Tuesday, April 21, 2015

மருந்துக்கு விலை உயர்வா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அதையும் மீறி நோய்வரும் நேரத்தில், அந்த நோயின் கொடுமையைக் கட்டுப்படுத்த மருந்துகள் உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நீரிழிவு, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 3.84 சதவீதம் உயர்த்திக்கொள்ள மருந்து கம்பெனிகளுக்கு, மத்திய அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மருந்துகளெல்லாம் தினமும் நோயாளிகள் நோயின் தன்மைக்கேற்ப ஒருமுறைக்கு மேல் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் மருந்துகளாகும். தேசிய மருந்து விலை ஆணையம் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த 509 மருந்து பட்டியலில் மஞ்சக்காமாலை, புற்றுநோய், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தும் ஊசி மருந்துகளும் அடங்கும். ஒருபக்கம் குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களில் தீவிரம் காட்டும் அரசாங்கம், கருத்தடை சாதனங்களுக்கும் விலையை உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற மருந்துகளை மருந்து கம்பெனிகள் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 108 மருந்துகளை இப்படி அத்தியாவசிய மருந்துகள் மீதான விலைக்கட்டுப்பாட்டில் இருந்து நீக்கியதால், அதன் விலைகளும் இப்படி 10 சதவீதம் வரை நிச்சயமாக உயர்ந்து விடும்.

ஏற்கனவே இந்த அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள பாரசிட்டமால், மெட்டோபார்மின், அமாக்சிலின், ஆம்பிசிலின் உள்பட 12 மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து அதில் முக்கியமாக 80 முதல் 90 சதவீதம் வரை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சீனாவில் இருந்து ரூ.38 ஆயிரத்து 186 கோடி செலவிலான இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறையால் அநேகமாக பெரும்பான்மையினருக்கு 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. முன்பெல்லாம் காலையில் நடை பயிற்சி செல்லும் நேரத்தில் ஒருவரையொருவர் நலமா என்று விசாரித்த காலம்போய், இப்போது சர்க்கரை அளவு எவ்வளவு என்று விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. இந்த சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக்கொதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, அல்சர் போன்ற பல நோய்களுக்கு தினமும் மருந்து சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த மருந்து செலவுக்கெல்லாம் இன்சூரன்சும் இல்லை, வருமானவரி விலக்கும் இல்லை. வயதான காலத்தில் இந்த மருந்து செலவே மாதசெலவில் பெரும் பங்கை விழுங்கிவிடு கிறது.

இந்த நிலையில், மருந்துவிலை உயர்வு என்பது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் பெரிதும் பாதிக்கும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே மத்திய அரசாங்கம் திட்டமிட்டு அறிவித்த ‘ஜன் அவுஷாதி’ என்ற பெயரிலான அத்தியாவசிய மருந்துகளை ஜெனரிக் மருந்துகள் என்ற அடிப்படையில், ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். ஜெனரிக் மருந்துகள் என்றால் வணிக முத்திரையுடன் கூடிய மூலக்கூறுகளாலான மருந்துகளாகும். மருந்து ஒன்றுதான், ஆனால், கம்பெனி பெயர்தான் இருக்காது, பளபளக்கும் பேக்கிங்களிலும் இருக்காது. இந்த வகையில் 504 ஜெனரிக் மருந்துகள் விற்கப்படும். முதல்கட்டமாக 800 கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஜெனரிக் மருந்துகளை அனைத்து மருந்து கடைகள், அரசு மருந்து கடைகள், கூட்டுறவு மருந்துகடைகளிலும் கிடைக்கவும், டாக்டர்களையும் இந்த ஜெனரிக் மருந்துகளை எழுதிக்கொடுக்க ஆலோசனை கூறவும் மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...