Tuesday, March 29, 2016

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா


ஜப்பானின் டொயோடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது இனோவா. சொந்த உபயோகத்துக்கான வாகனம் மட்டுமின்றி வாடகைக்கார் நிறுவனங்களின் பெரும்பாலான தேர்வு இனோவா என்றால் அது மிகையில்லை.
எந்த ஒரு நல்ல தொடக்கமும் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் இனோவா உற்பத்தியை நிறுத்திவிட டொயோடா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய பிராண்டான கிறிஸ்டாவை சந்தைப்படுத்த உள்ளது டொயோடா. அனேகமாக இனோவாவுக்கு பிரிவுசார விழாவே பெங்களூரில் உள்ள ஆலையில் நடத்தப்பட்டுவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்ற டொயோடாவின் புதிய வரவான கிறிஸ்டா, இனி இந்தியச் சாலைகளில் வலம் வர உள்ளது.
இனோவாவுக்கு மாற்றாக வரும் கிறிஸ்டா அதைவிட பல மடங்கு மேம்பட்டது. இது இனோவாவை விட நீளமானது. அதைவிட அதிக திறன் கொண்ட இன்ஜின் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தற்போது இனோவா மாடல் காரின் விலை ரூ.17 லட்சமாகும். புதிய மாடல் கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சமாக இருக்கும் என தெரிகிறது.
இனோவாவைவிட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கொடுக்கும் தொகைக்கு மிகவும் உண்மையான உழைப்பு மற்றும் சொகுசான பயணத்தை அளிக்கக் கூடியது என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்டா 2.4 லிட்டர் இன்ஜின் 2ஜிடி எப்டிவி நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டது. இது 142 பிஹெச்பி சக்தியும் 342 நியூட்டன் மீட்டர் டார்க் அளவையும் கொண்டது. இது லிட்டருக்கு சோதனை ஓட்டத்தின்போது 14 கி.மீ முதல் 16 கி.மீ. தூரம் ஓடியதாம். 5 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் மாடலில் 6 கியர்களைக் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உள்புறம் மிகவும் உயர் ரக தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. பயணிகள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்க போதிய இடவசதி, 7 அங்குல தொடுதிரை மானிட்டர் மிகச் சிறந்த பொழுது போக்கு அம்சங்களை அளிக்கக் கூடியது. போதிய விளக்கு வசதி, சூழலுக்கேற்ப உள்புற குளிர் நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதே பிரிவில் உள்ள பிற நிறுவன தயாரிப்புகளைக் காட்டிலும் இனோவாவுக்கு அதிக கிராக்கி இருந்ததற்கு அதன் செயல்பாடு மட்டுமின்றி விலையும் ஒரு காரணமாக இருந்தது. கிறிஸ்டாவும் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்ந்து பிற நிறுவனத் தயாரிப்புகளுக்குச் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. டொயோடா நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதோடு முந்தைய மாடலை முற்றிலுமாக நிறுத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
முன்பு குவாலிஸ், தற்போது இனோவா.
புதிய வரவுகள் பழையனவற்றை அடித்துச் செல்லும். கிறிஸ்டாவின் வரவு இனோவாவை ஓரங்கட்டிவிட்டது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...