Friday, May 3, 2019

'நீட்' தேர்வுக்கு ஆடை, ஆபரண கட்டுப்பாடு  மூக்குத்தி, மோதிரம், வாட்ச் அணிய தடை 

3.5.2019

சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாடு முழுவதும், நாளை மறுநாள் நடக்கிறது. தேர்வர்களுக்கு, பல்வேறு நேர மற்றும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.




நாடு முழுவதும், நீட் தேர்வு, நாளை மறுநாள், பகல், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. தேர்வு மையம் அமைந்துள்ள வளாகத்துக்குள், சரியாக, 1:30 மணிக்குள் வந்து விட்டால் மட்டுமே, தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். ஒரு நொடி தாமதமானா லும், தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு மைய வளாகத்துக்குள் காலை, 11:30 மணி முதல், தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வில் விதிக்கப்பட்டுள்ள, உடை மற்றும் பொருள் கட்டுப்பாடுகள் வருமாறு:


* தேர்வுக்கு வருவோருக்கு, உடை மற்றும் உடல் சோதனை இருக்கும் என்பதால், அதற்கேற்ப முன்கூட்டியே, தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும்

* விண்ணப்பத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த, ஒரு பாஸ்போர்ட் புகைப்படத்தை, வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்காக எடுத்து வர வேண்டும்

* மாணவர்கள், தங்களுக்கான அரசு அங்கீகரித்த அடையாள அட்டை, ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும். இதன்படி, வருமான வரித் துறை அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டைபோன்றவற்றில்,

ஏதாவது ஒன்றை எடுத்து வரலாம்

*புத்தகம், துண்டு காகிதம், பேனா, பென்சில், பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எழுதும் அட்டை, பென் டிரைவ், அழிப்பான் ரப்பர், லாக் அட்டவணை, எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன், இயர்போன், கையில் அணியும் ஹெல்த் பேண்ட் மற்றும் கேமரா உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்து வரக் கூடாது

*பேஜர், வாட்ச் எடுத்து வரக் கூடாது. பெல்ட், தோள்பை, கைப்பை, தொப்பி, பர்ஸ் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது. எந்த விதமான அணிகலன்களையும் அணிந்து வரக்கூடாது. அவற்றை பாதுகாத்து வைக்க, தேர்வு மையத்திற்குள் எந்த வசதியும் கிடையாது

*பாக்கெட் அல்லது டிபன் பாக்ஸ் உணவு வகைகள், தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி இல்லை; மைக்ரோ சிப், ப்ளூ டூத் உள்ளிட்ட நுண் பொருட்களுக்கும் அனுமதி கிடையாது. நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்கள், சுகர் மாத்திரை, ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்ச் போன்றவற்றை, தேர்வு மையத்துக்கு எடுத்து வரலாம். அதற்கு உரிய அதிகாரிகளிடம், முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்

*இந்த பொருட்களும், இத்துடன் இணைந்த வேறு எந்த பொருட்களும், தேர்வு மையத்துக்குள் எடுத்து வர அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள், புகைப்படம், ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்பட மாட்டாது

உடைகள் என்ன?

*சாதாரண ஸ்லிப்பர், குறைந்த உயரம் உள்ள காலணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வரக்கூடாது.
அரைக்கையுடன் கூடிய மெல்லிய ஆடைகள் மட்டும் அணிந்து வரலாம். முழுக்கை சட்டை அணிந்து வர அனுமதி இல்லை

*பாரம்பரிய, கலாச்சார மற்றும் குறிப்பிட்ட மதம், இனம் சார்ந்த ஆடை உடுத்திவருவோர், சோதனைகளுக்கு வசதியாக, பகல், 12:30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். தேர்வு நேரம் மாலை, 5:00 மணிக்கு முடியும் வரை, தேர்வர்கள் தேர்வறையில் காத்திருக்க வேண்டும்

* ஒவ்வொரு தேர்வரும், பகல், 1:15 மணிக்குள் இருக்கையில் அமர வைக்கப்படுவர். பாதியில்

எழுந்து வருவது, முன்கூட்டியே விடை தாளை ஒப்படைத்து விட்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.இவ்வாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும், நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமையின், https://ntaneet.nic.in என்ற, அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. சந்தேகம் உள்ளவர்கள், இந்த இணையதளத்தில், தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

தலைமுடி, 'கிளிப்' அணியலாமா?

மாணவ - மாணவியர் சரியான ஆடைகளை தேர்வு செய்வது நல்லது. தலை முடியில், கிளிப், மூக்குத்தி, காது வளையம், உடையில் செயற்கையாக அணிந்த கொக்கி போன்றவை, முந்தைய தேர்வுகளின் போது அகற்றப்பட்டன. உடைகளில் பெரிய பொத்தான்கள் மற்றும் பேட்ஜிற்கும் தடை விதிக்கப்பட்டது. இவற்றை மனதில் வைத்து, தேர்வர்கள், சரியான ஆடைகளை அணிந்து செல்வது, நேர விரயம், சிக்கல்களை தவிர்க்க உதவும் என, நீட் தேர்வு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல், ஹால் டிக்கெட்டை கூடுதலாக ஒரு பிரதி அச்செடுத்து வருவது சிறந்தது. மேலும், புகைப்படமும் கூடுதலாக வைத்திருப்பது சிறந்தது. 2018ல் நடந்த தேர்வின் போது, மாணவர்களுக்கு தேர்வறையிலேயே பேனா வழங்கப்பட்டது. இந்த முறையும், தேர்வறைக்கு பேனா எடுத்து வரக் கூடாது என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...