களில் ஏர் இந்தியா (உள்நாட்டுப் பயணம்) பணியாளர் எனவும், ஏர் இந்தியா (வெளிநாட்டுப் பயணம்) பணியாளர் எனவும் இருப்பதைக் காணலாம்.

இணைப்பின்போது, அரசின் பணம் ரூபாய் 25,000 கோடி, ஏர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இதன் பின்னரும், ஏர் இந்தியாவின் நிகர மதிப்பீடு ரூபாய் 25,000 கோடி என்றும், அதன் கடன்தொகை ரூபாய் 52,000 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது.

1932-ஆம் ஆண்டு டாடா ஏர் மெயில்' என்ற விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே அது குறைந்த லாபம் ஈட்டியது. நம் நாடு சுதந்திரமடைந்த பின், 1952-இல் இந்த விமான நிறுவனம் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏர் இந்தியாவாக மாறியது. அரசு அதிகாரிகள் இந்த நிறுவன விமானங்களில்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது.

மற்ற விமான நிறுவனங்களின் விதிகளின்படி, பயணிப்பவர் 15 கிலோ எடையுள்ள பயணப் பைகளைத்தான் எடுத்துச் செல்லலாம். ஆனால், ஏர் இந்தியா பயணியோ 25 கிலோ பைகளை எடுத்துச் செல்லலாம். பயணக் கட்டணங்களும், மற்ற விமான நிறுவனங்களை விடவும் ஏர் இந்தியாவில் குறைவு. ஏர் இந்தியா விமானங்கள் தரமானவை. இந்த எல்லா அம்சங்களும் இருந்த போதிலும், ஏர் இந்தியாவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இதற்குக் காரணம் சரியான நிர்வாகம் இல்லாமையே. அரசு அதிகாரிகள் அதிகம் பயணிக்கும் விடுமுறை கால பயண சலுகைகள் (எல்.டி.சி) அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் விடுப்பு எடுத்து குறைந்த கட்டணத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தில்லியிலிருந்து அந்தமானுக்கு ஏராளமான அதிகாரிகள் செல்வர். இந்த பயணத்திற்காக பல மாதங்களுக்கு முன்னரே பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்படும்.

இந்த வழித்தடத்தில் தரமான விமானங்களை இயக்கினால் இந்தியன் ஏர்லைன்ஸின் லாபம் அதிகரிக்கும். ஆனால், மிகவும் சிறிய, பழைய விமானங்களே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இவை, டிசம்பர்- ஜனவரி மாதங்களில் அடிக்கும் பலமான சூறைக்காற்று காரணமாக அடிக்கடி ரத்து செய்யப்படும். இதனால், ஏர் இந்தியாவின் மீது பயணிகள் நம்பிக்கை இழக்கின்றனர்.

நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், 2015-ஆம் ஆண்டில் ஏர் இந்தியா தனது அலுவலகக் கட்டடத்தை அதிக வாடகைக்கு விட திட்டமிட்டது. மும்பையின் மத்திய பகுதியான, நரிமண் பாயிண்ட்' எனும் இடத்திலிருந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தின் வாடகை ஒரு சதுர அடிக்கு ரூபாய் 300 என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு தளத்தின் வாடகையும் பல கோடி என கணக்கிடப்பட்டது. நிறைய பேர் அதிக வாடகை கொடுத்து அந்த கட்டடத்தில் அலுவலகங்கள் அமைக்க முன்வந்தனர். ஆனால், அந்த நடவடிக்கைகளை உடனே செய்யாமல் காலம் தாழ்த்தியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஊழியர்களும் அதிகாரிகளும் பணிக்கு வராததால் விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பப்படுவது வழக்கமானது. ஒரு விமானத்திற்கு சராசரியாக 234 பணியாளர்கள் என்ற விகிதத்தில் இயங்குகிறது ஏர் இந்தியா. ஆனால், மற்ற தனியார் விமான நிறுவனங்களில் ஒரு விமானத்திற்கு சராசரியாக 121 பணியாளர்கள்தான் உள்ளனர். ஏர் இந்தியாவின் பணியாளர்களை குறைக்க முடியாது என்பதாலும், அந்த அதிகாரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலைமையில், அந்த நிறுவனத்தின் நஷ்டத்தை சரிசெய்து லாபம் ஈட்ட முடியாது என்பதால், அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க எவரும் முன்வரவில்லை.

அரசினால் தொடங்கப்பட்டு, பின் சரியாக நடத்த முடியாத நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, மிகச்சிறந்த விமான நிறுவனங்களாக இயங்கும் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ்', ஜெர்மனியின் லூஃப்தான்சா', இத்தாலியின் அலிடாலியா' போன்றவை நமது கவனத்தை ஈர்க்கின்றன. நமது நாட்டின் வாக்கு வங்கி அரசியலால் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க முடியவில்லை.

இந்த நிலையில், மிக அதிக தொகை இழப்பீடாகக் கொடுத்து ஊழியர்களையும், அதிகாரிகளையும் பணிவிலகச் செய்து, எல்லா விமானங்களையும், பழைய விமான விலைக்கே விற்பனை செய்துவிட்டு, எல்லா கட்டட சொத்துகளையும் விற்றுவிட்டு, ஏர் இந்தியா' நிறுவனத்தை மூடிவிடுவதே புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
படித்தவன் பாவம் செய்தால்...

By ப. இசக்கி | Published on : 11th August 2018 01:35 AM |
 
இன்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான ஊழல்களிலும், முறைகேடுகளிலும் மெத்தப் படித்த கல்விமான்களின் பங்கு அதிகரித்து வருவது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாது அவமானமாகவும் இருக்கிறது.

ஆட்சியில் ஊழல், நிர்வாகத்தில் ஊழல் என்றிருந்த நிலை மாறி, தற்போது கடவுளைக் கண்டு வழிபடும் கோயில்களில் ஊழல், கல்லாமையை நீக்கும் கல்விக் கூடங்களில் ஊழல் என, நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஊழல் ஊடுருவியிருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

1948-இல், அப்போது இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நம் நாட்டு ராணுவத்துக்கு 200 ஜீப்புகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் வழக்கமான நடைமுறைகளை மீறியது என்றும், அதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் ஊழலாக குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ண மேனன் படித்தவர்தான்.

அதனைத் தொடர்ந்து, 1950-களில் முந்த்ரா' ஊழல், 1980-களில் போபர்ஸ்' ஊழல், இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்த 2ஜி ஊழல், நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என பரபரப்பாக பேசப்பட்ட எல்லா ஊழல்களும் பல ஆயிரம் கோடி ரூபாய் தொடங்கி சில லட்சம் கோடி ரூபாய் வரையிலான ஊழல்களாகும்.
இந்த ஊழல்கள் எல்லாவற்றிலும் முதன்மையாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், அவர்களுடன் ஒரு சில அதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டதுண்டு. எனினும், பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையாகவும், அரசின் சட்ட திட்டங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும் இருந்தனர். சில அதிகாரிகள், ஆட்சியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தாமாகவே அவர்களிடமிருந்து விலகிக் கொண்டதுமுண்டு.

ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. ஊழலுக்கு ஒத்துழைக்கக் கூடியவராக மட்டுமல்லாது, ஊழலுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து தங்களுக்கு கீழே பணி அமர்த்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஆலோசனைகளை சொல்லி ஆட்சியாளர்களின் மனதில் இடம்பிடித்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இவர்கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்கின்றனர்.

நாடு முழுவதும், கடந்த 2017 ஜூன் வரையில் சுமார் 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 16,875 பேர். தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் 18,780 பேர். அரசியல்வாதிகள் 115 பேர். இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் மீது மட்டும் 339 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தானே?
தமிழ்நாட்டிலும் அரசியல்வாதிகளைப் போலவே அரசு அதிகாரிகளும் ஊழல்களில் திளைப்பது அதிகரித்து வருகிறது. தலைமைச் செயலர் முதல் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் வரை ஊழல் புகார்களுக்கு இலக்காகி வருகின்றனர்.

இப்போது ஊழல்வாதிகள் கோயில்களையும் விட்டுவைக்கவில்லை. கோயில் சிலைகள் திருட்டு, சுவாமி சிலைகள் செய்ததில் முறைகேடு, கோயில் நிதியில் ஊழல் என அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முறைகேடுகள் ஓர் ஆரம்பம்தான். இன்னும் ஆழமாக விசாரித்தால் பெரும் பூதம் கிளம்பும்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். முறைகேடு புகார்களுக்கு ஆளாகி இருப்பவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தான்.

கோயில்கள் மட்டுமல்லாது, கல்வித்துறையிலும் குறிப்பாக உயர்கல்வி நிலையங்களான பல்கலைக்கழகங்களின் ஊழல் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான ஊழல் நடந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 2006 முதல் துணைவேந்தர் பதவி என்பது கல்வி, அனுபவம், திறமைக்கு அல்லாது அரசியல், சாதி மற்றும் பண பலம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பட்டியலிடப்படுகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அண்ணா பல்கலைக்கழகம் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. கோவையில் முன்பு இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆர். ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முதல் துணைவேந்தர் இவர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏழு பேர் மீது ஊழல் தடுப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்தோ அல்லது முறைகேடுகள் தொடர்பாகவோ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளனர்.
ஒரு துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தபோது சுமார் ரூ. 20 கோடிக்கு சொத்து ஆவணங்களும், நான்கு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

துணைவேந்தர்கள் மீதான முறைகேடுகள் அனைத்தும் பேராசிரியர் பணி நியமனங்கள், தளவாடச் சாமான் கொள்முதல், உறுப்பு கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல் போன்றவற்றில் நிகழ்ந்தவைகள் ஆகும். இப்போது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்கு ஆளான அனைவருமே படித்தவர்கள்தான்.

நாட்டில் ஊழலை ஒழிக்க 1988-இல் ஊழல் தடுப்புச் சட்டம்' இயற்றப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே முறைகேடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க இந்திய குற்றவியல் சட்டமானது 1860 முதல் நடைமுறையில் உள்ளது.
எனினும், ஊழலை ஒழிக்க முடியவில்லை. எனவே, ஊழலை ஒழிக்க, லஞ்சம் பெறுவோரை மட்டுமல்லாது கொடுப்போரையும் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாவது படித்தவர்கள் செய்யும் பாவம் ஒழியுமா என்று பார்க்கலாம்.
திருப்பதிக்கு தமிழகத்தில் 6 டன் பூமாலை

Added : ஆக 11, 2018 00:49

திருச்செங்கோடு:திருப்பதிக்கு, 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், வரும், 15ல் கும்பாபிஷேகம் நடக்கஉள்ளது.இதற்காக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து, டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், ஏகாதசி உள்ளிட்ட விழாக்களுக்கு திருச்செங்கோட்டில் இருந்து மலர்களை மாலைகளாக தொடுத்து அனுப்பி வருகிறோம்.கும்பாபிஷேகத்துக்கு, சம்பங்கி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட, 6 டன் பூக்களை பயன்படுத்தியுள்ளோம். மேலும், பூஜைக்கு தேவையான பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், பூக்களை மாலைகளாக தொடுத்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
லாலுவின், 'ஜாமின்' நீட்டிப்பு

Added : ஆக 11, 2018 00:01

ராஞ்சி:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமினை, 20ம் தேதி வரை நீட்டித்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 1990ல், ஒருங்கிணைந்த பீஹார் மாநிலத்தில், கால்நடை தீவன கொள்முதலுக்காக, மாவட்ட கருவூலங்களில் முறைகேடாக பணம் பெற்று ஊழல் செய்ததாக, ஆர்.ஜே.டி., தலைவரும், அப்போதைய முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளை, பீஹாரில் இருந்து பிரிந்த ஜார்க்கண்ட் மாநில சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. லாலு மீதான நான்கு வழக்குகளில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.லாலுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சை பெற, அவரது வழக்கறிஞர்கள் ஜாமின் கேட்டு, ராஞ்சி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, மே, 11ல், ஆறு வார ஜாமின் வழங்கப்பட்டது. பின், ஆக., 14 வரை, ஜாமின் நீட்டிக்கப்பட்டது.தற்போது, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, தனியார் மருத்துவமனையில், லாலு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது ஜாமினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும்படி, லாலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த, ராஞ்சி உயர் நீதிமன்ற நீதிபதி, அப்ரேஷ் குமார் சிங், லாலுவின் ஜாமினை 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
'2ஜி' வழக்கு விசாரணை ராஜாவுக்கு அவகாசம்

Added : ஆக 11, 2018 00:00

புதுடில்லி:'2ஜி' ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 17 பேரும் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மத்தியில், காங்., தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர், தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
இதன் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதில், ராஜா, கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமலாக்கத் துறைதொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில், மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில், நீதிபதி நஜ்மி வாஜிரி முன்னிலையில் நடந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய, கனிமொழி, ராஜா உட்பட, ௧௭ பேரும் அவகாசம் கோரினர். இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை, அக்., 9க்கு ஒத்தி வைத்தார்.

NEWS TODAY 28.06.2026