Thursday, March 17, 2016

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர் சுகி சிவம்

ஜாலியாகக் கஷ்டப்படுங்கள்!

நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மகன் பி.காம். படித்துக் கொண்டிருக்கும் மாணவன்தான். ""மேலே என்ன படிக்கப் போகிறாய்? சிஏ. படிக்கும் எண்ணம் உண்டா?'' என்றேன். "இல்லை' என்று ஒரு வரி பதிலை உதிர்த்துவிட்டு ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டி.வி.யில் சேனல் விளையாட்டைத் துவக்கிவிட்டான். நான் விடுவதாக இல்லை. ""ஏன்... சி.ஏ. படிக்கலாமே... என்ன கஷ்டம்?'' என்றேன். ""சி.ஏ. பாஸ் பண்ணனும்னா நிறைய நேரம் படிக்கணுமாம். பதினெட்டு மணி நேரம் படிக்கணும்னு ஒரு ஆடிட்டர் சொன்னாரு. நான் ஆடிட்டேன். பதினெட்டு மணி நேரம் யார் படிக்கிறது? போரு... ரொம்ப கஷ்டம்'' என்றான். படிக்கும் வயதில் படிக்கக் கஷ்டப்படுபவர்கள் பிற்காலத்தில் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள் என்பதை அவனுக்குப் புரியவைக்க நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

இன்னொரு மாணவர் கதை.

அவர் வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் ஒரு கல்லூரி. அதற்காக மோட்டார்பைக் வாங்கிக் கொடுத்துள்ளார் அசட்டு அப்பா. ஆனால் மாணவர் மோட்டார் பைக்கில் கிண்டி ஸ்டேஷனுக்கு வருவார். அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி மாம்பலம் வருவார். அங்கு தி. நகர் பஸ் டெர்மினஸில் தன் பெண் நண்பியுடன் பஸ்ஸில் அமர்ந்து கலகலப்பாய்க் கலந்துரையாடியபடி கிண்டி தாண்டி வந்து கல்லூரியில் இறங்குவார். மாலை மறுபடியும் அதேபோல் தி. நகரில் அவரைப் பாதுகாப்பாக விட்டுவிட்டு ரயில் பிடித்து கிண்டி வந்து பைக்குடன் வீடு திரும்ப மணி ஏழரை ஆகிவிடும். காதல் சரிதான். அதற்காகக் காலத்தைத் தொலைக்கிறார். நிகழ்காலத்தை மட்டுமல்ல, தன் எதிர்காலத்தையும் தொலைக்கிறார். இது இந்தியாவின் போதாத காலம். இது நியாயமா? கஷ்டப்பட வேண்டிய இளம் பருவத்தில் ஜாலியாக இருக்கவே அவர் ஆசைப்படுகிறார்.

ஆசை ஆசையாய்த் தன் மகளை வளர்த்த அம்மா ஒருத்திக்குத் திடீர் என்று பி.பி., சர்க்கரை... எல்லாக் கஷ்டமும். காரணம் என்ன தெரியுமா? ரொம்ப சிறிது. மகளை எப்படியாவது எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க வேண்டும் என்பது அன்னையின் ஆசை. மகளோ சிரமப்பட்டு யார் படிப்பது என்ற ஒரே காரணத்துக்காக மறுத்துவிட்டாள். தாயின் கனவு அறுந்தது. பி.பி. பிறந்தது. படிக்க வேண்டிய காலத்தில் படிப்பதற்குக் கஷ்டப்பட்டால் எதிர்காலம் என்னவாகும்? யோசிக்க வேண்டாமா?

ஈரோட்டில் சி.கே.கே. அறக்கட்டளை என்கிற தரமான இலக்கிய அமைப்பு நடத்திய விழாவில் நண்பர் லேனா தமிழ்வாணன் ஒரு நல்ல கருத்தைச் சொன்னார். காசு கொடுத்து அவர் வாங்கிய புத்தகத்தில் ஒரு வரிக்கு - அந்தப் புத்தகத்தின் விலை முழுவதும் கொடுக்கலாம் என்றார். அது என்ன வரி? "கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள்' என்பதே.

ஆம். வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்பட்டால் என்ன?

அது மட்டுமல்ல. இனம் புரியாத எதிர்பாராத கஷ்டங்கள் வராமல் இருக்கத் திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே. காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்கப் படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே. உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே. பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்கச் சமையல் என்கிற கஷ்டம் படலாமே. ஒழுங்கற்ற எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க, திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.

எனவே கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள் என்ற வாக்கியம் ஒரு வாழ்க்கைச் சூத்திரம்.

பிள்ளைப் பேறுகூட ஒரு கஷ்டம்தான். தாய் அதைப் படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலமுறை ஜாலியாக இருக்க விரும்புகிறது. கஷ்டமே இருக்கக் கூடாது என்று கனவு காணுகிறது.

ஆப்ரஹாம் லிங்கன் சின்ன வயதில் கஷ்டப்பட்டார். ஜனாதிபதியாக உயர்ந்து நின்றார். வயலில் கஷ்டப்பட உழவன் தயாராக இல்லை என்றால் எவனுக்காவது சோறு கிடைக்குமா?

"நீ சேற்றில் கால்வைப்பதால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்கிறோம்' என்று உழவனுக்குப் புதுக்கவிஞன் நன்றி கூறுகிறான். உழவு என்ற சொல்லே சிரமத்தைப் புலப்படுத்தும் சொல்தான்.

பள்ளிக்கு நடக்க, புத்தகம் திறக்க, பாடம் படிக்க, துணிமணிகளை அடுக்க, அம்மா அப்பாவுக்கு உதவியாக உழைக்க இளம்பிள்ளைகள் மறுதலிக்கிறார்கள். இது சோம்பல். மனநோய். நாளைய பெரும் துயருக்கான வித்து. சோக கீதத்தின் பல்லவி. வெற்றியாளனை விளக்கிய தமிழ்மறை, "மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார்' என்று உழைப்பைத்தான் உயர்த்திப் பேசியது. இன்று கொஞ்சமாகக் கஷ்டப்படாதவர்கள் நாளை நிறையவே கஷ்டப்படப் போகிறார்கள் என்று எச்சரிக்கிறேன்.

சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறது. இதை மாணவருக்கு உணர்த்த ஆசிரியர் ஒரு வழி செய்தார். கூட்டில் இருந்து அது வெளியேறும் துயரத்தைப் பார்க்கட்டும் என்று மாணவர் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார். அது கூட்டில் இருந்து வரும் வேதனையைக் கண்ட மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு அது வெளியேறும் ஓட்டையைப் பெரிதுபடுத்தினான். அது சுலபமாக வெளி வந்துவிட்டது. மாணவன் மகிழ்ந்தான். ஆனால் வண்டு மகிழவில்லை.

வெளியே வந்தும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்..? அதன் சிறகுகளை அசைக்கக்கூட முடியவில்லை. செய்தி அறிந்த ஆசிரியர் காரணம் கண்டுபிடித்தார். கூட்டில் இருந்து சிறிய துளைவழி வெளியேறச் சிரமப்படும்போதுதான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்துப் பழகுகிறது. அதற்கு வாய்ப்பே இல்லாததால் இறகுகளை அசைக்க அதற்குத் தெரியவே இல்லை.

சிரமங்கள்தான் நம்மைப் பலப்படுத்துகின்றன. கஷ்டங்கள்தான் நம்மை வலுப்படுத்துகின்றன. துயரங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...