Thursday, November 10, 2016


கருப்புப் பணத்துக்குக் கடிவாளம்!

By ஆசிரியர் | Published on : 10th November 2016 01:37 AM |

இப்படியொரு அதிரடி முடிவை பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்க முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்களும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுமே கூட எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் என்று தெரிந்தும், அவர்களது வெறுப்பையும் விரோதத்தையும் தானும் அரசும் சம்பாதித்துக் கொள்ளும் என்பதை உணர்ந்தும்கூட இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியாக வேண்டும்.
ரூ.500, ரூ.1,000-க்கான காகிதச் செலாவணியை ஒரு அதிரடி உத்தரவின் மூலம் செல்லாமல் ஆக்குவது என்பது எளிதில் எடுத்துவிடக் கூடிய முடிவல்ல. இதற்குப் பின்னால் தீவிரமான ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படியொரு திட்டம் அரசிடம் இருக்கிறது என்பதையும், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் ரகசியமாகப் பாதுகாப்பது என்பது அசாத்தியம். ஏதாவதொரு விதத்தில் அது வெளியாகிடும். ஊடகங்களுக்குக் கசிந்துவிடும். கருப்புப் பண முதலைகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு விடும். அதையும் மீறி, ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது என்றால் அதுவே மிகப்பெரிய வெற்றி.
சுதந்திர இந்திய சரித்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது துணிச்சலான நடவடிக்கை இது. பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகள் தேசியமயமாக்கலும், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேர்ந்த காலகட்டத்தில், பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டு, தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்திய பிரதமர் நரசிம்ம ராவின் முடிவு, உலக வல்லரசுகளின் எதிர்ப்பையும், அவர்கள் விதிக்க இருக்கும் பொருளாதாரத் தடையையும் நன்றாகவே உணர்ந்திருந்தும், 1998-இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு போக்ரானில் அணுஆயுத பரிசோதனை நடத்தி இந்தியாவை அணுஆயுத பலம் பொருந்திய நாடாக அறிவித்தது ஆகியவற்றிற்குப் பிறகு, இப்போது கருப்புப் பணத்துக்கும், கள்ளப் பணத்துக்கும் எதிராக நரேந்திர மோடி அரசால் எடுக்கப்பட்டிருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைச் செல்லாததாக்கும் இந்த முடிவு, சமூக விரோதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.
உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாலே போதும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும். இதைக் குறிவைத்துத்தான், நரேந்திர மோடி அரசு மறைக்கப்பட்ட வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. அதை பயன்படுத்தி கொண்டு கருப்புப் பணத்துக்கு வரி கட்டி சரி செய்து கொள்ள அரசு அளித்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் போனவர்கள், இப்போதைய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்காக நாம் ஏன் அனுதாபப்பட வேண்டும்?
இந்தியாவில் ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடி கருப்புப் பணம் புழங்குகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் வெறும் 1% பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள். அன்றைய புள்ளிவிவரப்படி, கணக்குத் தாக்கல் செய்யும் 2.87 கோடி பேர்களில், 1.62 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருப்பதாகக் கணக்குக் காட்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 26 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன.
இதைக் குறி வைத்துத்தான் மோடி அரசு, பரவலாக வங்கிக் கணக்குகள் தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுக்களின் மதிப்பு ஏறத்தாழ ரூ.16 லட்சம் கோடி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இதில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களின் அளவு மட்டுமே 85%. இந்தப் பணம் வங்கிப் பரிமாற்றமாக இல்லாமல் இருப்பதால்தான் கருப்புப் பணம் உலவ முடிகிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைத் தடாலடியாகச் செல்லாததாக்குவதால், ஒன்று அனைத்துப் பணமும் வங்கி வளையத்துக்குள் வர வேண்டும், அதற்குக் கணக்குக் காட்டப்பட்டு வருமானவரி கட்டப்பட வேண்டும். அப்படிக் கணக்குக் காட்ட முடியாவிட்டால் குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுக்களை அச்சடித்து உலவ விட்டிருக்கிறது. இப்போது அந்த நோட்டுக்கள் செல்லாததாகிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பட்டிருக்கிறது.
அரசு எதற்காகப் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரேயடியாக பணப் பரிமாற்றம் அனைத்தையும் வங்கிப் பரிவர்த்தனையாக மாற்றுவது சாத்தியமல்ல. அடுத்த சில ஆண்டுகளுக்கு, நாணயமான பரிவர்த்தனைக்கு உதவ புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதைப் படிப்படியாகக் குறைத்து வங்கிப் பரிமாற்றம் மூலம் மட்டுமே பெரிய தொகைகளுக்கான பரிமாற்றங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என்று தோன்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடந்திருக்கின்றன. எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கப் புதிய கரன்சி நோட்டுக்கள் அடிக்கப்பட்டுத் தயார் நிலையில் வங்கிகளுக்கு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாள்கள் சாமானிய மக்கள் சிறிது சிரமம் அனுபவிக்க நேரும்தான். ஆனால், கருப்புப் பணத்துக்கு நிரந்தரக் கடிவாளம் போடுவதற்கு நாம் ஒத்துழைத்துத்தான் தீர வேண்டும்.
சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையோ, சிரமமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், அதே நேரத்தில் கருப்புப் பண முதலைகள் தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்காமல் பார்த்துக் கொள்வதிலும் அரசு கவனமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் இந்த அளவுக்குத் திட்டமிட்டு ஒரு நடவடிக்கை மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்பதை நினைத்தால் மலைப்பு மேலெழுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாக சரித்திரம் இந்த முடிவைப் பதிவு செய்யப் போகிறது.
"கருப்பு வெள்ளை நிஜம்!' என்ற தலைப்பில் 14.10.2016 அன்று "தினமணி'யில் வெளிவந்த தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், "ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களே இல்லாமல் ஆக்குவது அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிப் பரிமாற்றமாக்குவது என்கிற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போட்டு விடலாம். ஆனால், இதற்கு எந்த அரசும் முன்வராது. அதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இதுதான் கருப்பு, வெள்ளை நிஜம்!' என்று எழுதியிருந்தோம்.
துணிச்சலுடன் நரேந்திர மோடி அரசு, கருப்புப் பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறது. இதுதான் கருப்பு வெள்ளை நிஜம்!

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...