Friday, April 24, 2015

பாஸ்வேர்டால் என்ன பயன்?


மு
தலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறீர்களா?

உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இதற்காக நீங்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. மாறாக கவலைப்பட்டாக வேண்டும். ஏனெனில் சமீபத்தில் பாஸ்வேர்டு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு இணையப் பயனாளிகள் தங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவதாக தெரிய வந்துள்ளது.
இணையப் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் காஸ்பெர்ஸ்கி லேப் நிறுவனம் பி2பி இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேர் தான் தங்கள் பாஸ்வேர்டை முக்கியமாக கருதுவதாகவும் அது தப்பித்தவறி சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். மாறாக 21 சதவீதம் பேர், சைபர் குற்றவாளிகளுக்குத் தங்கள் பாஸ்வேர்டால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அதாவது நாங்கள் என்ன இணையப் பிரபலங்களா இல்லை கோடீஸ்வரர்களா? எங்கள் பாஸ்வேர்டை எல்லாம் களவாடி என்ன செய்யப்போகிறார்கள் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அப்பாவித்தனம் ஆபத்தில் முடியலாம் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். பிரபலமோ இல்லையோ இணையத்தில் இருக்கும் எல்லோருக்கும் பாஸ்வேர்டு முக்கியமானது, மதிப்பு மிக்கது என்று சொல்கின்றனர். பாஸ்வேர்டால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இணையத்தில் வைக்கப்படும் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்கத் தகவல்கள் மற்றும் பணம் (ஆன்லைன் வங்கிச் சேவை) ஆகியவற்றுக்கான பூட்டுச் சாவி போன்றது பாஸ்வேர்டுகள். அவை களவாடப்பட்டால் வில்லங்கம் தான் என்கின்றனர்.
நீங்கள் பிரபலமானவராகவோ அல்லது கோடீஸ்வரராகவோ இலலாவிட்டாலும் கூட உங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகள் பலனடைய முடியும் என்கிறார் காஸ்பெர்ஸ்கி லேபின் அதிகாரி எலேனா கார்சென்கோவா. பாஸ்வேர்டு திருடப்படும்போது பயனாளி மட்டும் பாதிக்கப்படவில்லை, அவரது தொடர்புகளும் தான் என்றும் எச்சரிக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு, ஒருவரது இமெயில் பாஸ்வேர்டு, சைபர் குற்றவாளி கையில் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் மூலம் அவரது முகவரி பெட்டியில் உள்ள அனைத்து தொடர்புகளின் மெயிலுக்குள்ளும் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதற்கான கதவு திறக்கப்படுவதாக வைத்துக்கொள்ளலாம். பேஸ்புக் போன்ற தளங்களுக்கும் இது பொருந்தும்.
இப்போது பாஸ்வேர்டின் முக்கியத்துவம் புரிகிறதா?
எனவே இனி பாஸ்வேர்ட் விஷயத்தில் விழிப்புடன் இருங்கள். தொடர்ந்து பாஸ்வேர்டு பாதுகாப்புக் குறிப்புகளை பார்க்கலாம்.
முதல் குறிப்பு, முதலில் தனித்தனி பாஸ்வேர்ட் தேவை என்பது. இமெயில், பேஸ்புக், இன்னும் பிற என எத்தனை இணையச் சேவைகளை பயன்படுத்தினாலும் சரி அவை ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு அவசியம். இதன் பொருள் ஒருபோதும் எல்லாச் சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தக்கூடாது . ஏன் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு சேவையின் பாஸ்வேர்டு திருடு போனது என்றால் உங்கள் எல்லாச் சேவைகளுக்குமான கள்ளச்சாவி குற்றவாளி கையில் கிடைத்தாயிற்று என்று பொருள்!
ஆக , நீங்கள் பல இணையச் சேவைப் பயனாளி என்றால் முதலில் ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...