Saturday, March 26, 2016

அனுமனிஸம் தெரியுமா?

சொல் வேந்தர்  சுகி சிவம்

அனுமனிஸம் தெரியுமா?

சின்னஞ் சிறுசுகள் இருக்கிற இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். "குபீர் குபீர்' என்று சிரிப்பொலி, "ஓ... ஆ...' என்கிற ஒலி அலைகள் இவையெல்லாம் இளசுகளின் முரசுகள். காரணம் இன்றியே கலகலப்பாக இருத்தல் இளமையின் இயல்பு. அதனால்தான் திருவெம்பாவையில் இளம்பெண்களை எழுப்பும் பாடல்களில், "முத்தன்ன வெண்நகையாய்', "ஒள் நித்தில நகையாய்' என்று நகையை, சிரிப்பைக் குறித்து விளிப்பதாக மணிவாசகர் பாடுகிறார். காசு கொடுத்தாலும் கலகலப்பு வராத காலம் முதுமை. சாப்பிடும்போது கூட, "அந்தப் பாயசத்தைப் போட்டுத் தொலை', "அந்தச் சனியனை எடு' என்று அலுத்தும் சலித்தும் உண்ணுவதே கிழத்தனம். வாழ்க்கை வறண்டுவிட்டது.

உற்சாகம் செத்துவிட்டது. மனம் மரணித்துவிட்டது. "டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வு முதுமையில் ஆட்டிப் படைக்கிறது. இளமையில் உற்சாகமும் முதுமையில் சோர்வும் வாழ்வின் அமைப்பு. ஆனால் இளமையிலேயே சோர்வு இருந்தால் வாழ்க்கை என்னாவது? ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல் என்று இளைஞர்கள் சோர்ந்து வழிகிறார்கள். இத்தகைய உடற்குறைபாடுகள் காரணத்தால் வந்த சோர்வு எளிதாகக் களையத் தக்கது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, அரைக் கீரை, உளுத்தங்கஞ்சி, பேரீச்சம் பழம், முட்டை, பால், தயிர் என்கிற உயிர்ச்சத்தும் இரும்பு, கால்சியம் நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டுச் சேர்த்தால் உடற்சோர்வை விரட்டலாம். விசையுறு பந்தினைப் போல் விண்ணில் குதிக்கலாம்.

மனச்சோர்வு (டிப்ரஷன்) வந்தால் என்ன செய்வது? பூலோக சுவர்க்கமான அமெரிக்காவில் சின்னஞ்சிறிசுகள், பள்ளிப் பிள்ளைகள், கை நிறையக் காசு கொழிக்கும் இளைய தொழிலதிபர்கள், வாலிப வணிகர்கள்கூட இன்று டிப்ரஷனில் சோர்ந்து போகிறார்கள். சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை. சம்சாரிப்பதில் அக்கறை இல்லை. எதிலும் அலட்சியம், ஈர்ப்பில்லை. மானுட மண்புழுக்களாக வட்டமடித்துப் புதைந்து கொள்ளும் மனச் சோர்வில் தவிக்கிறார்கள். என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? இரண்டாயிரத்து இருபதில் உலகம் ஒரு கொள்ளை நோயால் கொண்டு போகப்படும். அது எய்ட்ஸ் அல்ல. டிப்ரஷன் என்பது அமெரிக்க உளவியல் ஆய்வு! அதற்கு என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? வாழ்வின் எதார்த்தமான உண்மைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணங்களின் அலை வீச்சே மனம்... மனத்தின் இயக்கம். ஒரு அலை எவ்வளவு உயரமாக எழுந்து ஆடுகிறதோ அவ்வளவு மூர்க்கமாகத் தரையில் எறியப்படும். ஓங்கி அடி விழும். எழுச்சியைத் தொடர்வது வீழ்ச்சி.

ஒவ்வொரு எழுச்சியும் வீழ்ச்சியில்தான் முடிவடையும். இந்த வீழ்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் சோர்வடைகிறார்கள். ஒவ்வொரு வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாமல் மறுபடியும் எழுவதே உயிர்ப்பு இயற்கை, வாழ்முறை. வீழ்ச்சியின் வேகத்தை மீண்டும் எழுவதற்கான வேகமாக மாற்றிக்கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் இந்தக் கடல் அலைகளின் எழுச்சி, வீழ்ச்சியைப் பூமி தாங்கிக் கொள்ள முடியாத மாதிரி, மனசின் எழுச்சி, வீழ்ச்சியை உடம்பு தாங்க முடிவதில்லை.

எனவே உடம்பைப் பலப்படுத்தினால் பாதி வெற்றி. வாழ்வின் இயக்கத்தை விளங்ள்கிக்கொண்டால் மீதி வெற்றி. இதற்கு மேலும் சோர்வு தாக்காமல் இருக்க அருமையான யோசனை சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள். ராமாயணத்தில் அனுமனுக்கு "மகா உத்சாகாய' என்று ஒரு நாமம் உண்டு. மிகவும் உற்சாகம் - சுறுசுறுப்பு உள்ளவன் என்று பொருள். அவன் சோர்ந்த இடங்கள் இல்லையா? உண்டு. சீதையைத் தேடிப் போகும்போது கடல் கடக்க வேண்டிய இடம். எல்லோரும் நம்மால் முடியாது என்று சோர்ந்து சுருண்டபோது அனுமனும் சுருண்டு சோர்ந்தான். எவ்வளவு பெரிய மனிதனுக்கும் டிப்ரஷன் வரும் என்பதற்கு இதுவே அடையாளம். அப்போது ஜாம்பவன்தான் அனுமனைத் தட்டி எழுப்பினார். ""அடேய்... இந்தக் கடலைக் கடப்பது உனக்கு சிறிய வேலை'' என்று சொல்லிச் சோர்வை விரட்டினார்.

அனுமனது நம்பிக்கைத் தீயை ஊதி ஊதி உலை வைத்தார். விஸ்வரூபம் எடுத்து விண்ணில் பாய்ந்தான் ஆஞ்சநேயன். என்ன பொருள்? நாம் சோர்வடையும்போது நமது பலத்தை நினைவூட்டும் நல்ல நண்பர்கள் நம்கூட இருந்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை தூண்டப்பட்டால் வெற்றி நிச்சயம். அதையும் தாண்டிக் கடலில் பறக்கும்போது அனுமனுக்கு மீண்டும் சோதனை. சோர்வு. எப்படி? மைந்நாக மலை. அங்கார தாரை, சுரசை என்ற மூவரால் தொடர்ந்து தொல்லைகள் வந்தன.

தன்னம்பிக்கை தள்ளாடியதும் கடவுள் நம்பிக்கைக்குத் தாவுகிறான் அனுமன். ராம நாமத்தை ஜபித்தால் துன்பம் நீங்கும் என்று "ராம என எல்லாம் மாறும்' என்று ராம நாமம் சொல்லுகிறான். கவலையைக் கடந்து இலங்கையை மிதிக்கிறான். தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. அரிசியும் கோதுமையும் மாதிரி. ஒன்று இல்லாதபோது மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காரில் மலைப்பாதையில் போகிறபோது ஒரே கியரில் வண்டி போகுமா? போகாது. கியர் மாற்றி கியர் போட்டுக் காரை மலைமீது ஓட்டவில்லையா? அப்படித்தான்.

வாழ்க்கைப் பாதையும் மலைப் பயணம் மாதிரிதான். கியர் மாற்றி கியர் போடுகிற மாதிரி தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திப் பயணத்தை நிகழ்த்தலாம். "தன்னம்பிக்கை உடையவன் கடவுளைக் கும்பிடக் கூடாது... கடவுள் நம்பிக்கை உள்ளவன் சுயமுயற்சி செய்யமாட்டான்...' என்கிற வெட்டி விஷயங்களை வெளியே வீசிவிட்டு முன்னேறுகிற வழியைப் பாருங்கள். தன்னம்பிகையோடு இரு... அது தளரும்போது தட்டிக் கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு... அதற்கும் வழியில்லையா? இறை நம்பிக்கையைப் பயன்படுத்து. தயக்கம் இன்றி மாறி மாறி இவற்றைப் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்கப் பார். இதுவே அனுமனிஸம்... நண்பனே... இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...