Sunday, November 13, 2016

சில்லரை கொடுத்து மருத்துவமனைக்குப் பாடம் புகட்டிய நோயாளி!


'

இந்தியாவில், இனி பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என மத்திய அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரு தினங்களாக இந்தியாவே ஸ்தம்பித்து உள்ளது. வியாபாரத் தளங்களில், 'புது ரூபாய் நோட்டுகள்தான் வேண்டும், அல்லது நூறு, ஐம்பதாக சில்லைறையாக வேண்டும்' என்கிறார்கள் வியாபாரிகள் அனைவரும்.இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு வங்கிகள், பெட்ரோல் பங்க், தபால் நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால், கடந்த இரு தினங்களாக பல பெட்ரோல் பங்க் மற்றும் மருத்துவமனைகள் இந்த அறிவிப்புகளை காதில் வாங்கிக்கொள்ளாமல், 'புது ரூபாய் நோட்டுகளைத் தான் வாங்குவோம் அல்லது சில்லரையாகத்தான் வாங்குவோம்' என்று சொல்லிவருகிறது.

இந்த நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மாட்டோம் என்று அடம்பிடித்த மருத்துவமனை ஒன்றில், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு போய் தக்கப் பாடம் புகட்டியுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுகந்தா சாலே. சில தினங்களுக்கு முன் இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், பி.பிபோடர் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமையன்று இரவு, 'சிகிச்சை முடிந்தது. சிகிச்சைக்கான கட்டணம் ரூபாய் 40 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு நோயாளியை அழைத்க்ச் செல்லலாம்' என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால், சுகந்தா சாலே குடும்பத்தினர் வங்கிக்குச் சென்று 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 40 ஆயிரத்தை எடுத்து வந்திருக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்று இரவே மத்திய அரசு, '500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவித்துவிட்டது. இதனால், இவர்கள் கொடுத்த 500, 1000 ரூபாய் தாள்களை மருத்துவமனை நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது. 'எங்களுக்கு 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் தாள்களாகத்தான் வேண்டும்; அதுவரை நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய இயலாது' என்றும் சொல்லியிருக்கின்றனர்.

'காசோலையாகத் தருகிறோம் டிஸ்சார்ஜ் செய்யுங்கள்' எனக் கேட்டதற்கும் மருத்துவமனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தா சாலேவின் குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்குப் பாடம் புகட்ட நினைத்தார்கள். அதன்படியே வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக பிரச்னையைச் சொல்லி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடத்தில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் காசுகளாக அனுப்பும்படி உதவி கேட்டுள்ளனர்.

இந்த வகையில் அவர்கள் சேகரித்துக் கொடுத்த 40 ஆயிரம் சில்லரையையும் ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள் சுகந்தா சாலே குடும்பத்தினர். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ இப்போது, 'சில்லரைகளாக வேண்டாம். காசோலையாக கொடுங்கள் வாங்கிக்கொள்கிறோம்' என்று யு டர்ன் அடித்திருக்கின்றனர். ''இந்தியாவில் மாற்றத் தக்க சில்லைறை காசுகளை கொடுக்கிறோம்.... நீங்கள் வேண்டாம் என்கிறீர்கள். வாங்க மறுத்தால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்போம்" என்று மிரட்டியுள்ளனர்.

இதன்பின்னர், 'சில்லறை காசுகளை வாங்குவதை தவிர வேறு வழியில்லை' என்ற முடிவுக்கு வந்த மருத்துவமனை நிர்வாகம், ஆறு ஊழியர்களைக் கொண்டு 'காசு சரியாக உள்ளதா?' என எண்ணிப் பார்த்தபிறகே, சுகந்தா சாலேவை டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

இதுவல்லவோ மருத்துவ சேவை!

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...