Thursday, October 3, 2019

குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு தனது ஊதியத்திலிருந்து மாதம் ரூ. 10 ஆயிரம் தர முன் வந்த உதவிமேலாளர்



செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி

குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் புதுச்சேரியில் பாண்லேயில் பணிபுரிந்து வருவதால் தனது ஊதியத்தில் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரத்தை இவர்களுக்கு வழங்குவதாக உதவி மேலாளர் கிருஷ்ணராஜு தனது உயர் அதிகாரிக்கு கடிதம் தந்துள்ளார்.

புதுச்சேரியில் பாண்லே நிறுவனம் மூலம் அரசு பாக்கெட் பால் விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்டவையும் விற்பனையாகிறது. இந்நிலையில் இன்று காலை பாண்லே உதவி மேலாளர் கிருஷ்ணராஜு பாண்லே மேலாண் இயக்குநருக்கு கடிதம் தந்துள்ளார்

அதில், நமது பாண்லே அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 130 குறைந்த ஊதியம் தந்து அதிக பணி வாங்குகிறோம். இதனால் அதிகாரி என்ற முறையில் அதிக மன வருத்தம் ஏற்படுத்துகிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப ஊதியம் தர வேண்டும். அது வரை எனது ஊதியத்தில் இருந்து ரூ. 10 ஆயிரம் பிடித்தம் செய்து இவ்வூழியர்களுக்கு பகிர்ந்து தர முழு சம்மதம் தருகிறேன். அவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு உதவினாலும் என் மனதுக்கு மகிழ்ச்சியே. எனது கோரிக்கை ஏற்று இதை அமல்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

இவ்விவரம் பாண்லே முழுக்க பரவ தொடங்கியது. பலரும் இவ்விஷயத்தை பகிரத்தொடங்கினர்.

இக்கடிதம் தொடர்பாக கிருஷ்ணராஜுவிடம் கேட்டதற்கு, "இன்று காலை கடிதம் தந்தேன். பல ஆண்டுகளாக எனது பிரிவிலேயே 250க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பால் பாக்கெட் பிரிவு, ஐஸ்கிரீம் பிரிவு, விற்பனை பிரிவு ஆகியவற்றில் பணிபுரிகின்றனர். அதிக பணி இருந்தாலும் ரூ. 130 மட்டுமே ஊதியம் கிடைக்கும். அது எனக்கு வருத்தத்தை தந்தது. அதனால் எனது ஊதியத்திலிருந்து தொகை தர முடிவு எடுத்து கடிதம் தந்தேன்" என்று குறிப்பிட்டார்.
தலைக்கவசம் இல்லையா...? விருதுநகருக்கு போக முடியாது- இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு போலீஸார் அறிவுரை



விருதுநகர்

தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநர்களை விருது நகருக்குள் செல்ல அனுமதிக் காமல் போலீஸார் திருப்பி அனுப் பினர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனங்களை ஓட்டு பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதை வலியுறுத்தி போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகரில் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, போலீஸ் பாலம், அரசு தலைமை மருத்துவமனை, பி.ஆர்.சி. பாலம், கவுசிகா பாலம், அல்லம்பட்டி முக்கு சாலை, சிவகாசி சாலை ஜங்ஷன், ரயில்வே பீடர் சாலை ஆகிய இடங்களில் நேற்று காலை சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டன.இங்கிருந்த போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸார் தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டுநர்களை மட்டுமே விருதுநகருக்குள் செல்ல வும், விருதுநகரில் இருந்து வெளியே செல்லவும் அனுமதித் தனர். தலைக்கவசம் அணியாமல் ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை போலீஸார் எடுத்துக் கூறி அனுமதி மறுத்தனர். இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோவன், போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் மரியஅருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெகிழ வைத்த அருண் ஜேட்லி குடும்பத்தினர்: ஓய்வூதியம் வேண்டாம் என மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம்


மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி : கோப்புப்படம்

புதுடெல்லி

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் ஓய்வூதியத்தைத் தங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக மாநிலங்களவையில் குறைவாக ஊதியம் பெறும் 4-ம் நிலை பணியாளர்களுக்கு வழங்குங்கள் என குடியரசு துணைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை நிலுவையில் இருக்கும் அனைத்து தொகையையும் மாநிலங்களவையில் 4-ம் நிலை பணியாளர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று அருண் ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் எம்ய்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏழைகளுக்கும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதிகமாக உதவும் எண்ணம் கொண்டவர். தனது துறையில் பணியாற்றும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அவரே செலுத்திவிடுவார். மேலும் பண்டிகை, விழாக் காலங்களில் அவர்களுக்குப் புத்தாடை, இனிப்புகள், பரிசுகள் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவார்.



பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்தபோது, தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியை அருண் ஜேட்லி தவிர்த்தார். பிரதமர் மோடி வந்து சமாதானம் செய்தபோதிலும் தனது உடல்நலத்தால் ஏற்க முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் கிருஷ்ணா மேனன் மார்க் என்ற அரசுக் குடியிருப்பில் இருந்து காலி செய்து, தெற்கு டெல்லியில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு ஜேட்லி குடிபெயர்ந்தார்.

மத்திய அமைச்சராக ஜேட்லி இருந்தபோதிலும் கூட மிகப்பெரிய அரசு குடியிருப்பில் வாழ அருண் ஜேட்லி விரும்பாமல், சாதாரண வீட்டிலேயேதான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் மனிதநேயம் மிக்க தலைவராகவும், அதிகமான உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் அருண் ஜேட்லியை பெருமையாக மூத்த தலைவர்கள் கூறுவார்கள்.

மறைந்த அருண் ஜேட்லி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததால், அவர் மறைவுக்குப் பின் அவரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.1500 என வழங்கப்படும். இதுதவிர கடந்த 1999-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்ததால், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.22,500 என மாதம் ரூ.50 ஆயிரமும், ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.

இந்நிலையில், அருண் ஜேட்லிக்கு கிடைக்கும் மாத ஓய்வூதியத் தொகையை மாநிலங்களவையில் 4-ம் நிலையில் பணியாற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்குங்கள் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அருண் ஜேட்லி குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியோர் இல்லங்களை மூட...

By ப. இசக்கி | Published on : 01st October 2019 03:38 AM

உலக முதியோர் விழிப்புணர்வு தினம் இன்று (அக்.1) கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்திலும், தமிழகத்திலும் ஆண்டுக்கு ஆண்டு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் தற்போது சுமார் 600 முதியோர் இல்லங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சரியான கணக்கு இல்லை என்றாலும்கூட, அதைவிட அதிகம் என்கின்றனர்; இவற்றில் பதிவு பெற்றவை 100-க்கும் குறைவு.
மத்திய அரசின் முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு நாடு முழுவதும் முதியோர் இல்லங்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களில் தமிழகத்திலிருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் பெறப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்றைய சூழ்நிலையில் முதியோரை எவரும் வீடுகளில் வைத்துப் பராமரிக்க விரும்புவதில்லை என்பதால், முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. 


முதியோரை வீட்டில் வைத்துப் பராமரிப்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் அதில் சவால்கள் அதிகம். முதியோர்களின் வயது, அனுபவம், வாழ்வில் அவர்கள் பெற்ற வெற்றி, தோல்வி முதலானவை பிள்ளைகளைவிட அதிகம் இருக்கலாம். ஆனாலும், அந்த அனுபவ அறிவைப் பயன்படுத்திக் கொள்ள இன்றைய இளைய தலைமுறையினர் தயாராக இல்லை. எனவே, குடும்பத்தில் ஒரு பாரமாகவே முதியோர் கருதப்படுகின்றனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் பாரமாகக் கருதாமல் இருக்க, இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியல் சூழ்நிலைகளை முதியோரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வயதான பெற்றோரை ஒப்பிடும்போது பிள்ளைகள் வயதிலும், அனுபவத்திலும் குறைவுள்ளவர்களே. எனவே, தங்களைப் போன்றே பிள்ளைகளும் எல்லாவற்றிலும் மிடுக்காக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது. தங்களது இளமைக் காலத்தில் நிறைவேற்றிய அனைத்துப் பணிகளையும் தொடர்ந்து முதியோர் செய்ய முற்படுவதோ அல்லது பிள்ளைகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ சாத்தியம் இல்லை. 

குடும்பத்துக்காக உழைக்கும் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு சில ஆலோசனைகளைக் கூறலாமே தவிர தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ, நிர்ப்பந்திப்பதோ இருவருக்குமிடையே மனக் கசப்பைத்தான் உண்டாக்கும். பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறுவதோடு அவர்களது நல்ல செயல்களை ஆதரிப்பது நல்லுறவுக்கு வழிவகுக்கும்.
அதேபோல், பெற்றோரைக் கடிந்து கொள்வதை பிள்ளைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பணி செய்யும் இடத்திலோ அல்லது வேறு இடங்களிலோ ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் கோபத்தை இயலாமையில் இருக்கும் முதியோர் மீது வாரிசுகள் காட்டுவது தவறு. 

மேலும், முதியோரிடம் பேசும்போது சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அவர்கள் பேசுவதைத் தடை செய்வதோ, வெடுக்கென்று பேசி வாயை அடைக்க முயற்சிப்பதோ தகாத செயல். அப்படியே பேசிவிட்டாலும் அதற்காக உடனடியாக மன்னிப்புக் கேட்டு விடுவது சிறப்பு. பெற்றோரிடத்தில் மன்னிப்புக் கேட்பதில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை. அவர்களது மனம் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை.

முதியோர் மீது எரிச்சல் அடையக் கூடாது. அவர்களது சொல், செயலில் தெளிவின்மை இருக்கலாம். பல் போனால் சொல் போச்சு. உடல் தளர்ந்தால் செயலும் தவறும். எனவே, அவர்கள் பேசும்போதோ அல்லது ஏதேனும் செயலைச் செய்யும்போதோ அதில் தவறு ஏற்படலாம். அதை அமைதியாகவும், மென்மையான வார்த்தைகளாலும் சுட்டிக்காட்டலாம்; மனம் நோக பேசக் கூடாது.

வாழ்க்கையில் நல்ல நிலையை வாரிசுகள் அடைய வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஏராளமான சிரமங்களைச் சந்தித்திருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மனம் கசந்துபோகும்படி பிள்ளைகள் நடந்து கொள்ளக் கூடாது. இளம் வயதில் பெற்றோர், பிள்ளைகளை உற்சாகப்படுத்த என்னவெல்லாம் பேசி இருப்பார்கள். அதைப் போலவே முதிர்வயதில் பெற்றோரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பிள்ளைகள் பேசி அவர்களை மகிழச் செய்யலாம்.

முதியோருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது அவசியம். அவர்களுடன் சற்று நேரத்தைச் செலவிடலாம். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவ்வாறு கேட்கும்போது அதில் சில ஆலோசனைகள் இருக்கலாம். அது இளைய தலைமுறைக்கு அவசியமானதாகவோ அல்லது வரும் அபாயம் குறித்த எச்சரிக்கையாகவோ இருக்கலாம். அது முதுமை தரும் கனி.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது பேச்சைக் கேட்கும்போது அவர்கள் இன்னும் குடும்பத்தில் முக்கியமானவர்கள்தான், அலட்சியப்படுத்தப்படவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். 

அதுவே அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தை அளிக்கும். சில வேளைகளில் அவர்கள் சொல்வது முரண்பாடான கருத்தாகக் கூட இருக்கலாம். அதற்காக அவர்களைக் கடிந்து கொள்ளக் கூடாது. முதியோரைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் பல சவால்கள் இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நாட்டில் உள்ள பல முதியோர் இல்லங்களை மூடி விடலாம்.
திருமணமானவருக்கும் கருணை வேலை உண்டு

Added : அக் 02, 2019 22:44

சென்னை : திருமணமான காரணத்துக்காக, பெண்ணுக்கு கருணை வேலை மறுக்கப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, கூட்டுறவு வங்கி தலைவருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.கடலுார் மாவட்டம், பென்னாடத்தில், மாளிகை கோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு, இரவு காவலராக பணியாற்றி வந்தவர், ௨௦௧௧ நவம்பரில் மரணம்அடைந்தார். கருணை வேலை கேட்டு, அவரது மகள் சித்ரா தேவி விண்ணப்பித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தகுதி அடிப்படையில், விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தந்தையின் மரணத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், மகளுக்கு திருமணம் நடந்து விட்டதால், கருணை அடிப்படையில் வேலை கோரியது நிராகரிக் கப்படுவதாக, வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, மீண்டும் உயர் நீதிமன்றத்தில், சித்ரா தேவி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மகளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, கருணை அடிப்படையில் வேலை தருவதை மறுக்கக் கூடாது என, இந்த நீதிமன்றம் அவ்வப்போது தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, திருமணமான ஒரே காரணத்துக்காக, கருணை வேலை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை, தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.
பெண் டாக்டரிடம் சில்மிஷம் அரசு பஸ் கண்டக்டர் கைது

Added : அக் 03, 2019 01:19

தஞ்சாவூர் : பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அரசு விரைவு பஸ் கண்டக்டரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, கும்பகோணத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, அரசு விரைவு பஸ் புறப்பட்டது. ராஜு, 31, என்பவர் கண்டக்டராக இருந்தார்.சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த, 28 வயது பெண் சித்தா டாக்டர், பஸ்சில் பயணம் செய்துள்ளார். செங்கல்பட்டை கடந்து பஸ் சென்ற போது, துாங்கிக் கொண்டிருந்த பெண் டாக்டருக்கு, பின் இருக்கையில் இருந்த கண்டக்டர் ராஜு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நேற்று காலை, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் வந்ததும், அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில், பெண் டாக்டர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, கண்டக்டர் ராஜுவை கைது செய்தனர்.
ஓட்டுனர், நடத்துனர் விடுப்பு எடுக்க தடை

Added : அக் 03, 2019 01:15

சென்னை : ஆயுத பூஜையை முன்னிட்டு, போக்குவரத்து ஊழியர்கள், நாளை முதல் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம், வரும், 7ம் தேதி, ஆயுத பூஜையும், 8ம் தேதி, விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்கள் அரசு விடுமுறை நாட்கள். அதாவது, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என, தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்போர், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வர முடியும். அவர்கள் வசதிக்காக, நாளை முதல், சிறப்பு பஸ்களை இயக்க, அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி, நாளை முதல், 6ம் தேதி வரை, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வழக்கமான, 2,225 பஸ்களுடன், சிறப்பு பஸ்களாக, மூன்று நாட்களும் சேர்த்து, 6,145 பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு, 280 பஸ்கள்; கோவையில் இருந்து, பிற ஊர்களுக்கு, 717 பஸ்கள்; பெங்களூருவில் இருந்து, பிற ஊர்களுக்கு, 245 பஸ்களும் இயக்கப் படுகின்றன.அதேபோல, ஆயுதபூஜை முடிந்த பின், 8, 9- தேதிகளில், பிற நகரங்களில் இருந்து, திருப்பூருக்கு, 266; கோவைக்கு, 490; பெங்களூருவுக்கு, 237 பஸ்களும் இயக்கப் பட உள்ளன. சென்னைக்கு, மக்களின் வருகைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனால், இன்றுமுதல், போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுப்பில் உள்ளோரும், உடனடியாக பணிக்கு திரும்ப, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...