Tuesday, December 5, 2017

முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் காலமானார்
By DIN | Published on : 05th December 2017 04:13 AM




முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 79.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர் திங்கள்கிழமை மாலை 5.20 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை மூத்த நடிகர் ராஜ் கபூரின் மகனும், நடிகருமான ரன்தீர் கபூர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக டயாலிசிஸ் சிகிச்சையை அவர் பல ஆண்டுகளாக பெற்று வந்தார்' என்றார்.
சசி கபூரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை காலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
ஹிந்தி நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனாக கடந்த 1938-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி சசி கபூர் பிறந்தார். கடந்த 1940-ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் சசி கபூர் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படங்களில், "ஆக்' (1948), "ஆவாரா' (1951) ஆகியவை சசி கபூருக்கு புகழைப் பெற்றுத் தந்தன.
இதையடுத்து கடந்த 1950-ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில் சசி கபூர் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1961-ஆம் ஆண்டில், "தர்மபுத்ரா' எனும் படத்தில் கதாநாயகனாக சசி கபூர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அதில் "தீவார்', "கபி கபி', "நமக் ஹலால்', "காலா ஃபாதர்' போன்ற திரைப்படங்கள், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ஹிந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவற்றில் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் சின்னமாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.
அவரது கலையுலக சேவையை பாராட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி இரங்கல்: ஹிந்தி நடிகர் சசி கபூரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், சசி கபூர் நடித்த கதாபாத்திரங்கள் பலதலைமுறைகளுக்கும் நினைவு கூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...