Sunday, April 14, 2019


சென்னையில் ஒரு திருக்கடையூர்

Published : 21 Feb 2019 10:55 IST


கீழப்பாவூர் கி. ஸ்ரீ முருகன்




மார்க்கண்டேஸ்வரர் - மரகதவல்லி

பிரகலாதனின் பேரன் பாணாகரன் சிவபக்தன். சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற சாளக்ராம லிங்கங்களைத் தினமும் பூஜித்தபின் ஆற்றில் விட்டுவிடுவான். ஆற்றிலிடப்பட்ட லிங்கங்களைப் பிற்காலத்தில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து, முனிவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பாணாசுரன் பூஜித்ததால் பாணலிங்கம் என அழைக்கப்படும் சாளக்ராம லிங்கம் சிவசாந்நித்யம் மிகுந்தது. அவற்றுள் ஒன்று ஷீர நதியிலும் (பாலாறு) கிடைத்துள்ளது. பூலோகவாசம் செய்தபோது மகாலட்சுமி உள்பட சப்த மகரிஷிகளும் இந்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

மார்க்கண்டேய முனிவரும் தம்முடைய ஆயுளை நீட்டிப்பதற்காகத் தலங்கள்தோறும் சென்று ஈசனை வழிபட்டுவந்தபோது, ஷீர நதிக்கரையிலுள்ள இந்த பாணலிங்கத்தையும் வழிபட்டு, எமபயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற்றுள்ளார். இந்த புராணப் பெருமை கொண்ட திருத்தலம் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள மகப்பேறீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் மார்க்கண்டேஸ்வரர் கோயில்.

தொண்டை மண்டலத்தில் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த சிவபக்தனான சம்புவராயன் என்ற அரசன் வாரிசின்றி வருந்தினான். தம் பக்தனின் துயர்தீர்க்க முன்வந்த ஈசன்அரசன் கனவில் தோன்றி, “ஷீர நதிக்கரையில் மகாலக் ஷ்மியும் சப்த மகரிஷிகளும் மார்க்கண்டேய முனிவரும் பூஜித்த லிங்கம் உள்ளது. அங்கு சிவ-விஷ்ணு ஆலயம் அமைத்து வழிபடு, மழலைச் செல்வம் பெறுவாய்” என்று கூறினார். அதன்படி ஷீர நதிக்கரைக்கு வந்த சம்புவராயன் அங்கே கவனிப்பாரின்றிக் கிடந்த ஈசனுக்கு, நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு ராஜகோபுரங்களுடன் ஆலயம் அமைத்தான். மார்க்கண்டேஸ்வரரை மனமுருகி வழிபாடு செய்தான்.

தொண்டை மண்டல பாணியில் கருவறை

ஈசனின் கருணையால் சம்புவராயருக்குப் புத்திரப்பேறு வாய்த்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய சம்புவராயன் ஈசன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரத்தை மகப்பேற்றை வழங்கும் சந்தானமங்கலம் என்று பெயரிட்டார்.



மகாலக் ஷ்மி

தம்முடைய வேண்டுதலை வெற்றிபெறச் செய்த ஈசனை சித்தேஸ்வர், சிதானந்தேஸ்வரர் என்றும், அம்பிகையை மரகதவல்லி, சந்தான கௌரி என்றும்அழைத்து மகிழ்ந்தான். குழந்தைக்கு மல்லிநாதன் என்று பெயரிட்டான். மல்லிநாதன் இளைஞரானதும் இவ்வாலயத்துக்கு விரிவாக்கப் பணிகள் செய்துகொடுத்துப் பெருமிதம் கொண்டான்.

தொண்டை மண்டல பாணியில் கஜப்பிருஷ்டக் கருவறை அமைப்பு கொண்ட இவ்வாலயம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை வடிவ ஆவுடையார் பீடத்தில் மார்க்கண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இங்கு வரும் பக்தர்களின் எம பயத்தை அகற்றி, நீண்ட ஆயுள் தருகிறார்.

ஈசனுக்கான நித்ய பூஜைக்குத் தேவையான தீப எண்ணெய், புஷ்ப மாலைகள், பூஜைப்பொருட்கள் வழங்கி அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது இவ்வாலயத்தின் மரபு. மார்க்கண்டேஸ்வரரை வழிபடுவோருக்கு உடல் ஆரோக்கியம், மன அமைதி, தொழில் வளம், பதவி உயர்வு போன்ற பலன்கள் கிட்டுகின்றன. மேலும், எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் இத்தல ஈசன் நல்வழி காட்டுவதாக பலன் அடைந்த பக்தர்கள் கூறுகிறார்கள்.

சத்புத்திர பாக்கியம்

அம்பாள் வரதஹஸ்த நாயகியாக, நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவ்வன்னையை ஐந்து திங்கள் கிழமை, ஐந்து தீபங்கள் வீதம் ஏற்றி வழிபடத் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 11 அல்லது 21 எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலை கோத்து அணிவித்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி, மகப்பேறு வாய்க்கிறது. கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று, காலையில் உணவருந்தாமல் தம்பதியாக வந்து வழிபடத் தொடங்கி, பின்னர் ஐந்து வெள்ளிக்கிழமை இவ்விதம் வழிபட்டால் சத் புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.

திருக்கடையூருக்கு இணையானது இத்தலம். எனவே, இங்கு ஆயுஷ் ஹோமம் செய்து ஆயுள் நீட்டிப்புப் பெறலாம் என்பது ஐதிகம். மேலும், சஷ்டியப்தப் பூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகமும் செய்து கொள்ளலாம்.

இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலக் ஷ்மித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பவுர்ணமி தோறும் மாலை 6 மணிக்கு மகாலக் ஷ்மிக்கு 11 வகை அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.

காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக இங்கு சித்திர குப்தர்தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சுமார் இரண்டரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலம் கொண்டுள்ள சித்திர குப்தரை கேதுவுக்கு ப்ரீதியாக கொள்ளு தீபம் ஏற்றி வழிபடலாம். சித்திர குப்தரை வழிபடுவதற்கு பௌர்ணமி உகந்த நாள். அன்று வணங்கினால், புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்லலாம்?
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துஅம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும்வழியில் கோல்டன் பிளாட்ஸ்பேருந்து நிறுத்தம் அருகிலுள்ளது மேற்கு முகப்பேர். இங்கு மங்கள்ஏரி அருகேயுள்ள பாரதிதாசன் 2-ஆவது தெருவில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கு முகப்பேருக்கு பேருந்து வசதியும் உள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...