Sunday, February 25, 2018

முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மார்க்

Added : பிப் 24, 2018 21:21

முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கான ஆய்வறிக்கையை, உமாநாத் கமிட்டி, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்துள்ளது.

தமிழகத்தில், முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இடஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதை ஏற்காத, சென்னை உயர் நீதிமன்றம், 'இந்திய மருத்துவ கவுன்சில் எனப்படும், எம்.சி.ஐ., விதியின்படி, கவுன்சிலிங் நடத்த வேண்டும்.'அரசு பணியில் உள்ள, டாக்டர்களுக்கு சலுகை வழங்க ஏதுவாக, மலைப்பகுதி, தொலைதுாரம், குக்கிராமம் என்பதை, தமிழக அரசு வரையறை செய்து கொள்ளலாம்' என, உத்தரவிட்டது.இதையடுத்து, மலைப்பகுதி, தொலைதுாரம், குக்கிராமம் பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு, 10 முதல், 30 சதவீதம் வரை மதிப்பெண் அளித்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது; அதன்படி, 2017 - 18க்கான மாணவர் சேர்க்கையும் நடத்தி முடிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், மலைப்பகுதி, தொலைதுாரம், குக்கிராமம் போன்றவை குறித்து, சரியாக வரையறை செய்யவில்லை எனக்கூறி, அரசாணையை ரத்து செய்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்றமும், 'அரசு டாக்டர்களுக்கு வழங்கிய மதிப்பெண்களில், மலைப்பகுதி, தொலைதுாரம், குக்கிராமம் போன்றவை சரியாக வரையறை செய்யப்படவில்லை; விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை' என, கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, மலைப்பகுதி, தொலைதுாரம், குக்கிராமம் போன்ற பகுதிகளை வரையறை செய்ய, தமிழக மருத்துவ சேவை நிர்வாக இயக்குனர், உமாநாத் ஐ.ஏ.எஸ்., தலைமையில், ஆறு பேர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை வரையறை செய்து, ஆய்வறிக்கையை, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணனிடம் அளித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில், மலைப்பகுதி, தொலைதுாரம், குக்கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் வரையறை செய்யப்
பட்டுள்ளன.அங்கு பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு, 2018 - 19க்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது, 'நீட்' மதிப்பெண் அடிப்படையில், 10 முதல், 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆய்வறிக்கையின்படி, 70 சதவீத அரசு டாக்டர்கள் பயனடைவர். ஆய்வறிக்கை, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...