Wednesday, December 6, 2017

சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தை கைது செய்யக்கூடாது: பிடிவாரண்டுக்கு உயர் நீதிமன்றம் தடை

Published : 06 Dec 2017 20:12 IST

சென்னை



விஜயகாந்த் - கோப்புப் படம்

தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்துக்கு எதிராக ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டினை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னை திரும்பும் அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் 2011-க்குப் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக நடந்துகொண்டார். மதுரை செல்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையம் வந்த போது அவரிடம் கேள்வி கேட்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலுவிடம் மோதலில் ஈடுபட்டு வாக்குவாதம் ஆனது. இதில் அவர் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இது சம்பந்தமான வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடிந்து போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எதிர்தரப்பான குற்றம்சாட்டப்பட்ட விஜயகாந்துக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்க விஜயகாந்தை நேரில் ஆஜராக ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பலமுறை ஆஜராகாத விஜயகாந்துக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

டிச.5 அன்று கட்டாயம் ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. கடந்த வாரம் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருப்பதால் அவரால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆலந்தூர் நீதிமன்றம், விஜயகாந்த் மீது ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட்டினை பிறப்பித்து வழக்கை அடுத்த ஆண்டு பிப்.13-க்கு ஒத்திவைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு வழக்கறிஞர் வி.டி.பாலாஜி முறையிட்டார்.


அதனை ஏற்ற நீதிபதி வழக்கை விசாரித்து, பிடிவாரண்ட்டினை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நாளை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தையும் கைது செய்யக் கூடாது என விமான நிலைய காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தவும் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...