Saturday, June 11, 2016

மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா

ஆர்.சி.ஜெயந்தன்

முத்து மண்டபம்

“கண்ணா கண்ணா வாராய்… காதல் என்னைப் பாராய்…ஜாலம் பண்ணாதே இப்போ நீ எங்கே போறாய்” என்ற ஜிக்கியின் குரலில் அமைந்த புகழ்பெற்ற பாடலுக்கு ஒய்யாரமான அசைவுகளில் நடனம் ஆடிக்கொண்டு ‘மாயமனிதன்’(1958) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. இந்தப் படத்தின் நாயகன், ஏவி.எம்.மின் ‘சம்சாரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீராம்.

இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயக நடிகராக உயர்ந்தார் அசோகன். ‘இன்விசிபிள் மேன்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி டி.பி. சுந்தரம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகு நடனம், நடிப்பு இரண்டுக்காகவும் கொண்டாடப்படும் முன்னணி நட்சத்திரமாக சந்திரகாந்தா உயர்ந்தார்.

காவிரியின் மகள்

கீழத் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமம்தான் சந்திரகாந்தாவின் சொந்த ஊர். இந்த ஊரின் நிலக்கிழார் டி.என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் தம்பதிக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் சந்திரகாந்தா. திராவிட இயக்கத்தின் மீது தீவிரப் பிடிப்பு கொண்ட குடும்பம்.

சந்திரகாந்தாவின் அக்கா வத்சலாவை திருமணம் செய்துகொண்டவர் எஸ்.எஸ்.பி. லிங்கம் என்கிற வேதாசலம். இவர் அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். அண்ணா, சென்னை வரும்போதெல்லாம் ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலையில் வசித்துவந்த வேதாசலம் வீட்டில்தான் தங்குவார்.

சிறு வயது முதலே நடனத்தில் சந்திரகாந்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. 9-ம் வகுப்பு படித்து முடித்திருந்த சந்திரகாந்தா, பள்ளி விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரகாந்தாவும் அவரது அண்ணன் சண்முகசுந்தரமும் (`கரகாட்டக்காரன்’ புகழ்) அண்ணாவின் வாழ்த்துகளைப் பெற்று அவரது அன்புக்குரியவர்கள் ஆனார்கள்.

வேதாசலம் வீட்டில் அண்ணா தங்கியிருக்கும் தருணங்களில் அவரைக் காண அங்கே வருவார் ‘நடிப்பிசைப் புலவர்’ என்று நாடக ரசிகர்களால் அழைக்கப்பட்ட கே.ஆர். ராமசாமி. ‘கலைவாணர்’ என்.எஸ். கிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் ‘கிருஷ்ணன் நாடக சபாவை 1943-ல் தொடங்கிய கே.ஆர்.ஆர், சமூக சீர்திருத்த நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி, திராவிட இயக்கத்துக்கு வலு சேர்த்துவந்தார். இவரது நாடக சபாவுக்காகவே அண்ணா நாடகங்களை எழுதிவந்த காலம் அது.

ஒருமுறை வேதாசலம் வீட்டுக்கு அண்ணாவைக் காண வந்த கே.ஆர்.ஆர்., வீட்டின் ஓர் அறையில் நட்டுவாங்கம் செய்யும் சத்தம் ஒலிப்பதைக் கேட்டு, அந்த அறையில் நுழைந்தார். அங்கே 14 வயதுப் பருவப் பெண்ணாக லட்சுமிகாந்தத்தின் (இதுதான் சந்திரகாந்தாவின் இயற்பெயர்) துள்ளலான நடனத்தைக் கண்டார்.

வேற்று மனிதர் ஒருவர் வந்திருக்கிறார் என்று வெட்கப்பட்டு ஆட்டத்தை நிறுத்திவிடாமல் ஆடிக்கொண்டிருந்தார் சந்திரகாந்தா. நடனம் முடிந்ததும் குருவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வந்தவர், கே.ஆர்.ஆருக்கும் வணக்கம் செய்தார். ஆச்சரியப்பட்ட கே.ஆர்.ஆர்., “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். “உங்களைத் தெரியாத பேதையா நான்?” என்று துடுக்காக பதில் சொன்ன அந்தக் கணத்தில் தனது நாடகத்துக்குக் கதாநாயகி கிடைத்துவிட்டதாக நினைத்தார் கே.ஆர்.ஆர்.

15 வயதில் தொடங்கி கே.ஆர்.ஆரின் பல பிரச்சார நாடகங்களில் நடித்துச் சிறந்த நாடக நடிகையாகப் புகழ்பெற்றார் லட்சுமிகாந்தம். ஒரு நாடகத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் சந்திரா. அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்திருந்தார் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன்.

நாடகத்தின் முடிவில் “இந்த நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த காந்தம், நாடகக் கலைக்குக் கிடைத்த அரிய சொத்து” என்று பாராட்டினார். நெடுஞ்செழியன் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து கே.ஆர்.ஆர்., லட்சுமிகாந்தத்துக்கு `சந்திரகாந்தா’ என்று பெயர் சூட்டினார். லட்சுமிகாந்தம் என்ற புகழ்பெற்ற மற்றொரு நடிகையும் இருந்ததால் பெயர் மாற்றம் சந்திரகாந்தாவுக்குக் கைகொடுத்தது.

நவரச நாயகி

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைவது அபூர்வம் என்ற காலகட்டம் அது. அப்போது முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வெற்றிகொடுக்க விரும்பினார் ‘சிட்டாடல்’ என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து இயக்கிய ஜோசப் தளியத். அந்தப் படம் ‘விஜயபுரி வீரன்’.

குழு நடனங்களில் டான்ஸராகப் புகழ்பெற்றிருந்த சி.எல். ஆனந்தனைக் கதாநாயகனாகவும் ஹேமலதா என்ற புதுமுகத்தைக் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்த தளியத், இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சந்திரகாந்தாவை ஒப்பந்தம் செய்தார். ஏ.சி. திருலோகச்சந்தர் திரைக்கதை எழுதியிருந்த இந்தப் படத்தில் சாந்தியாக நடித்து கதாநாயகியைவிடப் புகழ்பெற்றார் சந்திரகாந்தா.

அடுத்து கே.சங்கர் இயக்கத்தில் 1963-ல் வெளியான ‘இது சத்தியம்’படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். படத்திலிருந்து விலகிக்கொள்ள அவருக்குப் பதிலாக அசோகன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை சந்திரகாந்தா. ரா.கி. ரங்கராஜன் வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக எழுதி புகழ்பெற்று பின் திரைப்படமான இந்தப் படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

“சரவணப் பொய்கையில் நீராடி உனைத் தந்தருள் என்றேன் முருகனிடம்” என்ற அந்தப் புகழ்பெற்ற பாடல் காட்சியில் ஆற்றில் குளித்தபடி நடித்தார் சந்திரகாந்தா. அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது இந்தப் படம் (இதே படத்தில் இடம்பெற்ற “சிங்கார மனசுக்குத் தேரைக்கட்டி, சின்னச் சின்ன இடையில் பூவைக்கட்டி” என்ற பாடலில் நடனமாடி, துணை நடிகையாக அறிமுகமான ஹேமமாலினி அடுத்த சில ஆண்டுகளில் இந்திப் பட உலகில் புகழ்பெற்ற கதாநாயகியானார்).

அடுத்த ஆண்டே ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இசைச் சித்திரமான ‘கலைக்கோயில்’ படத்தில் கதாநாயகியாக நடித்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி பெண் ரசிகர்களின் அன்பையும் பெற்றுக்கொண்டார் சந்திரகாந்தா.

சவாலும் துணிச்சலும்

சி.எல்.ஆனந்தன், அசோகன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் மீண்டும் சந்திரகாந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த பிறகு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்க அன்றைய கதாநாயகிகள் மறுத்தார்கள். ஆனால் சந்திரகாந்தா இதில் விதிவிலக்கான நட்சத்திரம் மட்டுமல்ல, சவாலான கதாபாத்திரங்களைத் தயங்காமல் ஏற்று நடித்ததால் ‘துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா’ என்றும் பெயரெடுத்தார்.

சிறந்த குரல்வளம், சிறந்த நடனத் திறமை, தரமான நடிப்பு ஆகியவற்றில் முத்திரை பதித்த அவரை நவரசத் திலகமாக உயர்த்தின அவர் ஏற்ற துணிச்சலான கதாபாத்திரங்கள். முத்துராமன் ஜோடியாக ‘முத்து மண்டபம்’படத்தில் அழகும் ஆபத்தும் இணைந்த பெண்ணாக, நாட்டியக் கலைஞர் குமுதவல்லி, நவயுக மங்கை கனகவல்லி ஆகிய இரண்டு பரிமாணங்களில் நடித்து ஆச்சரியப்பட வைத்தார்.

தன் திரைவாழ்வின் தொடக்கத்தில் இருந்த சந்திகாந்தா பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘பந்தபாசம்’(1962) படத்தில் சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணத்துக்காக ஏங்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.

தேவர் தயாரித்து இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் மீண்டும் மாற்றுத் திறனாளியாக நடித்துக் கவர்ந்த சந்திரகாந்தா, ‘துளிசிமாடம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது உட்பட சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகாமி கலை மன்றம்

புதிய கதாநாயகிகளின் படையெடுப்பு மிகுந்திருந்த 60-களின் இறுதியில் சினிமாவிலிருந்து முற்றாக விலகிய சந்திரகாந்தா, செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு மணவாழ்வில் இணைந்தார்.

இந்தத் தம்பதியின் ஒரே மகள் தீபா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். 1978-ல் மறைந்த சந்திரகாந்தா திரையிலிருந்து விலகியபின் ‘சிவகாமி கலை மன்றம்’ என்னும் நாடக மன்றத்தைத் தொடங்கி பல புகழ்பெற்ற நாடகங்களையும் நடத்தினார். இவற்றில் பல திரைப்படங்களாகியிருக்கின்றன.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...