Tuesday, April 7, 2015

இந்தப் 'பாவம்' செய்யாதவர்கள் கை உயர்த்துக!

தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில் மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும் தவறுவதில்லை.

கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின் வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச் செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல் நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம் ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும் அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை.

அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர் சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும், சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி 'விர்..விர்'ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது.

இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/ பாட்டியையோ சந்திக்கையில் "எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு போடுது தெரியும்ங்ளா!?" எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச் சென்றுவிடும்.

வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப் பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்... ஒற்றைச் சிறு கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்... பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில், "விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்.... இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு எதுக்கு வண்டி" எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை. காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள்.

தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின் மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்!

ஈரோடு கதிர் - எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...