Sunday, April 26, 2015

ஹவுஸ்புல்': ரயில், பஸ்களில் ஜூன் 10ம் தேதி வரை டிக்கெட் இல்லை: கோடை விடுமுறைக்கு செல்லும் பயணிகள் திணறல்

பள்ளித் தேர்வுகள் முடிந்துள்ளதால், கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்களில் முன்பதிவு, 'ஹவுஸ்புல்' என்ற நிலையை தாண்டி, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளது. நெடுந்தூர அரசு விரைவு பஸ்களிலும் ஜூன் மாதம், 10ம் தேதி வரை, பெரும்பாலான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு, சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆன்மிக சுற்றுலா, கோவில் திருவிழா, உறவினர் வீட்டிற்கு செல்வது, ஊட்டி, கொடைக்கானல் என, கோடை வாசஸ்தலங்களுக்கும், விடுமுறைக்கு செல்வோர் அதிகம். இதனால், ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து, கடந்த, இரண்டு வாரங்களாக ரயில்களில் முன்பதிவு சூடுபிடித்தது.

காத்திருப்போர் பட்டியல்:

தற்போது முன்பதிவு உச்சத்தை அடைந்துள்ளது. இதன் தாக்கமாக, ஜூன், 10ம் தேதி வரை, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், குருவாயூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், அனந்தபுரி, நெல்லை, பாண்டியன், பொதிகை என, அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று உள்ளது. சேலம், கோவை மார்க்கமாக செல்லும் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் என்ற நிலையே நீடிக்கிறது. தஞ்சை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் முன்பதிவு முடிந்துள்ளது. ரயில் முன்பதிவு முடிந்துள்ளதால், அடுத்தகட்ட முயற்சியாக, அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், முக்கிய வழித்தடங்களில் சில சிறப்பு பஸ்களை களம் இறக்கி உள்ளது. இந்த சிறப்பு பஸ்களிலும், உடனுக்குடன் முன்பதிவு முடிவுக்கு வந்து விடுகிறது. வசதியின் அடிப்படையில் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணிப்பதால், ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்படி, ரயில், பஸ்களில் முன்பதிவு முடிவுக்கு வந்து உள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தற்போது, நெல்லை, மதுரைக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை, ஓரிரு நாட்களுக்கு தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இது, பயணிகளுக்கு பெரியளவில் உதவவில்லை. தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மார்க்கங்களில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும். தற்போது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இம்மாதத்துடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு தேர்வுகளும் முடிகின்றன. இதனால், மே மாதம் முழுவதும் ரயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு, பயணிகள் அதிகளவில் படையெடுப்பர். தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில், வாரத்திற்கு குறைந்தபட்சம், மூன்று நாட்களுக்கு என்ற அடிப்படையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்?

கோடை விடுமுறையின் போது, ஊட்டி, கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கிவிடும். மேலும், சுட்டெரிக்கும் வெயில் சூழலில் இருந்து தப்பிக்க, இந்த இடங்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், முக்கிய நகரங்களில் இருந்து, ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...