Saturday, June 11, 2016

பாஸ்போர்ட் உரிமையாளர்கள் 48 பேர் நேரில் விளக்கம் அளிக்க போலீஸ் சம்மன்

ஆலந்தூர்,

நங்கநல்லூர் தபால் பெட்டியில் இருந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 48 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பழவந்தாங்கல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றார். அப்போது தபால் பெட்டியில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தபால் துறை உயர் அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஓப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பாஸ்போர்ட்டுகளை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மீண்டும் அதே தபால்பெட்டியில் 6-ந்தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந்தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 3 நாட்களில் அந்த தபால் பெட்டியில் இருந்து மொத்தம் 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

மாயமானவை

அந்த பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை வைத்து மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதிகளை சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாகவும், இதுபற்றி போலீசில் புகார் செய்து மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

48 பேருக்கு சம்மன்

ஆனால் மீட்கப்பட்ட அனைத்து பாஸ்போர்ட்டுகளும் காலாவதியாகாதவை என தெரிகிறது. எனவே அவை கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்ததா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் இருந்த முகவரியை வைத்து கொல்கத்தா, டெல்லி, மதுரை, திருவனந்தபுரம், திருச்சி, ராமநாதபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் உள்ள 48 பேருக்கு இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அந்த முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த சம்மன் கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்துக்குள், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி கோரப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. விசாரணையா?

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

பாஸ்போர்ட்டுகள் கிடந்த தபால் பெட்டியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அதில் பாஸ்போர்ட்டை போட்டுச்சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த தபால் பெட்டி அருகே உள்ள தனியார் வங்கியின் நுழைவுவாயில் முன் கண்காணிப்பு கேமராவை பொருத்த பழவந்தாங்கல் போலீசார் அறிவுறுத்தினார்கள். அதன்படி அங்கு கேமரா பொருத்தப்பட்டது.

அந்த பகுதிகளில் மாறுவேடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...