Friday, May 26, 2017

The Hindu Tamil

நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை விற்கவும், வாங்கவும் தடை: மத்திய அரசு அறிவிப்பு

விலங்கு நலவாரியத்தின் ஆலோசனைகளின் படி இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் தடை| படம்.| சுஷில் குமார் வர்மா.

விலங்கு நலவாரியத்தின் ஆலோசனைகளின் படி இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் தடை| படம்.| சுஷில் குமார் வர்மா.

கால்நடை சந்தைகளில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மற்ற கால்நடை விற்பனைக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தயாரிக்கப்பட்டன. அவற்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே கடந்த வாரம் காலமாவதற்கு முன் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத் திருத்தங்களின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடைகள் விற்பனைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து 8 பக்க அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில், பசு, எருதுகளை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்கக் கூடாது. விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான், சந்தைகளில் கால்நடைகளை விற்க முடியும். விவசாய பயன்பாட்டுக்கு மட்டும்தான் விற்கவும் வாங்கவும் முடியும். பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடைகள் விற்பனைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

மேலும் நாட்டின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கி.மீ. தூரத்துக்குள் கால்நடை சந்தைகளை அமைக்கக் கூடாது. அதேபோல் மாநில எல்லையில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்கு கால்நடை சந்தை அமைக்க கூடாது. மாநிலங்களுக்கு வெளியில் கால்நடைகளை கொண்டு செல்வதாய் இருந்தால், மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்கள், அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். அத்துடன் கால்நடைகளின் அடையாளங்கள், உரிமையாளரின் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

சந்தைகளில் கால்நடைகளின் நலத்தை உறுதி செய்ய வேண்டும். கன்றுகள், தகுதியில்லாத கால்நடைகளை விற்கக் கூடாது. வாகனங்களில் கால்நடைகள் அடைபடாமல் எல்லா வசதிகளுடனும் ஏற்றி செல்லப்படுகிறது என்பதற்கு கால்நடைத் துறை ஆய்வாளரிடம் காட்டாயம் சான்று பெற வேண்டும். விற்பனைக்கு தகுதி இல்லாத கால்நடைகளுக்கு முத்திரை குத்தும் அதிகாரம் ஆய்வாளருக்கு உள்ளது. இனிமேல் மாவட்ட கால்நடை சந்தை கமிட்டியிடம் அனுமதி பெறாமல் கால்நடை சந்தைகளை நடத்தக் கூடாது.

இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் இறைச்சித் தொழிலுக்குப் பாதிப்பு:

இந்த கட்டுப்பாடுகள் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளை பாதிக்கும். அத்துடன் நாட்டின் இறைச்சி தொழிற்கூடங்களுக்கு இறைச்சி வருகை ஸ்தம்பித்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள், பசு பாதுகாவலர்கள் குழுவினரால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் அவர்களை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர்.

மேலும் வயதான கால்நடைகளையும், பால் தராத பசுக்களையும் விற்பதன் மூலம் மட்டுமே ஏழை விவசாயிகள் வருவாய் பெறுகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களையும் பெரிதாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் மூலம் கால்நடைகளை விற்க வேண்டுமானால், அதற்கான ஆவணங்களை தயாரிக்க வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலும் விவசாயிகள், ஏழைகள், படிக்காதவர்கள்தான் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவணங்கள் தயாரிப்பது பெரும் சிக்கலாக இருக்கும். கால்நடைகளை சந்தைகளில் விற்பவர், வாங்குபவர் இருவரும் தங்களுடைய நிலத்தின் உரிமை பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாளச் சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்கிய பின் அவற்றுக்கான ஆவணங்களின் 5 நகல்களை எடுத்து உள்ளூர் வருவாய் அலுவலர், கால்நடை மருத்துவர், கால்நடை சந்தைகளை நிர்வகித்து வரும் கமிட்டி ஆகியவற்றிடம் சமர்ப்பிக்க வேண்டும். விற்பவர், வாங்குபவர் தலா ஒரு நகலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு இறைச்சி வர்த்தகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இறைச்சி வர்த்தகத்தில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலைகளில் ஆந்திரா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் தங்களது எல்லைப் பகுதிகளில்தான் பெரும்பாலும் கால்நடை சந்தைகளை நடத்துகின்றன. அப்போதுதான் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கால்நடைகளை வாங்குவார்கள். ஆனால், புதிய கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘‘இந்தக் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இதற்கு மேல் அங்கீகாரம் பெற்ற ஒரு சில இறைச்சி கூடங்களுக்குதான் விலங்குகள் கிடைக்கும் ’’ என்று அகில இந்திய இறைச்சி ஏற்றுமதி சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் எஸ்என்.சபர்வால் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...