Friday, December 8, 2017

ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.





நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது.

கைரேகை:

ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், தர்மராஜன்... பொது மருத்துவத் துறை பேராசிரியர், டிட்டோ, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், பாலாஜி ஆகியோர், இடம் பெற்றிருந்தனர்.

குழு ஒருங்கிணைப்பாளராக, பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தான் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் அங்கீகார படிவத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழுவில் இடம்பெற்று இருந்த மருத்துவர்களிடம், இந்த வாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முதல் நாள் விசாரணையில், கலா, முத்துசெல்வன் ஆகியோர் ஆஜராகினர். மறுநாள் விசாரணையில், மருத்துவர் டிட்டோ, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர், மாதவன் ஆகியோர் ஆஜராகினர். நேற்று, மருத்துவர்கள், பாலாஜி, தர்மராஜன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர். காலை, 10:30 மணி முதல், பகல், 12:00 மணி வரை

தர்மராஜனிடமும், பகல், 12:00 மணி முதல், 1:50 மணி வரை பாலாஜியிடமும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெ.,க்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை கண்காணிக்கும் குழுவில் இருந்த, ஐந்து மருத்துவர்களில், பாலாஜி தவிர, மற்ற நான்கு பேரும், 'சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, தெரிவித்து உள்ளனர்.

மேலும், அவர்கள் கூறியுள்ளதாவது: அப்பல்லோ மருத்துவ மனையில், எங்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது; தினமும், அங்கு வந்து அமர்ந்துஇருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும், மருத்துவ செய்திக் குறிப்பை, ஒருவர் படித்துக் காட்டுவார். தினமும், அந்த அறையில் அமர்ந்து விட்டு, மாலையில் திரும்பி விடுவோம். ஒரு நாள் கூட, ஜெ.,வை சந்தித்தது இல்லை. இவ்வாறு, அந்த நான்கு மருத்துவர்களும், விசாரணையில் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள்:

அதேநேரத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றபோது, தானும், சசிகலாவும் மட்டுமே, அந்த அறையில் இருந்ததாக, மருத்துவர் பாலாஜி மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டுமின்றி, வேலுார், ஐதராபாத், பெங்களூரு பகுதியிலிருந்தும், சிறப்பு மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க வந்ததாக, இவர்கள் கூறிஉள்ளனர்.

வெளியூர் மருத்துவர்களை அழைத்து வரும் பணியை, பாலாஜி மேற்கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவர், கிலானியை, ஜெ.,விடம் அறிமுகப்படுத்தியதாக, பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெ.,விடம், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்லலாம் எனக் கூறியபோது, அவர் வர மறுத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியை மட்டும், மீண்டும், 27ம் தேதி, விசாரணைக்கு வரும்படி, ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.,வை பார்க்க, அரசு நியமித்த மருத்துவர் குழுவினரை கூட அனுமதிக்காதது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அரசு தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், அரசு ஆலோசகராக

இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த, விசாரணை கமிஷன் முடிவு செய்து உள்ளது.

தீபக்கிற்கு, 'சம்மன்':

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், முக்கிய நபர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி வருகிறது. 'அக்குபஞ்சர்' மருத்துவர் சங்கர், 12ம் தேதி; ஜெ., அண்ணன் மகள், தீபா, 13; அவரது தம்பி தீபக், 14; தீபாவின் கணவர் மாதவன், 15; மருத்துவர் மகேந்திரன், 19; முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், 20; முன்னாள் அரசு தலைமைச் செயலர், ராமமோகன ராவ், 21ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சொன்னது என்ன?

''நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்தேன்,'' என, மருத்துவர் பாலாஜி தெரிவித்தார். அவர் கூறுகையில், ''விசாரணை கமிஷனில், நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், பதில் கூறினேன். எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், பீலே வருகை குறித்து கேட்டார். அதற்கு, பதில் அளித்தேன். ஜெ.,க்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து கேட்டதற்கும், பதில் கூறினேன்,'' என்றார்.ஆனால், ஜெ., கைரேகை குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, பாலாஜி மறுத்து விட்டார். 



பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு?

ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், கமிஷனின் பதவிக் காலம், இம்மாதம் நிறைவு பெற உள்ளதால், ஆறு மாதங்கள் நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, செப்., 25ல், தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை கமிஷன், மூன்று மாதங்களுக்குள், அறிக்கை அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. விசாரணை கமிஷன், தற்போது தான் விசாரணையை துவக்கி உள்ளது; இன்னும் ஏராளமானோரிடம் விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷனின் பதவிக்காலம், டிச., 24ல் நிறைவு பெறுகிறது. எனவே, விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க கோரி, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அதை ஏற்று, கமிஷனின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...