Saturday, May 2, 2015

நீதிபதிகளின் ஓய்வு வயது

அமெரிக்க நாட்டின் 4–வது ஜனாதிபதியாக 1809–ம் ஆண்டு முதல் 1817–ம் ஆண்டு வரை பணியாற்றி, நிர்வாகத்திறனாலும், உதிர்த்த பல அரும்பெரும் கருத்துகளாலும் இன்றளவும் உலகம் முழுவதும் நினைத்துக்கொண்டிருக்கும் தலைவர் ஜேம்ஸ் மேடிசன். அரசியல் சட்டத்தின் பொருளை நீதித்துறை போல பாராளுமன்றமும் உறுதிபடுத்தி வைத்துள்ளது என்று அன்று தெரிவித்தார்.


ஆக அரசியல் சட்டம்தான் ஜனநாயகத்தின் நான்கு தூண்களான சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 அமைப்புகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் புனித நூலாகும். தன்னிச்சையாக செயல்படும் இந்த ஒவ்வொரு அமைப்பும், எவ்வாறு அடுத்த அமைப்பின் பணிகளில் தலையிட முடியாது என்பதை அரசியல் சட்டம் ஆணித்தரமாக தெரிவித்துள்ளது. அதை தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலும், நீதிபதி டி.எஸ்.சிவஞானமும் அடங்கிய ஒரு பெஞ்சு தங்கள் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. 1962–ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதிகளின் பதவி காலத்தின் அதிகபட்ச வயது 62 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோல உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பு 65 ஆக வகுக்கப்பட்டது.


பொதுவாக உடல் உழைப்பை பயன்படுத்தி மேற்கொள்ளும் பணிகளுக்குத்தான் வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வு வழங்கப்படவேண்டும். ஏனெனில் வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் நிலை அந்த பணிகளுக்கு ஒத்துழைக்காது. ஆனால், கத்தியை தீட்டத்தீட்டத்தான் கூர்மை ஆகும், பட்டை தீட்டத்தீட்டத்தான் வைரம் ஒளிவிடும். அதுபோல அறிவாற்றலை பயன்படுத்தும் பணிகளுக்கு வயது ஆக ஆகத்தான் ஞானத்தின் ஆழமும் அதிகமாக இருக்கும் என்ற வகையில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தாலும் அவர்கள் ஆற்றலை தொடர்ந்து வேறுவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக நிலவி வருகிறது. இதை மையமாக வைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுகால வயதை உயர்த்த வேண்டும். இப்போதெல்லாம் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்துள்ளது என்ற கருத்தில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் ஓய்வுகால வயதுவரம்பை உயர்த்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. நமது நீதிபதிகள், இது தங்களுக்கு பயன் அளிக்கும் வழக்குத்தானே, இதை பரிசீலிக்க உத்தரவிடலாமே என்று நினைக்காமல், இதை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. பாராளுமன்றம்தான் விரிவாக விவாதித்து, நீதிபதிகளின் வயது வரம்பை உயர்த்தலாமா? என்பதை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக நாங்கள் இதுகுறித்து ஏதாவது முடிவு அறிவித்தால், அது அரசியல் சட்டத்தை மீறியதாகும் என்றும் பாராளுமன்றத்தின் பணிகளில், நீதிமன்றம் தங்களுக்கு பயன் அளிக்கும் கருத்து என்றாலும், தலையிடாது என்பதை ஆழமாக பதித்து விட்டது.


அரசியல் சட்டத்தின் உட்கருத்தை சென்னை நீதிமன்றம் நன்றாக உறுதிப்படுத்திவிட்டது. நீதித்துறை பாராளுமன்ற பணிகளில் தலையிடுகிறது என்ற விமர்சனங்கள் சில நேரங்களில் வரும் இந்த காலகட்டத்தில் தங்கள் ஓய்வு வயது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது பாராளுமன்றம்தான் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் கூறிவிட்டனர். இது நிச்சயமாக பாராட்ட வேண்டிய ஒன்றாகும். நீதிபதிகளின் ஓய்வு காலத்தில் அவர்களின் ஆற்றலை, பல ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெறும் வகையிலும், பல்வேறு ஆணையங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் ஓய்வுகால பயன்களையும் அதிகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...