Tuesday, May 19, 2015

'நினைத்தது நடக்கும்...எந்த சிக்கலும் இல்லை!'- ஜெ. ஆவேசம்

சென்னை: என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை என்றும், கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும் என்றும், இதை யாராலும் தடை செய்ய முடியாது என்றும்  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,  " அதிமுக தலைமையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட கட்சியினர் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும் என பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அரசியல் எதிரிகள் கட்சியின் வளர்ச்சியைக் கண்டும், வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேருவதைக் கண்டும் பொறாமை கொண்டவர்களாக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வீழ்த்த நினைத்தவர்கள் வென்றதில்லை: என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை. பொய்ச் செய்திகளையும், பொருளற்ற வதந்திகளையும் பரப்பி, அதன் மூலமாவது அரசியல் மறுவாழ்வு பெற்றுவிட முடியுமா என முயற்சிக்கும் வீணர்கள் நமக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இவற்றையெல்லாம் புறந்தள்ள வேண்டும்.
அனைத்து சோதனைகளையும் கடந்து வெற்றி முகட்டில் நாம் நிற்கின்ற நேரமிது. மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்க, ஆனந்தத்துடன் வெற்றி விழா கொண்டாடும் காலமிது. சட்டத்தின் ஒழுங்குகளையும், வழிகாட்டும் நெறிகளையும் மதித்து அவற்றின்படி நம்முடைய அரசியல், ஆட்சி, நிர்வாக நடவடிக்கைகள் அமைய வேண்டும். அப்படித்தான் எப்போதும் நாம் செயல்பட்டு வந்திருக்கிறோம்.
எனவேதான், அடுத்தடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஒருதிட்டமிட்ட கால அட்டவணைப்படி நடைபெற்று வருகின்றன. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. நிதானமும், ஒழுங்கும் சட்டத்தின் வழிகாட்டுதல்படி அதிமுகவால் பின்பற்றப்படுவதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நிதானம் இழக்கும் அவசரச் செயல்களில் கட்சியினர் ஈடுபடுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு என்னை மன வேதனையில் ஆழ்த்த வேண்டாம்.
கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும். இதை யாராலும் தடை செய்ய முடியாது. ஆகவே, யாரும் கவலைப்பட வேண்டாம்" என்று  கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட  அதிமுக பிரமுகர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின்  தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர்  ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...