Wednesday, May 17, 2017

காரணம் தெரியாமல் போலீசார் தவிப்பு : சென்னையில் பெண் டாக்டர் தற்கொலை

  பதிவு செய்த நாள் 16 மே2017 22:37




சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த, இளம்பெண் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

திருநின்றவூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28; சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முதுகலை மருத்துவம் படித்துவிட்டு, அதே மருத்துவமனையில் நரம்பியல் துறை பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இதே மருத்துவமனையில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த சுதா மல்லிகா, 27, என்பவர், இதய நோய் சிகிச்சை துறையில், முதுகலை மருத்துவம் முடித்துவிட்டு, பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமாரும், சுதா மல்லிகாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் சாய்ஸ்ரீகரன் என்ற மகன் உள்ளான். இவர்கள், வேப்பேரி அடுத்த சூளையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். தம்பதி இருவரும் டாக்டர்கள் என்பதால், இரவு மற்றும் அதிகாலையில் பணிக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இதனால், சுதா மல்லிகா, தன் பெற்றோர் வீட்டில் குழந்தையை விட்டுள்ளார். இதனால் அவர், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பணி முடித்து சுதா மல்லிகா வீடு திரும்பி உள்ளார்; இரவு, 10:00 மணிக்கு, பணி முடித்து வீடு திரும்பிய சதீஷ்குமார், நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.மனைவி சுதா மல்லிகா, துப்பட்டாவால் மின்விசிறியில் துாக்கிட்டு பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன், உறவினர்கள் மற்றும் வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.போலீசார், சுதா மல்லிகாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதா மல்லிகா, கடிதம் எழுதி வைத்துள்ளாரா என, வீடு முழுவதும் தேடிய போலீசார், அவரது மொபைல்போன், மடிக்கணினியை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, சதீஷ்குமாரிடம் விசாரித்த போலீசார் கூறியதாவது:எங்களுக்குள் எவ்வித தகராறும் இல்லை; சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம். குழந்தையை விட்டு பிரிந்திருந்ததால் மன அழுத்தத்தில் இருந்தாள். என் தந்தை கத்தார் நாட்டில் உள்ளார்; தாய் மட்டும் திருநின்றவூரில் இருப்பதால் அவரிடம் குழந்தையை ஒப்படைக்கவில்லை. சுதா மல்லிகா இரவில் துாக்கம் வராமல் தவிப் பார். அதற்காக, அவ்வப்போது மாத்திரை உட்கொள்வார். உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என, தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.சுதா மல்லிகா தற்கொலை குறித்து தெளிவான காரணம் தெரியாததால், சந்தேக மரணம் என, வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.150

பதிவு செய்த நாள் 16 மே2017

23:08 ராமநாதபுரம்: செல்லமாகவோ, கோபமாகவோ சிலர் பயன்படுத்தும் வார்த்தை 'போடா வெங்காயம்'. யாரை அப்படி சொல்கிறோமோ அவருக்கு இதனால் மதிப்பு குறைவு என்பது பொதுவான கருத்து. ஆனால் இனி அப்படி கூற முடியாது. ஏனென்றால் சின்னவெங்காயம் விலை அப்படி. தினம் தினம் ஏணிப்படி போட்டு ஏறிக்கொண்டே இருக்கிறது. நேற்றைய விலை கிலோ ௧50 ரூபாய்.

திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியால் விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயம் கிலோ 60 முதல் 75 ரூபாய் வரை விற்கப்பட்டது. நேற்று திடீரென விலை உயர்ந்தது. ராமநாதபுரத்தில் மொத்த விலை கிலோ 125 ரூபாய், சில்லரைக்கு 150 ரூபாய் வரை விற்றது.
ராமநாதபுரம் கோயம்பேடு மார்க்கெட் கடை உரிமையாளர் பாலா கூறுகையில், ''விலை இன்னும் உயரும். கிலோ ௨௦௦ ரூபாயை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கேரளாவில் சின்ன வெங்காயத்தையே அதிகளவு பயன்படுத்துகின்றனர். அங்கு தேவை அதிகரித்துள்ளதும், விலை உயர்வுக்கு காரணம்,'' என்றார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்
மே 16,2017 21:37




பஸ் ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

ஒய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளன. இதன்காரணமாக, பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்,.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்த்தினர் வலியுறுத்தினர். இதில் நடந்த பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும், மூன்று மாதங்களுக்குபிறகு ரூ. 250 கோடி வழங்க உள்ளதாக உறுதி அளிக்கப்பட்டதால் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே-24ல் மீண்டும் பேச்சுவார்த்தை

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில்,ரூ.1250 கோடி வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். செப்டம்பர் மாதம் இறுதியில் ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்படும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை திரும்பப்பெற்றதற்கு நன்றி என்றும் மீண்டும் மே-24 ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சங்கத்தினர் அளித்த பேட்டியில், நிலுவைப்பணப்பலன்களை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வேலைநிறுத்த நாட்களை விடுப்பு நாளாக எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பஸ்களை சீரமைக்க அரசு உறுதி அளித்துள்ளதாகவும் , வேலை நிறுத்த நாட்களில் தொழிலாளர்கள் மீது நடவடிக்கையை திரும்ப பெறுவதாக உறுதி அளித்துள்ளார்கள் என கூறினர்.
மரம் வளர்க்காவிட்டால் இமாச்சலில் சம்பளம் 'கட்'

பதிவு செய்த நாள் 16 மே
2017
22:55



சிம்லா, 'இமாச்சல பிரதேசத்தில், வனப்பகுதியை பாதுகாக்க, புதிதாக நடப்பட்ட செடிகளை பாதுகாக்காத, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்' என, மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.இமாச்சல பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.

மாநிலத்தின் வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில், புதிய திட்டத்தை மாநில வனத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து வனத்துறை சார்பில், மாநிலத்தில் உள்ள அனைத்து வனத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவு:வனப்பகுதியில் நடப்படும் செடிகளை, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நன்கு பராமரிக்க வேண்டும்.

செடிகள் வளர்ந்து மரமாகி, பூ, காய், கனி என்று செழிப்புடன் வளர்ந்தால், அவற்றை பராமரிக்கும் ஊழியர் அல்லது அதிகாரிக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்படும். மாறாக, செடிகள் அழிந்துவிட்டால், குறிப்பிட்ட ஊழியர் அல்லது அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Age Limit


24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது

பதிவு செய்த நாள்: மே 16,2017 23:18

'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை, கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள 
சுற்றறிக்கை:

* இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்
* இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்களை சேர்க்க, 21 வயது அதிகபட்ச வயது நிர்ணயிக்கப் படுகிறது. பொது பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு, 
மூன்றாண்டுகள் வரை கூடுதல் சலுகை உண்டு. அதன்படி, 24 வயது வரையுள்ளோரை, கல்லுாரிகளில் நேரடி பட்டப்படிப்புக்கு சேர்க்கலாம்
* மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து ஆண்டு சலுகை வழங்கி, 26 வயது வரை, மாணவர்களை சேர்க்கலாம். இதில், எந்த விதி மீறலும் இருக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 16, 2017

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தை: 5 லட்சம் பிரசவத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அபூர்வ நோய்

Updated: May 16, 2017 11:29 IST  ஒய்.ஆண்டனி செல்வராஜ்

3 லட்சம் முதல் 5 லட்சம் பிரசவத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ‘நியோனேட்டல் டயோபெட்டிக் மில்லிட்டஸ்’என்ற சர்க்கரை நோயுடன் பிறந்த பச்சிளம் குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறது.

குறைப் பிரசவம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நந்தினி. இவர் களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வதாக பிறந்த ஆண் குழந்தை குறைப் பிரசவத்துடன், கடந்த மார்ச் 22-ம் தேதி 1.2 கிலோ எடையுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் பிறந்தது.

சர்க்கரை அளவு 500

பொதுவாக குழந்தைகள், பிறக்கும்போது அவற்றின் சர்க்கரை அளவு 60 முதல் 70 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால், இந்த குழந்தை பிறக்கும்போதே சர்க்கரை அளவு 500 முதல் 600 மில்லி கிராம் வரை இருந்துள்ளது. மேலும், எடை குறைவாகவும் பிறந்ததால் இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது சிரம மாக இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவானது.

அதற்கு மேல் சுரேஷ் குடும்பத்தினரால் செலவு செய்ய முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர். அரசு மருத்துவர்கள், இந்தக் குழந்தையின் உயிரை தற்போதுவரை காப்பாற்றியதோடு, சர்க்கரையின் அளவைக் குறை த்துள்ளனர். ஆனால், தொடர்ந்து இக்குழந்தையின் சர்க்கரை அளவை சராசரி நிலையில் வைத் திருப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

அரிதான குறைபாடு

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் மதியரசன், பச்சிளம் குழந்தைகள் துறை துணைப் பேராசிரியர் முத்துகுமரன் ஆகியோர் கூறியதாவது;

பிறக்கும்போதே அல்லது 6 மாதத்துக்குள் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வந்தால் இந்த நோயை நியோனேட்டல் டயோபெட்டிக் மெல்லிட்டஸ் (Neonatal diabetes mellitus) என குறிப்பிடுவார்கள். 3 லட்சம் முதல் 5 லட்சம் பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு பிறக்கும்போதே இந்த சர்க்கரை நோய் வருகிறது.

தினமும் இன்சுலின்

குழந்தைகளுக்கு இந்த சர்க்கரை நோயை குணப்படுத்துவது மிகுந்த சிரமம். வாழ்நாள் முழுவதும் இந்த குழந்தைகளுக்கு இந்நோய் இருந்துகொண்டே இருக்கும். அப்படியொரு இக்கட்டான நிலையில், இந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பெரியவர்களுக்கு போடு வதுபோல் தினமும் தொடர்ச்சியாக இன்சுலின் ஊசி போட வேண்டும். 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஏப்ரல் 10-ம் தேதி அரசு மருத்துவமனையில் இந்த குழந்தை சேர்க்கப்பட்டது. தற்போது 200 கிராம் எடை கூடியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்துக்கு சென்ற ரத்த மாதிரி

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உடற்கூறு குறைபாடுகளாலும், சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் மரபணு குறைபாடுகளாலும் ஏற்படுகின்றன. உடற்கூறு குறைபாடுகளால் இந்த நோய் வந்திருந்தால் தொடர்ந்து சிகிச்சையளித்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரந்து சரியாக வாய்ப்புள்ளது.

ஆனால், மரபணு குறைபாடுகளால் இந்த நோய் குழந்தைகளுக்கு வந்தால் இதைக் குணப்படுத்த வாய்ப்பே இல்லை. சர்க்கரை நோய்களுக்கு உடற்கூறு குறைபாடா என்பதைக் கண்டறிய முக்கிய மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால், மரபணு குறைபாடா என்பதைக் கண்டுபிடிக்க இந்தியாவிலேயே பரிசோதனை கிடையாது. அந்தளவுக்கு மருத்துவ பரிசோதனை இங்கு முன்னேறவில்லை.

இங்கிலாந்தில் மட்டுமே இதுபோன்ற ஆய்வுக்கூடங்கள் உள்ளன. சர்க்கரை நோய் ஏற்பட்ட இந்திய குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து அனுப்பவும், திரும்பப் பெறவும் ஆவதற்கான செலவை மட்டும் செய்தால் போதும். இங்கிலாந்தில் இந்த பரிசோதனைகள் இலவசமாகவே செய்து கொடுக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான், இக்குழந்தை பிறந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், இக்குழந்தையின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் சில பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இன்னும் சில அபூர்வமான மரபணு சோதனை முடிவுகள் வரவுள்ளன. அது வந்த பிறகுதான் சிகிச்சையை தொடர முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.



NEET 2017


மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாதது ஏன்?.. தமிழக அரசு விளக்கம்!

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்துக்கான காரணம்குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசிடம் இருந்து சரியான பதில் கிடைக்கும் வரை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தை தமிழகத்துக்கான சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியா முழுவதுக்குமான பொது மருத்துவ நுழைவுத் தேர்வு, ‘நீட்’ நாடெங்கும் நடைபெற்றது. தமிழகத்தில், பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே நீட் தேர்வு நடந்து முடிந்தது. தமிழகத்தை இந்தத் தேர்விலிருந்து விளக்க வேண்டுமென பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முற்றிலுமான விலக்கு அளிக்குமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில், மத்திய அரசு தகுந்த பதிலளிக்கும் வரை காத்திருப்பதால், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bus strike

மீண்டும் எஸ்மா... அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நீதிமன்றம் உத்தரவு!

 ர.பரத் ராஜ்

கடந்த மூன்று நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல மனு மீது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாள்களாக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. மாநிலம் தழுவிய அளவில் நடந்த இந்தப் போராட்டத்தால் கிட்டத்தட்ட 80 சதவிகித போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில்குமாரய்யா தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 'தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் நடப்பதை ஊக்குவிக்க முடியாது. பணிக்குத் திரும்பாவிடில் 'எஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நீதிபதிகள் முரளிதரன், சேஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Raid


   
 ஒன்இந்தியா

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு ஏன்? சிபிஐ அதிகாரி சொல்லும் காரணம் இதுதான்!

டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சிபிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அவரின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்நிலையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மொரீசியஸை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஐஎன்எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ரூ 4.6 கோடிக்கு அனுமதி பெற்று பல கோடி ரூபாய் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு பங்குக்கு ரூ 800 கூடுதல் என்ற கணக்கில் இந்தியாவுக்குள் கூடுதல் முதலீடு வந்துள்ளது. கூடுதலாக கொண்டு வரும் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தது ஐஎன்எக்ஸ் நிறுவனம். கூடுதலாக கொண்டு வரப்பட்ட முதலீடுக்கு கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் உதவி செய்துள்ளது. கூடுதல் முதலீட்டுக்கு அனுமதி பெற்று தந்து ரூ10 லட்சத்தை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Bus strike


பஸ்ஸில் ஏறினால் 10 ரூபாய்... சென்னைக்கு வந்துவிட்டது மினி பஸ்!

மே 15-ம் தேதியில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களின் ஸ்டிரைக் தொடங்கி இருக்கிறது. இதனால், சென்னையில் 3,000 பஸ்கள் ஓடாமல் அப்படியே டெப்போக்களில் முடங்கிக் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் டவுன் பஸ், விரைவு பஸ், மலைப்பகுதி பஸ், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவரும் பஸ் என்று மொத்தம் உள்ள 20,839 பஸ்களில் 19 ஆயிரம் பஸ்கள் இரண்டு நாட்களாக ஓடவில்லை. சென்னையில் ஓடவேண்டிய  3,685 மாநகர பஸ்களில் 3,000 பஸ்கள் ஓடவில்லை. பஸ்களில் தினசரி பயணிக்கும் 47 லட்சம் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைச் சமாளிக்க வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று (15-05-17) மட்டும் 600 மினி பஸ்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனையடுத்துத் தமிழகம் முழுதும் ஓடும் 3,959 மினி பஸ்களில் உடனடியாக 1,500 மினி பஸ்களைச் சென்னைக்குக் கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர்களில் ஓடும் தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பேர் பஸ்களைச் சென்னைக்குத் திருப்பிவிட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்துள்ள இந்த மினி பஸ்களில் 10 ரூபாய், 20 ரூபாய், 30 ரூபாய் என்று மூன்றுவிதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் இருந்து வந்து தாம்பரம் டு பிராட்வே ரூட்டில் மினி பஸ் ஓட்டும் நடத்துநர் பெருமாள் கூறுகையில், ''கிராமத்து மக்கள் பயன்பெற வேண்டும் என்றுதான் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தப் பஸ்களை இப்போது சென்னைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால், கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எங்களுக்கும் சென்னையில் பஸ் ரூட்கள் ஒன்றும் புரியவில்லை. பஸ் டெப்போக்களுக்குள் எங்களை விடவில்லை. அதனால், ஓய்வு எடுக்க முடியாமல், குளிக்க மற்றும் காலைக்கடன் முடிக்க வழியில்லாமல் தவிக்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோரிக்கை நியாயமானது என்றாலும் எங்கள் வயிற்றுப் பிழைப்புகாக சென்னை வந்துள்ளோம். ஸ்டிரைக் முடியும்வரை சென்னைதான் என்று எங்கள் பெர்மிட்களைச் சென்னையில் குறிப்பிட்ட ரூட்களில் போட்டுத் தந்துள்ளார்கள்" என்றார்.

இந்த நிலையில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எஃப், டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எஃப்., ஏ.ஏ.எல்.எல்.எஃப்., டி.டபிள்யூ.டி தொழிற்சங்க அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின் சுருக்கம் வருமாறு: ''போக்குவரத்து ஊழியர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் செலவழித்துள்ளன. ஓய்வுபெற்று வீட்டுக்குச் செல்கிறவர்களின் சேமிப்புத் தொகை 1,700 கோடி ரூபாயைப் பல ஆண்டுகளாக வழங்காத பாதகத்தை அரசு செய்துள்ளது. இதில், '500 கோடி ரூபாயை இப்போது வழங்குவோம் என்றும், இன்னொரு 500 கோடி ரூபாயை அடுத்த செப்டம்பரில் வழங்குவோம்' என்றும் அமைச்சர் கூறுகிறார். மொத்தத்தில் இப்போது வழங்கியுள்ள 750 கோடி ரூபாயும்கூட நீதிமன்ற உத்தரவுகளின்படியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளவற்றுக்காகவும் தரப்பட வேண்டிய தொகைதான். புதிதாகத் தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுத்ததைப் போன்ற தோற்றத்தை உண்டாக்க அரசு முயற்சிக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் அரசின் கொள்கை மற்றும் சமூகத்துக்குச் செய்யும் உதவிகள் காரணமாக இழப்பைச் சந்திக்கின்றன. மாணவர் இலவச பயணம், நஷ்டமான வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது போன்றவை மிகவும் தேவையான சமூக நடவடிக்கையாகும். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை அரசு ஈடுசெய்ய வேண்டும். இதற்கான கொள்கை அறிவிப்பை நம்பகத்தன்மையுள்ள அளவில் அரசு எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேறாமல் உள்ள ஓய்வுக்கால சேமநல நிதித் தொகை உட்பட அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம், மாநிலத்தின் இதர பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளது. இது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிரான வஞ்சனையாகும். இவற்றைச் சரி செய்து 13-வது ஊதிய ஒப்பந்தத்தைப் போட வேண்டும். 1.4.2013-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதியம், தினக்கூலி, தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை ஒப்பந்தப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைநிறுத்தத்தை உடைக்க வேறு பேருந்துகளை இயக்குவது, புதியவர்களைவைத்து ஓட்டுவது போன்றவை ஐ.எல்.ஓ விதிமுறைகளுக்கு விரோதமானவை. இதுபோன்ற அபாயகரமானச் செயல்களில் ஈடுபடாமல் பிரச்னைக்கு முடிவுகாண அரசு முன்வர வேண்டும். 'மாவட்ட ஆட்சியர்கள், வெளியாட்களைவைத்து பேருந்துகளை இயக்குவோம்' என்று பேட்டி அளிப்பது அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொழிலாளர்களின் பணத்தைக் கையாடியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பணத்தைப் பறிகொடுத்த ஊழியர்களுக்கு எதிராகக் பாயக்கூடாது" என்று கூட்டு அறிக்கையில் கூறி இருக்கிறார்கள்.

குட்டித் தூக்கம்

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்... பலன்கள், பக்கவிளைவுகள்!

ச.மோகனப்பிரியா

முதல் நாள் இரவு 10 மணிக்குப் படுத்திருப்போம். அம்மா காலை 6 மணிக்கு எழுப்புவார். செல்லம் கொஞ்சி, திட்டி எழுப்பினாலும் எழுந்திரிக்க மனம் வராது. `இன்னும் அஞ்சு நிமிஷம்மா...’ என முனகலாக குரலை வெளியே அனுப்புவோம். 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கியிருந்தாலும், அந்த 5 நிமிடத் தூக்கம் பலருக்கும் சொர்க்கம்.  சிலருக்கு தெளிவும் திருப்தியும் கிடைப்பது இந்தக் குட்டித் தூக்கத்தில்தான். குட்டித் தூக்கம் ஏன் அவ்வளவு இதமாக, மனதுக்கு இனிமையானதாக இருக்கிறது? விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி...

குட்டித் தூக்கம்

சீரான தூக்கத்தின்போது, `ரெம்’ எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் (REM -Rapid Eye Movement) கனவுகள் வருகின்றன. இந்த நிலையில் நம் முழு உடலும் சுயக் கட்டுப்பாட்டை இழந்து மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். சீரான தூக்கத்தின்போது சுழற்சி முறையில் ரெம் மாறிமாறி ஏற்படும். இந்தச் சுழற்சியில் இடையூறுகள் ஏற்படும்போது `நாப்’ (Nap) எனப்படும் குட்டித்தூக்கம் பகல் நேரங்களில் தேவைப்படுகிறது.

இந்தக் குறைந்த நேரத் தூக்கத்தைத்தான் ஆங்கிலத்தில் `நாப் ஸ்லீப்’ (Nap sleep) என்கிறார்கள். நன்றாக உண்ட பகல் பொழுதில், வேலைக்கு நடுவே களைப்பில் எட்டிப் பார்ப்பது, மனச்சோர்வின்போது கண்களை மூடிக்கொண்டு கண் அயர்வது.... போன்ற பல தருணங்களில் இந்த குட்டித் தூக்கம் வரும்.

ஒரு குட்டித் தூக்கம்தான் போட்டிருப்பார்கள். ஆனால் பலரும் தூங்கி எழுந்ததும், `நான் அதிக நேரம் தூங்கினது மாதிரி இருக்கு’, `வேற ஒரு கிரகத்துக்குப் போயிட்டு வந்ததுபோல இருக்கு’, `ஆழ்ந்த தூக்கம்’, `நல்ல தூக்கம்’, `இந்தக் குட்டித் தூக்கத்துலயும் கனவு வந்துச்சு பாரேன்...’ என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம்..

சீரான தூக்கத்துக்கும் குட்டித் தூக்கத்துக்கும் என்ன வித்தியாசம்?

சீரான தூக்கம் 6 - 8 மணி நேரம் வரை இருக்கும். இரவில் வருவது தூக்கம் . நாப், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள், அதிக பட்சம் ஒரு மணி நேரம் இருக்கும். 10 - 20 நிமிடங்கள் வரையிலான நாப் தூக்கமே சிறந்தது.வேலைக்கு இடையே, இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் குட்டித் தூக்கம் வரும். தூக்கத்தின் நேரம், உறங்கும் கால அளவு இவையெல்லாம் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். பல கார்ப்பரேட் நிறுவனங்களில் `நாப் தூக்கம்’ போட வசதி செய்துதருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள்...

* மூளை புத்துணர்வுப் பெற உதவும்.

* வேலையைச் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் செய்ய உதவும்.

* மனச்சோர்வைப் போக்கும்.

* மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

* சிந்தனையை ஊக்குவிக்கும்.

புத்துணர்வு தரும்

பக்கவிளைவுகள்...

* இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

* ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டரை (Sleeping Disorder) ஏற்படுத்தலாம்.

* இயல்பான தூங்கும் நேரம் குறையும்.

தூக்கம்

யாருக்கெல்லாம் நாப் (குட்டித் தூக்கம்) வரலாம்?

* இரவு குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கு.

* உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு.

* மனச்சோர்வு மிகுந்த வேலைப்பளு உள்ளவர்களுக்கு.

* இரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு.

* இரவில் கண்விழித்துப் படிப்பவர்களுக்கு.

குறிப்பு: நாப் ஸ்லீப் அனைவருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. மேலும், இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஏற்படுவது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...