Wednesday, April 1, 2020

சுற்றித் திரியும், 'காளை'கள்; 'நெம்பி' எடுக்கும் போலீஸ்!

Added : ஏப் 01, 2020 01:12

புழல் : ஊரடங்கு உத்தரவை மீறி ஊரை சுற்றுவோரை, லத்தியால் அடித்தால் பிரச்னையாகி விடுகிறது என்பதால், அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் புதுப்புது வகையாக நுாதன தண்டனைகளை எப்படி வழங்கலாம் என, தங்களது பள்ளி பருவ அனுபவங்களை செயல்படுத்துகின்றனர்.

'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடெங்கும், 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பலர் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி, அலட்சியமாக ஊரை சுற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை மடக்கி பிடிக்கும் போலீசார், பல்வேறு நுாதன தண்டனைகளை வழங்கி, அறிவுரை கூறுகின்றனர். ஆனாலும், அவர்கள் அடங்குவதாக இல்லை. இதனால், விதிமீறுவோரை கட்டுப்படுத்த, போலீசார் தங்களின் பள்ளிப்பருவத்தில் அனுபவித்த தண்டனைகளை நினைவு கூர்ந்து, அதை அடங்காதவர்களுக்கு அளித்து வருகின்றனர்.

தோப்புக்கரணம், தவளை ஜம்பிங், அங்கப் பிரதட்சணம், நாற்காலி போல் உட்காருவது, கொரோனா குறித்து கேள்வி பதில் எழுதுவது, நெற்றியில் தலை எழுத்து, சுவாசப்பயிற்சி, இரு கையிலும் புத்தகங்களை சுமந்து தராசு தட்டு போல் வளைந்து நிற்பது என, பல்வேறு நுாதன தண்டனைகளை, இதுவரை பலருக்கும் வழங்கி உள்ளனர்.அதையும் மீறி ஊர் சுற்றுபவர்களை, ஏப்., 14ம் தேதி வரை எப்படி கட்டுப்படுத்துவது என, புதிய நுாதன தண்டனைகளை ஆலோசித்து வருகின்றனர்.
சமூக தொற்றாகவில்லை: அச்சம் வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : மார் 31, 2020 23:23

சென்னை:''தமிழகத்தில் 'கொரோனா' வைரஸ் சமூக தொற்றாக பரவவில்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்; மன வலிமையுடன் இருந்தால் கொரோனா பரவலை ஒழித்து விடலாம்'' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமுதாய தொற்றாக பரவாமல் இருக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த சிறப்பு பேட்டி:சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கால் உதவிஒருவர் பாதிக்கப்பட்டவர் என்றால் அவருடன் தொடர்பில் இருந்த 100 முதல் 200 நபர்கள் வரை அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை சுற்றி 5 கி.மீ. வரை உள்ள வீடுகளில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறோம்.அமெரிக்காஇத்தாலிஈரான் உள்ளிட்ட நாடுகளில் சமுதாய தொற்றாக பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.நம் நாட்டில் அந்நிலைமை வராமல் தடுப்பதற்கு பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்குதமிழக முதல்வர் அறிவித்த 144 தடை பெரும் உதவியாக உள்ளது. ஊரடங்கை மக்கள் சிரமமாக கருதாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சமூக தொற்றாகவில்லை

தமிழகத்தில் தற்போது வரை சமூக தொற்றாக பரவில்லை. அதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதை தவிர தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை உதவியுடன் ஒரே வெண்டிலேட்டரில் நான்கு பேர் வரை செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ராஜிவ்காந்திஓமந்துாரார் மற்றும் திருச்சி ஆகிய மூன்று மருத்துவமனைகளில் 'ரோபோ' வாயிலாக நர்ஸ்களின் பணியை செய்வதற்கான சோதனை முயற்சி நடந்து வருகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நம் பாரம்பரிய உணவு பொருட்களைமக்கள்சாப்பிடலாம்.

அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று அடிக்கடி கை கழுவுவதுடன் வெளியே வருவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் தான் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். மன வலிமையுடன் மக்கள் இருந்தால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் 'சப்ளை': முதல்வர் அறிவுரை

Updated : ஏப் 01, 2020 07:56 | Added : மார் 31, 2020 22:06 

சென்னை ''முடிந்தவரை வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை வழங்கும்படி, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் தெரிவித்தார். கவர்னரை சந்தித்த பின், அவர் கூறியதாவது:

நோய் பரவல், இன்னும், 15 நாட்களில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகிறோம். அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை களிலும், பரிசோதனை மையங்கள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு, நோய் தொற்று உள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் இருந்து, நோய் பரவுவதை தடுக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம்.முதல்வர் பல்வேறு நிவாரண சலுகைகளை அறிவித்துள்ளார். முடிந்தவரை வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்க, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

டில்லி சென்ற, 1,500 பேரில், 1,131 பேர் திரும்பியுள்ளனர்; அவர்களில், 800 பேரை கண்டறிந்து உள்ளோம். அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டோரை, காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் கண்காணித்து வருகின்றனர். தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து குறித்து, ஆராய்ச்சி நடந்து வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், விதிகளை பின்பற்றாவிட்டால், அரசு பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

முதல்வர், இ.பி.எஸ்., நேற்று மாலை, 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னரை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், தடை உத்தரவால் பாதிக்கப் பட்டோருக்கு, நிவாரண உதவிகள் வழங்க எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும், அவர் விளக்கினார்.
எஸ்.பி.ஐ., ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி நிதி

Added : மார் 31, 2020 21:06

சென்னை :கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர்களின், இரண்டு நாள் சம்பளமான, 100 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2.56 லட்சம் ஊழியர்களின், இரண்டு நாள் சம்பளமான, 100 கோடி ரூபாய், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.'வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தாமாக முன்வந்து, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு, தங்களது இரண்டு நாள் சம்பளத்தை வழங்கி உள்ளனர்.

எஸ்.பி.ஐ., தன் ஆதரவை, அரசுக்கு தொடர்ந்து வழங்கும்' என, வங்கி தலைவர், ராஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார். வங்கியின் ஆண்டு லாபத்தில், 0.25 சதவீதம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் என, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பெருகும் குடும்ப வன்முறை

Updated : ஏப் 01, 2020 02:59 | Added : ஏப் 01, 2020 02:56 

புதுடில்லி : நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடும்ப வன்முறை புகார்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதுமுதல் அனைத்து நிறுவனங்கள் வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் திரையரங்குகள் உள்ளிட்டஅனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏராளமானோர் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இத்துடன் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கணவன் மனைவி மற்றும் குடும்பத்தினருடனான மோதல் அதிகரித்து வன்முறையில் முடிகிறது.

இது குறித்து தேசியமகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது: மார்ச் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்திற்கு 58 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் மின்னஞ்சல் புகார்கள். பெரும்பாலும் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் இருந்து அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.வீட்டில் மன உளைச்சலுடன் உள்ள ஆண்கள் அதை பெண்கள் மீது வெளிப்படுத்தும் போது மோதல் ஏற்படுகிறது. இது தவிர குறைந்த வருவாய் பிரிவு பெண்கள் அஞ்சல் கடிதம் மூலம் அனுப்பிய புகார்களையும் சேர்த்தால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஊரடங்கால் அஞ்சல் புகார்கள் குறைவாக உள்ளன. நாடு தற்போதுள்ள சூழலில் எங்களை அணுக முடியாது என பல பெண்கள் நினைக்கின்றனர். அது தவறு. அவர்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்தாண்டு ஜனவரியில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 270 புகார்கள் வந்தன. இது பிப்ரவரியில் 302 ஆக உயர்ந்தது. மார்ச்சில் 30ம் தேதி வரை 291 புகார்கள் வந்துள்ளன.
வீட்டு வாடகை கேட்காதீர் அரசு அதிரடி உத்தரவு

Updated : ஏப் 01, 2020 00:11 | Added : ஏப் 01, 2020 00:02 |

சென்னை:'வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதம், வாடகை கேட்க வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தடையுத்தரவை மீறி, தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, தமிழக அரசு, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:வெளி மாநில தொழிலாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே, தற்காலிக இருப்பிடம், உணவு போன்றவற்றை, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள சொந்த ஊர் வரும் தொழிலாளர்களை பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனியே தங்க வைக்க வேண்டும்.

ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அதில் வேலை பார்த்த ஊழியர்கள், தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

தொழிற்சாலை, கடைகள் போன்றவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, தடையுத்தரவு காலங்களில், சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதம், வாடகை கேட்கக் கூடாது.தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை, வீட்டை காலி செய்யும்படி, இடத்தின் உரிமையாளர் கூறினால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்றுடன்,'ரிடையர்'ஆகும் மருத்துவர்களின் பணி இரண்டு மாதம் நீட்டிப்பு!

Updated : மார் 31, 2020 23:57 

சென்னை:தமிழகத்தில், நேற்றுடன் ஓய்வு பெறவிருந்த, அரசு டாக்டர்களுக்கு, இரண்டு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் கடன் தவணை தொகை செலுத்த, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 'கொரோனா' வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பக்கத்தில், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன; மறுபக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக, தனிமை வார்டுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மார்ச் 31ம்தேதியுடன் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் டாக்டர்கள், நர்ஸ்கள் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாத பணிநீட்டிப்பு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிக தேவை

இந்த நிலைமையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், அதிகளவில் தேவைப்படுகின்றனர். எனவே, தற்காலிகமாக, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தேர்வு செய்ய, அரசு ஏற்பாடு செய்துள்ளது.இப்பணிகள் துரிதமாக நடந்து வரும் சூழலில், தற்போது பணியில் இருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார தொழில்நுட்ப பணியாளர்கள் நிறைய பேர், நேற்று ஓய்வு பெற இருந்தனர்.

அவர்களை ஓய்வு பெற அனுமதித்தால், அரசு மருத்துவமனைகளில், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மார்ச், 31ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு அமைத்துள்ள குழுக்களுடன் ஆலோசித்த பின், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* தமிழகத்தில், நேற்று ஓய்வு பெறவிருந்த, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரும், ஒப்பந்த முறையில், மேலும் இரண்டு மாதங்கள் பணியில் தொடர, தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்

* கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க் கடன் பெற்றோர், தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், ஜூன், 30 வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கு, தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்

* அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில், கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் தொகை செலுத்த, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்

* 'கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில், 200 கோடி ரூபாயில், சிறப்பு கடனுதவி திட்டம், 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின், அவசர மூலதன தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்

* 'சிப்காட்' நிறுவனத்திடம், மென் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள், கடன் தவணை செலுத்தவும், சிப்காட் பூங்கா தொழில் நிறுவனங்கள், பராமரிப்பு கட்டணம் செலுத்தவும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மக்கள் செலுத்த வேண்டிய, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த, மூன்று மாதம் அவகாசம் தரப்படும். வாடகை வீட்டில் குடியிருப்போரிடம், வாடகை தொகையை, இரு மாதங்கள் கழித்து, வீட்டு உரிமையாளர்கள் பெற வேண்டும்

* தமிழகத்தில், கொரோனா நோய், மூன்றாம் கட்டத்திற்கு பரவாமல் இருக்க, பொது மக்கள், வீட்டில் இருப்பது அவசியம். அத்தியாவசிய பொருட்களை வாங்க, அரசு பிறப்பித்துள்ள, நேரக் கட்டுப்பாடுகளை, பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

முதியோர் உதவித்தொகைநேரில் வழங்க உத்தரவு

தமிழகத்தில், ஒவ்வொரு மாதமும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை, மணியார்டர் மற்றும் வங்கிக் கணக்கு வழியாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும், 32.45 லட்சம் பயனாளிகளுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, சிறப்பு ஏற்பாடாக, பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

'லைசென்ஸ், பெர்மிட்'புதுப்பிக்க அரசு அவகாசம்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின், மோட்டார் வாகனப் பிரிவு இயக்குனர், பியூஸ் ஜெயின், அனைத்து மாநில போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தற்போது, அவசர சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கான ஆவணங்கள், காலாவதியாகி உள்ளதாகவும், அதனால், அனுமதி மறுக்கப்படுவதாகவும் நிறைய புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டப்படி, ஆவணங்களை புதுப்பிக்க வேண்டிய நடைமுறைகள் தளர்த்தப்படுகின்றன.தற்போது, ஊரடங்கின் காரணமாக, வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், எப்.சி., என்ற, வாகன தகுதி சான்றிதழ், 'பெர்மிட்' என்ற வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்கான பதிவு உள்ளிட்ட, வாகனம் சார்ந்த அனைத்து நடைமுறைகளுக்கான விதிகளும் தளர்த்தப்படுகின்றன.

அதன்படி, பிப்., முதல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கு, ஜூன், 30 வரை அவகாசம் வழங்க வேண்டும். இதை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பின்பற்றி, இந்த இக்கட்டான சூழலில், அவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களின், புதுப்பிக்காத ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 05.12.2025