Tuesday, February 13, 2018

டி.என்.பி.எஸ்.சி. ‘குரூப் 4’ - ‘நகர்ப்புறத் தேர்வு’! - ‘கடினம்’ இருந்த அளவுக்கு வினாத்தாளில் தரம் காப்பாற்றப்படவில்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் மீது வந்த குற்றச்சாட்டு

Published : 12 Feb 2018 09:37 IST

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி




சிறு அசம்பாவிதமும் இன்றி, குரூப் 4 தேர்வு, மிக நேர்த்தியாக நடந்து முடிந்து இருக்கிறது. பல நூறு தேர்வு மையங்கள், பல்லாயிரம் கண்காணிப்பாளர்கள், பல லட்சம் தேர்வர்கள் என்று இரண்டே மாதங்களில் இந்த போட்டித் தேர்வினை தேர்வாணையம் நடத்தியுள்ளது.

அறிவிக்கை வெளியான நாளில் இருந்து, இணையத்தில் (மட்டுமே) விண்ணப்பிக்கும் முறை, அவரவர்க்கான தேர்வுக்கான நுழைவுச் சீட்டை காலத்தே அனுப்பி வைத்தல், தேர்வு மையங்களில் தேர்வர்கள் நடத்தப்பட்ட விதம், குறித்த நாளில் குறித்த நேரத்தில், எவ்வித குறைபாடும் இல்லாது துல்லியமாக அனைத்தையும் செயலாக்கிக் காட்டியுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

சில நாட்களாக, எதிர்மறை செய்திகளால் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நமது மாநிலத்தில், பள்ளிக் கல்வித் துறையும், பணியாளர் தேர்வாணையமும், மனிதவள மேலாண்மையில் முழு வெற்றி கண்டிருப்பது, நம்பிக்கை ஊட்டுவதாய் உள்ளது.

‘நீட்’ தேர்வின் போது நடைபெற்ற ‘சோதனை’ சம்பவங்கள் போன்று இல்லாமல், தேர்வாணையமும் தேர்வர்களும் இணைந்து, சுமுகமான முற்றிலும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் காட்டி உள்ளனர். உண்மையிலேயே, ‘வழி காட்டுகிறது - தமிழகம்’!

பொது அறிவுப் பகுதியில் இந்த முறை மிகப் பெரிய மாற்றம் பளிச்செனத் தெரிகிறது. காலம் காலமாக போட்டித் தேர்வுகளில் முக்கிய இடம் பிடித்து வந்த ‘இந்திய தேசிய இயக்கம்’ அதாவது சுதந்திரப் போராட்ட வரலாறு, முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு விட்டது. பொதுப் பாடப் பகுதியில், தமிழ்நாடு குறித்த, தமிழர் பண்பாடு, நாகரிகம், கலைகள் பற்றிய கேள்விகள் அறவே இல்லை.

இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத பகுதிகள்; நடப்பு நிகழ்வுகளில் அதிகம் கேள்விப்படாத செய்திகள்; அறிவியலில், தாவரவியல், விலங்கியல் விட்டு விலகி, இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகள்; கணிதப் பாடத்தில் மட்டும் கேள்விகள் கேட்டு, அறிவுத் திறன் சார்ந்த (aptitude) வினாக்களை ஓரிரண்டோடு நிறுத்திக் கொண்டது.


வியக்க வைக்கும் வினாக்கள்

சில வினாக்கள் நம்மை வியக்க வைக்கின்றன. ‘இந்தியா – மாலத்தீவு’ இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்?(எக்குவரின் 2017), 2017 டிசம்பரில் இந்திய விமானப் படையில் இருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தி எது? (எம்.ஐ.18 ஹெலிகாப்டர்), அக்டோபர் 2017-ல் ஜவுளித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? (SAATHI) போன்ற வினாக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 நிலை எழுத்தர் பணிக்கான தேர்வு எழுதும் தமிழக இளைஞர்களுக்கான வினாக்கள் போல் இருந்தன.

வினாக்களில் ஒரு வித ‘நகரத் தன்மை’ இருப்பதை, யாராலும் மறுக்கவே முடியாது. தமிழக வளங்கள், வனங்கள், மலைகள், ஆறுகள், கலைகள், தொழில்கள், கோயில்கள், பூங்காக்கள், நிறுவனங்கள், இயக்கங்கள், தலைவர்கள் பற்றி கேள்வி கேட்காமல், அக்டோபர் 17 அன்று தில்லியில் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம் எது என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

மொழித் தாளிலும் இதே நிலைதான். திருக்குறள், சங்க இலக்கியம், நீதிநெறி இலக்கியம், பக்தி இலக்கியம், பாரதியார் பாடல்கள் போன்றவை உணர்த்தும் வாழ்வியல் நெறிகள், விழுமியங்களைக் கருத்தில் கொண்டு வினாக்கள் இல்லவே இல்லை. தனி நபர் பெற்ற பட்டங்கள், பாராட்டுகள், அவர்களின் விருப்பங்கள், புள்ளி விவரங்கள் என்பனதான் கேள்விகள்.

‘பாரதியார், யாருடைய சாயலில், வசன கவிதை எழுதத் தொடங்கினார்?’ என்ற வினா தேர்வர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

திருக்குறள் காட்டும் உயரிய பண்புகள் குறித்து கேள்விகள் கேட்காமல் எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் திருக்குறள் வைக்கப்பட்டு இருக்கிறது..? என வினவுகிறது ஆணையம். ‘தகவல்’ மட்டுமே போதும் என்றால், மொழித் தாள் என்று ஒன்று தனியாக வேண்டாம்.

தமிழகத்தில் அரசு நிர்வாகம் நேர்மையானதாக, வெளிப்படைத்தன்மை கொண்டதாக, சாமான்யர்களிடம் பரிவு கொண்டதாக இருத்தல் வேண்டும். அதற்கு வழி கோலுவதாக, ஆணையத்தின் போட்டித் தேர்வுகள் அமைய வேண்டும்.

பல லட்சம் தேர்வர்களில் சுமார் 9,600 பேர் மட்டுமே தேர்ச்சி பெற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இரண்டு வகை வினாக்கள் மட்டுமே சாத்தியம்.


தரம் காக்க வேண்டும்

அதிகம் அறியப்படாத, கடினமான (odd and hard) கேள்விகள்தாம் கேட்க முடியும். ஆனால் அவற்றுள்ளும் வாழ்வியல் நெறிமுறைகளை, உயர்ந்த விழுமியங்களைப் பொருத்த முடியும். இந்த அம்சத்தில் ஆணையம், திசை மாறிப் பயணித்து இருக்கிறதாகவே படுகிறது. கேள்விகளில், ‘கடினம்’ கொண்டு வந்த அளவுக்கு, தரம் காப்பாற்றப்படவில்லை.

ஆயினும், விளையாட்டு, விண்வெளி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல், அரசின் மக்கள் நலத் திட்டங்கள், பள்ளிப்பாட கணிதம், அறிவியல் பகுதிகளில் சரியாக கவனம் செலுத்தப் பட்டு இருக்கிறது.

தேர்ச்சி பெறுவதற்கான ‘கட்-ஆஃப்’ மிக அதிகமாக இருக்கும் என்று, தேர்வுக்கு முன்பு, பரவலாகக் கணிக்கப்பட்டது. அப்படி இருக்காது என்று தற்போது தோன்றுகிறது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...