பஸ்ஸில் ஏறினால் 10 ரூபாய்... சென்னைக்கு வந்துவிட்டது மினி பஸ்!
மே 15-ம் தேதியில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களின் ஸ்டிரைக் தொடங்கி இருக்கிறது. இதனால், சென்னையில் 3,000 பஸ்கள் ஓடாமல் அப்படியே டெப்போக்களில் முடங்கிக் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் டவுன் பஸ், விரைவு பஸ், மலைப்பகுதி பஸ், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவரும் பஸ் என்று மொத்தம் உள்ள 20,839 பஸ்களில் 19 ஆயிரம் பஸ்கள் இரண்டு நாட்களாக ஓடவில்லை. சென்னையில் ஓடவேண்டிய 3,685 மாநகர பஸ்களில் 3,000 பஸ்கள் ஓடவில்லை. பஸ்களில் தினசரி பயணிக்கும் 47 லட்சம் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைச் சமாளிக்க வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று (15-05-17) மட்டும் 600 மினி பஸ்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனையடுத்துத் தமிழகம் முழுதும் ஓடும் 3,959 மினி பஸ்களில் உடனடியாக 1,500 மினி பஸ்களைச் சென்னைக்குக் கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வெளியூர்களில் ஓடும் தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பேர் பஸ்களைச் சென்னைக்குத் திருப்பிவிட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்துள்ள இந்த மினி பஸ்களில் 10 ரூபாய், 20 ரூபாய், 30 ரூபாய் என்று மூன்றுவிதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் இருந்து வந்து தாம்பரம் டு பிராட்வே ரூட்டில் மினி பஸ் ஓட்டும் நடத்துநர் பெருமாள் கூறுகையில், ''கிராமத்து மக்கள் பயன்பெற வேண்டும் என்றுதான் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தப் பஸ்களை இப்போது சென்னைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால், கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எங்களுக்கும் சென்னையில் பஸ் ரூட்கள் ஒன்றும் புரியவில்லை. பஸ் டெப்போக்களுக்குள் எங்களை விடவில்லை. அதனால், ஓய்வு எடுக்க முடியாமல், குளிக்க மற்றும் காலைக்கடன் முடிக்க வழியில்லாமல் தவிக்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோரிக்கை நியாயமானது என்றாலும் எங்கள் வயிற்றுப் பிழைப்புகாக சென்னை வந்துள்ளோம். ஸ்டிரைக் முடியும்வரை சென்னைதான் என்று எங்கள் பெர்மிட்களைச் சென்னையில் குறிப்பிட்ட ரூட்களில் போட்டுத் தந்துள்ளார்கள்" என்றார்.
இந்த நிலையில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எஃப், டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எஃப்., ஏ.ஏ.எல்.எல்.எஃப்., டி.டபிள்யூ.டி தொழிற்சங்க அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின் சுருக்கம் வருமாறு: ''போக்குவரத்து ஊழியர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் செலவழித்துள்ளன. ஓய்வுபெற்று வீட்டுக்குச் செல்கிறவர்களின் சேமிப்புத் தொகை 1,700 கோடி ரூபாயைப் பல ஆண்டுகளாக வழங்காத பாதகத்தை அரசு செய்துள்ளது. இதில், '500 கோடி ரூபாயை இப்போது வழங்குவோம் என்றும், இன்னொரு 500 கோடி ரூபாயை அடுத்த செப்டம்பரில் வழங்குவோம்' என்றும் அமைச்சர் கூறுகிறார். மொத்தத்தில் இப்போது வழங்கியுள்ள 750 கோடி ரூபாயும்கூட நீதிமன்ற உத்தரவுகளின்படியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளவற்றுக்காகவும் தரப்பட வேண்டிய தொகைதான். புதிதாகத் தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுத்ததைப் போன்ற தோற்றத்தை உண்டாக்க அரசு முயற்சிக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் அரசின் கொள்கை மற்றும் சமூகத்துக்குச் செய்யும் உதவிகள் காரணமாக இழப்பைச் சந்திக்கின்றன. மாணவர் இலவச பயணம், நஷ்டமான வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது போன்றவை மிகவும் தேவையான சமூக நடவடிக்கையாகும். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை அரசு ஈடுசெய்ய வேண்டும். இதற்கான கொள்கை அறிவிப்பை நம்பகத்தன்மையுள்ள அளவில் அரசு எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேறாமல் உள்ள ஓய்வுக்கால சேமநல நிதித் தொகை உட்பட அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம், மாநிலத்தின் இதர பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளது. இது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிரான வஞ்சனையாகும். இவற்றைச் சரி செய்து 13-வது ஊதிய ஒப்பந்தத்தைப் போட வேண்டும். 1.4.2013-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதியம், தினக்கூலி, தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை ஒப்பந்தப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைநிறுத்தத்தை உடைக்க வேறு பேருந்துகளை இயக்குவது, புதியவர்களைவைத்து ஓட்டுவது போன்றவை ஐ.எல்.ஓ விதிமுறைகளுக்கு விரோதமானவை. இதுபோன்ற அபாயகரமானச் செயல்களில் ஈடுபடாமல் பிரச்னைக்கு முடிவுகாண அரசு முன்வர வேண்டும். 'மாவட்ட ஆட்சியர்கள், வெளியாட்களைவைத்து பேருந்துகளை இயக்குவோம்' என்று பேட்டி அளிப்பது அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொழிலாளர்களின் பணத்தைக் கையாடியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பணத்தைப் பறிகொடுத்த ஊழியர்களுக்கு எதிராகக் பாயக்கூடாது" என்று கூட்டு அறிக்கையில் கூறி இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment