Thursday, March 17, 2016

எம்ஜிஆர் 100 | 22 - மதியூகத்தின் மறுபெயர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் தன் மனதில் எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர் அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல; அவரது ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.

கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.

அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.

அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர். புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கும் முன்பே, ஆர்வ மிகுதியால் முதன் முத லாக மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தாமரைப் பூ உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். மேலும் சில இடங்களிலும் தாமரைப் பூ கொடி ஏற்றப்பட் டது. ஒரு சில இடங்களில் கொடிகளை மாற்றுக் கட்சியினர் கிழிப்பதாகவும் கொடிக்கம்பங்களை வெட்டுவதாகவும் செய்திகள் வெளியாயின.

பின்னர், அதிமுக கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தவுடன் இதுபற்றி அவரிடம் கேட்கப் பட்டது. ‘‘எங்கள் புதிய கட்சியின் கொடியை யாரும் இனிமேல் கிழிக்க மாட்டார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவர் அவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறியதற்கான காரணம் கட்சிக் கொடி அறிமுகமானபோதுதான் எல்லாருக்கும் தெரிந்தது. அதிமுக கொடியில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் யோசனைப்படி அந்தக் கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மீனவ நண்பன்’படத்தில்

‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’

பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்

‘தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’

என்ற வரிகள் இடம்பெறும்.

அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் தரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச் சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.

ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன் னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’

மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேல் சபை உறுப்பினராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார். பின்னர், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் ஆனார் அங்கமுத்து. அந்தப் பதவியில் அவரது பணிகளை பாராட்டி ஓராண்டே நிர்ணயிக்கப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை மூன்று ஆண்டுகளாக நீட்டித்தார் எம்.ஜி.ஆர்.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
Keywords: எம்ஜிஆர். தொடர், எம்.ஜி.ஆர் தொடர், எம்.ஜி.ஆர் வாழ்க்கை, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் கதை, மனிதநேயம்

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...