Saturday, April 25, 2015

என்னதான் நடக்கிறது யேமனில்?

அரேபியா என்றாலே அதன் எண்ணெய் வளமும், செல்வச் செழிப்பும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் கண்டத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு ஒன்று உண்டென்றால், அது யேமன்தான். இருந்தாலும், அந்த நாடுதான் அண்மைக் காலமாக சர்வதேசச் செய்திகளில் முதன்மை இடம் பெற்றுள்ளது. அப்படி என்னதான் நடக்கிறது யேமனில்?

அங்கு நடைபெறும் சண்டையில் யார், யாருடன், எதற்காக மோதிக் கொள்கின்றனர்? அந்த மோதலில் சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் என்ன வேலை?

1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதையடுத்து, கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் ஒன்றுபட்டதைப் போலவே, வடக்கு யேமனையும், தெற்கு யேமனையும் ஒன்றிணைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடக்குப் பகுதித் தலைவர் அலி அப்துல்லா சலேவை அதிபராகவும், தெற்குப் பகுதித் தலைவர் அலி சலீம் அல்-பெய்தை துணை அதிபராகவும் கொண்ட கூட்டணி ஆட்சி 1990-இல் ஏற்பட்டது.

எனினும், "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' எனக் கூறி அல்-பெய்த் 1993-ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

சீற்றமடைந்த அதிபர் அப்துல்லா சலே, அல்-பெய்தையும், அவரது ஆதரவாளர்களையும் அரசிலிருந்து அதிரடியாக நீக்கினார். அதிரடிக்குப் பதிலடியாக, தெற்கு யேமனை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார் அல்}பெய்த்.

அவ்வளவுதான்! மூண்டது உள்நாட்டுச் சண்டை. இந்தச் சண்டையின் முடிவில், வடக்கு யேமனிடம் தெற்குப் படைகள் தோல்வியடைந்து அல்}பெய்த் உள்ளிட்ட பல தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, யேமனை ஏகபோகமாக ஆட்சி செய்யத் தொடங்கினார் அப்துல்லா சலே.

எனினும், அரபு துணைக் கண்டத்தை 2011}ஆம் ஆண்டு புரட்டியெடுத்த "அரபு வசந்தம்' என்ற புரட்சி அலை, சலேவின் 33 ஆண்டு கால ஆட்சியையும் கவிழ்த்தது.

அதிலிருந்துதான் தொடங்குகிறது அண்மைக் கால யேமன் பிரச்னை.

இந்தப் பிரச்னையில் களம் நிற்பவர்கள் யார் யார்?

ஹூதி கிளர்ச்சியாளர்கள்: அப்துல்லா சலே ஆட்சியின்போது, தங்களது கலாசாரத்தைக் காப்பதற்காக உருவான ஷியா பிரிவு கிளர்ச்சி அமைப்பு இது. 2011}இல் சலேவுக்கு எதிரான புரட்சியின்போது மற்ற தேசியவாத இயக்கங்களுடன் கைகோத்து செயல்பட்ட இவர்களுக்கு ஆதரவு பெருகியது.

வடக்குப் பகுதியில் பலம் வாய்ந்த இவர்கள், தலைநகர் சனாவை எதிர்ப்பின்றி கைப்பற்றினர். மேலும், தெற்குப் பகுதியையும் கைப்பற்றப் போராடி வருகின்றனர்.

அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவுப் படையினர்: மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள யேமன் அதிபர் மன்சூர் ஹாதியின் விசுவாசிகள். தற்போது ஏடனைக் காக்க ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.

முன்னாள் அதிபர் அப்துல்லா சலே ஆதரவுப் படையினர்: 33 ஆண்டு காலம் அதிபராக இருந்த சலேவுக்கு யேமன் ராணுவத்தின் ஒரு பிரிவினர் இன்னும் ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போதைய சண்டையில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அப்துல்லா சலே ஆதரவு அளித்து வருகிறார்.

அரேபிய தீபகற்பத்துக்கான அல்}காய்தா (ஏ.க்யூ.ஏ.பி.): அல்}காய்தா பிரிவுகளிலேயே மிகவும் கொடூரமானது என அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்ட அமைப்பு இது.

"யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அரேபியத் தீபகற்பத்திலிருந்து அழித்தொழிப்பது' உள்ளிட்ட வழக்கமான பயங்கரவாதக் கொள்கைப் பிடிப்புடன் யேமனில் 13 ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மன்சூர் ஹாதி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே இந்த அமைப்பின் எதிரிகள்.

சவூதி அரேபியா: யேமன் பிரச்னையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நாடு.

சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த நாடு, வளைகுடாவைச் சேர்ந்த ஜோர்டான், மொராக்கோ, சூடான் ஆகிய நாடுகளையும் கூட்டு சேர்த்துக்கொண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

காரணம், சன்னி இன உணர்வு என மேலோட்டமாகத் தோன்றினாலும், "சிறுபான்மை ஹூதிக்களுக்கு எதிராக உருவாகும் பெரும்பான்மை சன்னிப் பிரிவு இனப் பயங்கரவாதம், அருகிலுள்ள சவூதி அரேபியாவை நிச்சயம் பாதிக்கும்.

அரேபியக் கண்டத்திலேயே மிகவும் ஏழை நாடான யேமனும், மிகப் பெரிய பணக்கார நாடான சவூதி அரேபியாவும் 1,600 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன' என்கின்றனர் பார்வையாளர்கள்.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.): எந்தப் பயங்கரவாத இயக்கமும் எளிதில் துளிர்த்து வேரூன்றி விடும் தன்மை கொண்ட யேமன் மண்ணில் உருவான ஐ.எஸ். அமைப்பின் கிளை.

ஷியா பிரிவு ஹூதிக்கள் இவர்களுக்கு எதிரிகள் என்றால், சன்னி பிரிவு அல்}காய்தா இவர்களுக்கு கடும் போட்டியாளர்கள். ஷியாக்களை அழிக்கும் போட்டியில் அல்}காய்தாவை விஞ்ச கடந்த மாதம் இவர்கள் நிகழ்த்திய இரட்டை மசூதித் தாக்குதலில் பலியானோர் 142 பேர்!

ஈரான்: ஹூதி கிளர்ச்சியாளர்களை "ஈரானின் கைப்பொம்மைகள்' என அதிபர் ஹாதி வர்ணித்தாலும், யேமன் பிரச்னையில் ஈரானின் பங்கை அரசுத் தரப்பு ஊதிப் பெரிதுபடுத்துவதாகக் கருதப்படுகிறது. காரணம் ஹூதிக்களுக்கு ஈரான் உதவியளிப்பது குறித்து இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அமெரிக்கா: யேமனில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஆதரவுடன் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. தற்போது ஹூதிக்களின் முன்னேற்றத்தால் அந்த நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன.

இதனால், யேமனில் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு பல்வேறு உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக யேமன் பிரச்னையை அணுகுவதால், பிரச்னை மேலும் தீவிரமடையும். அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் அமைதிக்கான ஒரே வழி என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...