Monday, August 5, 2019

அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

மலையரசு  vikatan

விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, விபத்து நடந்த போது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரது நண்பருமான பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் கே.எம் பஷீர். மலையாள நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் பஷீர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் தன் வேலைகளை முடித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பஷீரின் வாகனம் தூக்கிவீசப்பட்டு அருகிலிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார்.


பஷீர்

பஷீரின் பரிதாப உயிரிழப்பு கேரளாவில் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. அதற்கு காரணம் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன். தன் சொகுசு காரை குடிபோதையில் ஸ்ரீராம் இயக்கியதே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. அவர் காரில் இருந்து இறங்கும்போது குடிபோதையில் இருந்ததை மக்களும் பார்த்துள்ளனர். இந்த விபத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட பஷீரின் குடும்பம் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆனால் பஷீரின் உயிரிழப்பைக் கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் ஸ்ரீராமை காப்பாற்ற முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளதாகக் கூறுகிறது மலையாள ஊடகங்கள்.

விபத்து நடந்த சிறிது நேரம் கழித்து ஸ்ரீராமை விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் தான் காரை ஓட்டவில்லை எனக் கூறிய அவர் பிறகே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு மது அருந்தியதற்கான ரத்தப் பரிசோதனை செய்வதில் போலீஸார் தாமதம் காட்டியுள்ளனர். விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, விபத்து நடந்த போது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரது நண்பருமான பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.


ஸ்ரீராம் வெங்கட்ராமன்

காரின் உரிமையாளரான அந்தப் பெண் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கால தாமதம் செய்துள்ளனர். இதன்பிறகு விவகாரம் பெரிதாகவே ஸ்ரீராம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீராம். இதற்கிடையே, விபத்து குறித்த செய்திகள் வெளியானதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராமை வசைபாடத் தொடங்கினர் மக்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கண்டனங்கள், விமர்சனங்கள் அதிகமாகப் பகிரப்பட்டன.

சமூகப் பணிகள் செய்ய வேண்டிய ஒரு ஐ.ஏஸ் அதிகாரியே குடிபோதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தலாமா என்றெல்லாம் கண்டனங்கள் குவிந்தன. மக்களின் இந்த எதிர்ப்புக்கு அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதைத் தாண்டி மற்ற காரணங்களும் இருக்கின்றன. கொச்சியில் பிறந்த ஸ்ரீராம் ஒரு மருத்துவர். மருத்துவராகத் தேர்ச்சி பெற்றாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ தொழிலை விடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தார். வாத்தியார் பிள்ளை (ஸ்ரீராமின் அப்பா கல்லூரி விரிவுரையாளர்) என்பதாலோ என்னவோ எந்தவித ஸ்பெஷல் கோச்சிங்கும் எடுக்காமல் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.


ஸ்ரீராம்

இரண்டாவது முயற்சிலேயே (2013ம் ஆண்டு) இரண்டாவது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ் ஆகத் தேர்ச்சியும் பெற்றார். துடிப்பு மிக்க வாலிபரான அவர் மத்திய உணவு பாதுகாப்பு துறை பணியில் இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு இடுக்கி அருகே உள்ள தேவிகுளம் பகுதி சப்-கலெக்ட்ராக பணியமர்த்தப்பட்டார். இங்கு தான் அவருக்கு ஏறுமுகம் ஏற்பட்டது. சப்-கலெக்டராக பணியில் அமர்ந்தவுடன் இடுக்கி மலைப்பகுதியில் இருந்து விதிகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள், லேண்ட் மாஃபியாக்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

 தொடர்ந்து  தனது செயல்களில் அதிரடி காட்ட லோக்கல் அரசியல்வாதிகளின் பகையும் சம்பாதித்தார். இதனால் சப்-கலெக்டர் பதவி பறிபோனது. இருந்தாலும் அதன்பிறகு எந்த துறைக்கு சென்றாலும் அங்குத் தனி முத்திரை பதித்துவந்தார். அரசியல்வாதியாக இருந்தாலும், வேறுநபராக இருந்தாலும் அவர்கள் மீது தைரியமாக இவர் எடுக்கும் நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. வலைதளங்களில் அவருக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.


ஸ்ரீராம்

முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் முதல் பலரும் அவரின் நடவடிக்கையைப் பாராட்டினர். இவர் பேசும் காட்சிகள் அவ்வப்போது இளைஞர்கள் மத்தியில் பரவ `ஹீரோ'வாக வலம்வரத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்ற ஸ்ரீராம் இந்தவாரம் தான் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் கேரள சர்வே துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். தனக்குக் கிடைத்த புது பதவியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் ஸ்ரீராம். இங்கு தான் அவருக்கு வினையே ஏற்பட்டது.
ஒரு காஃபி குடிச்சிருக்கலாமே சித்தார்த்தா…

காஃபிடே அதிபர் சித்தார்த்தா : கோப்புப்படம்

“பணத்தைத் தேடித்தான் முதல்ல ஓடுவோம், 5 அல்லது 10 கோடிகளைப் பார்த்தபின் பணத்தால் எந்தப் பயனும் இல்லை என உணர்ந்துவிடுவோம். என்னைப் பொறுத்தவரை வியாபாரத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் ஒரு உணர்ச்சிப் பொருள்தான் பணம்..”

இந்த வாசகத்தைக் கூறியது..காஃபி கிங்காக வலம் வந்து, பல வெற்றிகளைக் குவித்தபின், தான் தொழிலில் தோற்றுவிட்டேன் என்று கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட காஃபே காஃபி டே உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தாதான்.

தேயிலை குடிக்கும் தேசத்தை காஃபி தேசமாக ஏன் மாற்றக்கூடாது என்று யோசித்து காஃபிக்கு மாற்றிக்காட்டியவர் சித்தார்த்தா. ஒரு காஃபியால் ஏராளமானவற்றை நடத்த முடியும் (A lot can happen over coffee) என்ற தனது கடையின் வாசகத்தை இளைஞர்கள், தொழில்முனைவோர் மனதில் பதியவைத்து, நிரூபித்தவர் சித்தார்த்தா.

209 நகரங்களுக்கும் மேல், 1,843 காஃபி டே கிளைகள், சர்வதேச அளவில் பல நாடுகளில் கிளைகள், மென்பொருள் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனம் என பல தொழில்களைச் செய்து இந்தியாவின் 20 பணக்காரர்கள் இடத்துக்குள் சித்தார்த்தா வலம் வந்தார்.

கடந்த திங்கள்கிழமை பெங்களூருவில் இருந்து சாக்லேஷ்பூருக்கு அந்த கார் சென்றது. மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் வந்தபோது தனது ஓட்டுநரை காரை நிறுத்தக் கூறியுள்ளார் சித்தார்த்தா.

ஓட்டுநரும் காரை நிறுத்தினார். “சிறிது நேரம் இங்கு நில்லுங்கள்”, “நான் வாக்கிங் சென்றுவிட்டு வருகிறேன். அதன்பின் போகலாம்” என்று சொல்விட்டுச் சென்ற சித்தார்த்தா அதன்பின் திரும்பவில்லை. இரு நாட்கள் தேடுதலுக்குப் பின் கடந்த 29-ம் தேதி நேத்ராவதி ஆற்றில் ஹோகே பசார் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டபோது 24 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பிய காஃபி சாம்ராஜ்ஜியம் சரிந்துபோனது.



தொழிலில் வெற்றியாளராக இருந்த சித்தார்த்தாவுக்கு என்ன ஆயிற்று, அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன இருந்தது, புற உலகத்தில் தொழில்முனைவோராக வெற்றி பெற்ற சித்தார்த்தா, அவருக்கான அக உலகத்தில் தொழில்முனைவோராக தோற்றுவிட்டாரா.. எனப் கேள்விகளெல்லாம் எழுகின்றன.

கர்நாடகத்தில் சிக்மங்களூரில் உள்ள கோடீஸ்வரக் குடும்பத்தில்தான் 1959-ம் ஆண்டு சித்தார்த்தா பிறந்தார். சித்தார்த்தாவின் தந்தை, தாத்தா என குடும்பத்தினர் என 140 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரையாக, காபித் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டவர்கள்.

இவர்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் காஃபித் தோட்டம் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே காஃபித் தோட்டத்துக்கு சென்று வந்ததால் என்னவோ சித்தார்த்தா உடலில், ரத்தத்தோடு சேர்ந்து, காஃபியும் ஓடியது என்று ரசனைக்கு கூறலாம்.

மங்களூரில் உள்ள ஆலோசியஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் பயின்ற சித்தார்த்தாவின் ஆரம்பகட்ட நோக்கம் தொழில்முனைவோராக வருவதைக் காட்டிலும் “கம்யூனிஸ்ட் தலைவராகவே” சித்தார்த் உருவாக விரும்பினார்.
ஆனால் காலத்தின் கட்டாயம் சித்தார்த்தாவை தொழில்முனைவோராக்க விரும்பியது. இதற்காக சித்தார்த்தா தனது 21-வது வயதில் முதலில் மும்பையில் உள்ள ஜேஎம். நிதி மற்றும் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து இரு ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றார்

அதன்பின் சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டு, தனது தந்தையிடம் சென்று ரூ.5 லட்சம் பெற்றார். அதில் 3 லட்சத்துக்கு சிக்மங்களூரில் நிலம் வாங்கினார். மீதமுள்ள பணத்தில் சிவன் செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் பெங்களூருவில் ஒரு பங்கு முதலீட்டு நிறுவனத்தை 1984-ம் ஆண்டு தொடங்கினார்.


லத்திலும், பங்கு நிறுவனத்திலும் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. சிவன் செக்யூக்ரிட்டீஸ் நிறுவனம் முதலீடுகள் குவிந்து வீறுநடை போட்டது, அதைத் தொடர்ந்து வே டூ வெல்த் நிறுவனத்தை சித்தார்த்தா தொடங்கினார்.

தனது குடும்ப பாரம்பரிய காஃபி தோட்ட வியாபாரத்தையும் விடக்கூடாது என்பதால், 1993-ம் ஆண்டு அமால்கமேட்டட் பீன் கம்பெனி (ஏபிசி) எனும் காஃபி கொட்டை வர்த்தக நிறுவனத்தை சித்தார்த்தா தொடங்கினார். ஆண்டுக்கு ரூ 6 கோடி விற்றுமுதலுடன் நிறுவனம் சக்கைபோடு போட்டது. இன்று அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,500 கோடியாக உயரந்திருக்கிறது.

இதற்கிடையே ஜெர்மன் காஃபி நிறுவனமான சிபோ நிறுவனத்தாருடன் சித்தார்த்தா ஒருநாள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தானும் இதுபோன்ற காஃபி செயின் வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என விரும்பினார். ஜெர்மன் நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்புக்குப் பின் அன்றைய இரவு சித்தார்த்தாவுக்கு தூக்கம் வரவில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். அன்று அவர் சிந்தனையில் உருவானதுதான் காஃபி டே.

அதன்பின் கடந்த 1996-ம் ஆண்டு, ஜுலை 11-ம் தேதி பெங்களூருவில் உள்ள பிரிகேடியர் சாலையில் சிசிடி (CCD) எனச் சொல்லப்படும் கஃபே காஃபி டே கடையின் முதல் கிளையை சித்தார்த்தா தொடங்கினார். 'லாட் கேன் ஹேப்பன் ஓவர் ஏ காஃபி' என்ற வாசகத்துடன் தொடங்கப்பட்டு இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.
தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைக் கவர கடையிலேயே இருந்த சித்தார்த்தா, இளைஞர்களுக்கு இலவசமாகக் காஃபியை வழங்கி அவர்களை ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் முன்னேறத் துடிக்கும் பல இளைஞர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி காஃபி டே கடையை கலகலப்பாக மாற்றினார்.

காதலர்களும், இளம் தம்பதிகளும், புதிய தொழில்முனைவோரும் பேசிக்கொள்வதற்கு பெரிய ஹோட்டலை நாடி அதிக செலவு செய்ய வேண்டிய நிலையை சித்தார்த்தா தொடங்கிய காஃபி டே கடை மாற்றிக்காட்டியது.

இளைஞர்கள் அமர்ந்து பேசவும், ஒரு காஃபியை வைத்துக்கொண்டு உலகக் கதைகளை தனக்குப் பிடித்தவர்களுடன் கடலை போடவும் காஃபிடே சரியான இடம் என்பதை இளைஞர்களுக்கும், தம்பதிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் சித்தார்த்தா உணர்த்தினார்.


வசதியாக அமரும் இருக்கைகள், இடம், அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை அனைத்து வகையிலான கேப்பசினோ, பிளாக் ஃபாரஸ்ட், ஐஸ் கஃபே, பிளாக் கஃபே என பல வகைகளை இளைஞர்களுக்குப் பிடித்தவாறு தனது கடையிலேயே தயாரித்து அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவிலையில் சித்தார்த்தா வழங்கினார். இதுதவிர க்ரீன் டீ, லெமன் டீ, நொறுக்குத்தீனிகள், பீட்ஸா, பர்கர் வழங்கி இளைஞர்களை கட்டிப்போட்டார் சித்தார்த்தா.

களிப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சாமரங்களையும், புதிதாக தொழில்முனைவோராகத் துடிக்கும் இளைஞர்களுக்கு போதிக்கூடமாகவும் காஃபிடே மாறிப்போனது. காஃபி டேயின் கவர்ந்திழுக்கும் மனம், பல்வேறு சுவையை ருசிக்க வரும் இளைஞர்கள் ஒருபக்கம், தங்களின் எதிர்காலத்துக்கு ஆலோசனைகளைக் கேட்க சித்தார்த்தாவைச் சந்திக்க வரும் இளம் தொழிலமுனைவோர்கள் கூட்டம் என காஃபி டே கடைகளும், கிளைகளும் களைகட்டத்தொடங்கின.

காஃபி டே வெற்றி நடைபோட, அடுத்த 10 ஆண்டுகளில் காஃபி நுரைபோல லாபத்தை காஃபிடே நிறுவனம் பொங்கச் செய்தது, நூற்றுக்கணக்கான கிளைகள் நாடெங்கும் வியாபித்தது.
கொஞ்சம் காஃபி நிறைய பேச்சு என்ற வகையில், குறைந்த வெளிச்சத்தில், இதமான சூழலில் ஒரு காஃபி செலவில் கூட்டம் நடத்த சித்தார்த்தாவின் காஃபி டே உதவியதை காஃபி உலகம் மறக்காது.

ஜம்மு காஷ்மீர் முதல் தமிழகம் வரை, மணிப்பூர் மாநிலத்தின் கடைக் கோடிவரை காஃபி டேயின் சுகந்தத்தையும், சுவையான காஃபியையும் சித்தார்த்தா பருகவைத்தார்.



அதுமட்டுமல்லாமல் காஃபி டே குழுமத்தின் சார்பில் காஃபித் தோட்டங்களும் மேற்கு இந்தியப் பகுதிகளில் வாங்கிக்குவித்தார் சித்தார்த்தா. கத்லேகான் எஸ்டேட், ஹலாசூர் எஸ்டேட், தேவதர்ஷினி எஸ்டேட், கிரிகான் எஸ்டேட், குர்குன்முட்டி எஸ்டேட், பத்ரா எஸ்டேட் என ஏராளமான எஸ்டேட்கள் சித்தார்த்தா தலைமையில் உருவாகின.

அதிலும் குறிப்பாக சித்தார்த்தா வாங்கிய கத்லேகான் எஸ்டேட்டில் விளையும் 'டார்க் ஃபாரஸ்ட் காஃபி' பீன்ஸ் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சர்வதேச தரத்துக்கு ஈடாகப் போட்டியிட்டது. இந்த கத்லேகான் எஸ்டேட்டில் விளைவிக்கப்படும் 'பிளாக் ஃபாரஸ்ட் காஃபி' கொட்டைகளுக்கு உலக அளவில் வரவேற்பு இருந்தது. இதுதவிர ரோபஸ்டா, அராபிகா வகை காஃபி வகைகளையும் பயிர் செய்தார்.

இந்த காஃபி வகைகளில் இருந்து விளையும் காஃபி பவுடர்களை விற்பனை செய்ய 'காஃபி டே பிரஷ்' எனும் நிறுவனம், உயர்ரக மக்கள் வந்து செல்லும் 'காஃபி டே ஸ்குயர்' சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பையில் அமைக்கப்பட்டன.

900 கிளைகள் கொண்ட 'காஃபி டே எக்ஸ்பிரஸ்', 50 ஆயிரத்துக்கும் மேலான எந்திரங்கள் கொண்ட 'காஃபி டே பிவேரஜஸ்', 'காஃபி டே எக்ஸ்போர்ட்ஸ்', 'காஃபி டே பெர்பெக்ட்', 'காஃபி டே பி2சி பிளான்ட்' என பல்வேறு கிளைகளை காஃபி டே குழுமத்துக்குள் சித்தார்த்தா உருவாக்கினார்.

வெளிநாடுகளிலும் கிளை பரப்ப முடிவு செய்த சித்தார்த்தா, 2010-ம் ஆண்டு செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த காஃபி எம்போரியோ நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன்பின் ஆஸ்திரியா, எகிப்து, நேபாளம், கோலாலம்பூர் என பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பினார்.

சித்தார்த்தாவின் பிரதான தொழிலாக காஃபி வர்த்தகம் மட்டுமே இருந்தது. தன்னுடைய ஏபிசி நிறுவனம் மூலம் உலக அளவில் அதிக அளவு தரமான காஃபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக உயர்த்தினார்.

சமீபத்திய கணக்குப்படி ஆண்டுக்கு 20 ஆயிரம்டன் காஃபிக் கொட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த சித்தார்த்தா, உள்நாட்டில் 2 ஆயிரம் டன் காஃபிக் கொட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றினார். தன்னுடைய ஏபிசி நிறுவனத்துக்கு சொந்தமாக மட்டும் 12 ஆயிரம் ஏக்கர் காஃபித் தோட்டங்களை வாங்கிக் குவித்தார். அவரின் கனவு காஃபித் தோட்டத்தோடு முடியவில்லை, காற்புள்ளி வைத்து கனவை நீட்டித்தார்.

1999-ம் ஆண்டு அசோக் சூட்டா, ரோஸ்டா ராவணன், சுப்ரோட்டோ பாக்சி ஆகியோருடன் இணைந்து மைன்ட்ட்ரீ(Mindtree) எனும் மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார் சித்தார்த்தா. இந்நிறுவனத்தின் கிளைகள் வியன்னா, செக் குடியரசு என பல்வேறு இடங்களில் உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினார்.


இந்த மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் மூலம்தான் சித்தார்த்தாவுக்கு முதல்கட்ட இழப்பு ஏற்படத் தொடங்கியது. சித்தார்த்தாவின் முதலீட்டுக்கு கைகொடுத்த பங்குச்சந்தை, அவரின் நிறுவனத்தைப் பட்டியலிட்டு பங்குகளை விற்பனை செய்தபோது பங்குச்சந்தை கைகொடுக்கவில்லை. காஃபி டே நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்தே தொடர்ந்து நஷ்டத்தையே காட்டியது.

இதனால் காஃபி தோட்டத்தை வாங்க ஏராளமாக கடன் வாங்கி இருந்த சித்தார்த்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. சமீபத்திய தகவல்படி காஃபி டே நிறுவனத்தின் கடன் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது. ஆனால், காஃபி டே நிறுவனத்தின் மதிப்பு, கையிருப்பு ஆர்டர், நிலங்களின் மதிப்பு, கடைகளின் வருவாய் ஆகியவற்றின் மதிப்பைக் கணக்கிட்டால், கடன்தொகையைக் காட்டிலும் 4 மடங்கு என கணக்கிடப்பட்டுள்ளது.

சித்தார்த்தாவின் காஃபி வர்த்தகத்தில் உள்ள சொத்துகளை மட்டும் விற்றால்கூட அதன் மதிப்பு இன்றைய தேதிக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வரும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், பங்குச்சந்தையில் காஃபி டே நிறுவனத்தின் பங்குகளின் இழப்பு, அதிகரித்த கடன்சுமை ஆகியவற்றால் முதல்முறையாக சித்தார்த்தா கலங்கினார்.

அதன்பின் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் தொழிலதிபர்களின் கூட்டம் ஒன்றில் எல்அன்ட்டி நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்தித்துப் பேசிய சித்தார்த்தா தனது மைன்ட் ட்ரீ நிறுவனத்தில் தனது பங்குகளை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு எல்அன்ட்டி நிறுவனரும் சம்மதிக்கவே, இருவருக்கும் இடையே அடுத்தடுத்த கட்டங்களில் பேச்சு நடந்து, பங்கு விற்பனை முடிந்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சித்தார்த்தாவுக்கு ரூ.3300 கோடிக்கு மேல் கிடைத்தது/ இதில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்தியதில், 60 சதவீதக் கடன் அடைக்கப்பட்டதாக ஆக்ஸிஸ் வங்கி கூறுகிறது. மீதமிருக்கும் கடனையும் தனது சொத்துகளால் அடைத்துவிட்டு, சித்தார்த்தா காஃபி தொழிலை மட்டும் கவனித்திருந்தாலே ஓய்வுக் காலத்தை சுகமாக கழித்திருக்கலாம்.



இந்த தொழில்மட்டுமல்லாமல் 3 ஆயிரம் ஏக்கரில் வாழைத்தோட்டம் அமைத்து வாழைப்பழம் ஏற்றுமதி, டார்க் ஃபாரஸ்ட் பர்னிச்சர் கம்பெனி என சித்தார்த்தா நடத்தி வந்தார்.

சிலஅரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பாலும், பங்குகளை விற்பனை செய்ததில் முறையாக கணக்குக் காட்டவிட்டவில்லை. காஃபிடே வருமானத்தில் சரியான வருமானவரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

பெங்களூரு, சென்னை,மும்பை, சிக்மங்களூரு ஆகிய இடங்களில் சித்தார்த்தாவுக்கு சொந்தமான இடங்கள், கடைகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் வருமான வரித்துறையினர் அளித்த நெருக்கடி, சொத்துகள் முடக்கம், கடன் நெருக்கடி போன்றவற்றைத் தாங்கமுடியாமல் சித்தார்த்தா விபரீதமான முடிவை எடுத்தார். வருமான வரித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் நெருக்கடி காரணம் என்று சித்தார்த்தா தனது கடைசிக் கடிதத்தில் தெரிவித்தாலும், அது நியாமில்லை என வருமான வரித்துறையும் விளக்கம் அளித்தது.

தொழிலதிபராக பல வெற்றிகளைக் குவித்த சித்தார்த்தா, தொழிலில் தோற்றுவிட்டதாகக் கூறி மீளமுடியா இடத்துக்குச் சென்றது மற்ற தொழிலதிபர்களை அசைத்துப் பார்க்கவே செய்யும்.
பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானவர்கள்கூட திடீரென அனைத்தையும் துறந்த தற்கொலை எனும் தவறான முடிவுக்குச் செல்வது, அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்களுக்கும், நித்தமும் கஷ்டத்தில் திளைக்கும் மக்களுக்கும் ஆச்சர்யத்தையே அளிக்கிறது.

ஆனால், ஒருவர் பணக்காரராகவும், தொழிலதிபராகவும் இருப்பதாலேயே தற்கொலை முடிவு எடுக்கும் சூழல் எழுந்துவிடாது. தனது நிறுவனங்கள் அனைத்தையும் முன்னின்று நிர்வாகம் செய்த சித்தார்த்தா, தனது நிறுவனத்தின் கஷ்டங்கள், துயரங்கள், பொறுப்புகள், கடன்களை தன் மீது மட்டுமே சுமந்துகொண்டதால் அவர் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எந்த தனி மனிதரின் வாழ்விலும் கஷ்டங்களும், போராட்டங்களும் நிரம்பித்தான் இருக்கும். அதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஏதோ ஒரு தருணம், ஒரு செயல், ஒரு சம்பவம், வாழ்வைச் சூனியமாக்கிவிடுகிறது. அந்தச் சில தருணங்களில் எந்த ஒரு சரி - தவறும் கண்ணுக்குத் தெரிவதில்லை.


நம் கனவுகளும் ஆசைகளும் இதர மகிழ்ச்சியும் அற்ற ஒரு வெளியாக அந்த தருணம் இருக்கிறது. அப்போது ஒரு மனிதன் எடுக்கும் கடைசி ஆயுதமே தற்கொலை. தன் இருப்பு இந்த உலகில் அர்த்தமற்றது, யாருக்கும் நாம் தேவையில்லை, நாம் போனபின் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள், அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிட்டோம் என்று எண்ணம் மேலோங்குகிறது.

சிலவினாடிகள் சித்தார்த்தா தனது மனைவி, பிள்ளைகளை நினைத்திருந்தால் இந்த முடிவு எடுத்திருப்பாரா? பல நாட்களாக வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்திருக்கும் கவலைகள், பிரச்சினைகள், வலிகள், கோபம், ஆத்திரம் ஆகியவை மெல்ல மெல்ல ஒரு நபரை மகிழ்ச்சியில் இருந்து வெளியே இழுக்கின்றன, வெற்றிடத்துக்குள் தள்ளப்படுகிறோம்.

ஒரு சின்ன நம்பிக்கைதான் அந்த தருணத்தில் தேவை, அது தன் குழந்தையின் சிரிப்பு, மனைவியின் காதல், பெற்றோரின் அன்பு, நட்பின் அரவணைப்பு, தன் நாயின் வாலாட்டல் என்று ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும். ஆனால், அப்போது யாருமில்லாமல் போகும் போதுதான், தற்கொலை நடக்கிறது.

தற்கொலை என்பது கோழைத்தனம் என்பதைத் தாண்டி ஒரு மிகப் பெரிய உளவியல் சிக்கல், பிரச்சினை என்பதை நாம் உணர வேண்டும்.


வெறும் பணப் பிரச்சினை, கடன் தொல்லை, குடும்பத் தகராறு, வாழ்க்கையில் தோல்வி என்று அதை ஒதுக்கிவிட முடியாது. ஒரே பிரச்சினையைச் சந்திக்கும் இரு நபர்களில் ஒருவர் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார் என்று சிந்திக்க வேண்டும்

கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையில் கூறுகிறார், சாவைச் சாவு தீர்மானிக்கும் 

வாழ்வை நீ தீர்மானி; புரிந்து கொள், சுடும் வரைக்கும் நெருப்பு சுற்றும் வரைக்கும் பூமி போராடும் வரைக்கும் மனிதன் நீ மனிதன் "ஏ லாட் கேன் ஹேப்பன் ஓவர் ஏ காஃபி" என்று தனது வெற்றியின் ரகசியமாக வைத்திருந்த சித்தார்த்தா கடைசியில் ஒரு காஃபி குடித்திருக்கலாம்….
அத்திவரதரை தரிசிக்க 2 லட்சம் பேர் குவிந்தனர்; வரிசையில் பக்தர்கள் இருக்கும்வரை இரவில் நடை திறந்திருக்கும்: மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு



காஞ்சிபுரம்

விடுமுறை நாளான நேற்று அத்தி வரதரை தரிசிக்க 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத் தில் குவிந்த நிலையில், வரிசையில் பக்தர்கள் இருக்கும்வரை இரவு நடை திறந்திருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் அத்திவரதர் வைபவ விழாவில் கடந்த 35 நாட்களில் 44 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலை யில் விடுமுறை தினமான நேற்று, சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக் கான பக்தர்கள் கோயிலுக்குள் வந்து வரிசையில் காத்திருந்தனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர் களும் பேருந்துகள் மூலம் காஞ்சி புரத்துக்கு வந்தனர்.

சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தவர்கள், மீண்டும் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதற்காக காலை முதலே ஒலிமுகமது பேட்டையில் உள்ள, தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பேருந்து கள் புறப்பாடு, வருகை நேரம் தெரியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். சுவாமி தரிசனம் முடிந்தும் பேருந்துக்காக சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வெளியூர் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

வெகுதூரம் செல்லும் பயணி களை மட்டுமே நடத்துநர்கள் பேருந்துக்குள் அனுமதித்தனர். இதனால், அரக்கோணம், திருத் தணி, பெரும்புதூர், சுங்குவார் சத்திரம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வர்கள், பேருந்து நிலையத் திலேயே நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து, இளங்குமரன் என்பவர் கூறியதாவது: அத்தி வரதர் வைபவத்துக்காக அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வந்து செல்லும் நிலை, அனைத்து அதிகாரிகளும் அறிந் ததே. அதனால், பயணிகள் சிரமம் இன்றி செல்ல கூடுதலாக பேருந்து களை இயக்கியிருக்கலாம். மொழி தெரியாத வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஊர் களுக்குச் செல்லும் பேருந்து களின் விவரங்களை அறியமுடியா மல் கைக்குழந்தைகளுடன் அலை யும் காட்சி மனதை வேதனைப் படுத்தியது என்றார்.

கோயில் நடை திறப்பு

நேற்று செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியதாவது: அத்திவரதரை தரி சிப்பதற்காக நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பக்தர்களின் தரிசனத்துக்காக கோயில் நடை இரவு 11 மணிக்கு மூடப்படாது. வரிசையில் பக்தர் கள் உள்ள வரையில் தொடர்ந்து கோயில் நடை திறந்திருக்கும். அதேவேளையில் அதிகாலையில் வழக்கம்போல் 4:30 மணிக்குதான் தரிசனத்துக்காக பக்தர்கள் கோயி லுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.10 ஆயிரம் பணம் செலுத்தினால் 5 டோனர் பாஸ் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு; மருத்துவ மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம் 



சென்னை  05.08.2019

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக் கும் மருத்துவ மாணவ, மாணவி கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளி களுக்கான மருத்துவச் சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு நாடுமுழுவதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாண வர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2-ம் தேதி சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரி மாணவ, மாணவி கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

23 கல்லூரிகள் புறக்கணிப்பு

இதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் கள் இன்று வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் பயிற்சி டாக்டர்களும் வகுப்புகளை புறக்கணிக்க இருப்பதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக போராட்டத் துக்கு அழைப்புவிடுத்துள்ள தமிழ் நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹரி கணேஷ் கூறியதாவது:

தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சிலை அழிக்கக் கூடாது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் மீது நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. மருத்துவக் கல்வியில் மாநில உரிமையை பறிக்கக் கூடாது.

தர்ணா, ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்வியை கார்ப் பரேட்மயமாக்கும், முழுமை யாக வணிகமயமாக்கும் வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காஷ்மீரிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு டிக்கெட் விலையைக் குறைத்தது ஏர் இந்தியா 

புதுடெல்லி 05.08.2019

காஷ்மீரிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஸ்ரீநகர்-டெல்லி இடையேயான விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை ரூ.7 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து மாநில நிர்வாகம், வெள்ளியன்று பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக காஷ்மீரில் தங்கியுள்ள யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. இந்நிலையில் விமானப் பயணிகளுக்கான டிக்கெட் விலை குறைக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்த விவரம்:

''மாநில அரசு நிர்வாகம் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டதை அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு விமான ஒழுங்குமுறை, சிவில் ஏவியேஷன் இயக்குநரக தலைவர், தேவை ஏற்பட்டால் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமானங்களை இயக்கத் தயாராக இருக்கும்படியும் விமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பயணிகளுக்கு உதவும் வகையில் டிக்கெட் விலையைக் குறைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.

ஏர் இந்தியா நிர்வாகம் டிக்கெட் விலைக் குறைப்பை இன்றுமுதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

ஸ்ரீநகர்-டெல்லி வழித்தடத்திற்கான அதிகபட்ச கட்டணத்தை ரூ.9,500 லிருந்து ரூ.6.715 ஆகவும், டெல்லி-ஸ்ரீநகர் வழித்தடத்திற்கான கட்டணம் ரூ.6,899 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணக் குறைப்புச் சலுகை வரும் ஆகஸ்ட் 15 வரை அமலில் இருக்கும்''.

இவ்வாறு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆய்வு சான்றுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் மேலுார் கல்லுாரி பேராசிரியர் கைது

Added : ஆக 04, 2019 23:13

நாகர்கோவில் : மாணவியின் முனைவர் பட்ட ஆய்வு கட்டுரை சான்றுக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை மேலுார் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று பேராசிரியர் ரசல்ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டத்தை சேர்ந்த ரசல்ராஜ் மேலுார் கல்லுாரியில் பணிபுரிகிறார். கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதியை சேர்ந்த மாணவி கிளாடிஸ் புளோரா இவரிடம் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து வந்தார்.ஆய்வுக் கட்டுரையை கிளாடிஸ் புளோரா சமர்ப்பிக்க ரசல்ராஜ் சான்று அளிக்க வேண்டும். இதற்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கிளாடிஸ் புளோரா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி நேற்று பகல் 11:00 மணிக்கு மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இருந்த ரசல்ராஜிடம் ரூ.25 ஆயிரத்தை கிளாடிஸ் புளோரா கொடுத்தார். இதை கண்காணித்த டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
அரசு டாக்டர்கள் விடுமுறைக்கு புதிய விதி

Added : ஆக 05, 2019 00:45

கோவை : அரசு டாக்டர்கள் விடுப்பு எடுப்பதை தடுக்கும் விதத்தில் சுகாதார துறை பல்வேறு விதிகளை வகுத்துள்ளது.தமிழகத்தில், 23 அரசு மருத்துவக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இம்மருத்துவக் கல்லுாரிகளுடன், 50 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை குறித்த நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து விடுப்பு எடுப்பதற்கான பல்வேறு புதிய நடைமுறைகளை சுகாதார துறை வகுத்துள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது :டாக்டர்கள் பலர் தங்களது வார விடுமுறையன்று பணிக்கு வருகின்றனர். அதற்கு ஈடாக வார நாட்களில் விடுப்பு எடுக்கின்றனர்.

இவ்வாறு விடுமுறை எடுப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும், மருத்துவக் கல்லுாரிகளில், துறை தலைவர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இதுபோன்று விடுப்பு வழங்கி விடுவதால் நிர்வாக செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படுவது தெரிந்தது. இதையடுத்தே அவசர பணிக்காக வார விடுமுறையன்று பணிக்கு வரும் டாக்டர்கள் வார நாட்களில் விடுமுறை எடுக்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர்.

NEWS TODAY 14.02.2026