Saturday, August 12, 2017


15ம் தேதி வரை மழை தொடரும்

பதிவு செய்த நாள்12ஆக
2017
04:50


சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும், 15ம் தேதி வரை மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் சில இடங்களிலும், 14 மற்றும், 15ம் தேதிகளில், பல இடங்களிலும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 'சென்னையில் அவ்வப்போது, லேசான மழை பெய்யும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், மழைக்கு அதிக வாய்ப்புள்ளது; வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்' என்றும் அறிவித்துள்ளது.
85 சதவீத ஒதுக்கீடு ரத்து செல்லும் ; 'நீட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:02


மருத்துவப் படிப்புகளில், தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் விதித்த தடையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மருத்துவப் படிப்புகளுக்காக, தேசிய அளவிலான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில், 15 சதவீதத்தை, தேசிய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அளித்தது. மீதமுள்ள, 85 சதவீத இடங்களில், தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதமும், பிற பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதமும் அளிக்கும் வகையில் உள்ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள்ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார்; அதை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர் அமர்வு, நேற்று தீர்ப்பளித்து.

நீதிபதிகள், தீர்ப்பில் கூறியதாவது:நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்கும்போது, தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கேட்டீர்கள். விலக்கு கேட்டு ஜனாதிபதியிடம் அளித்த மனு நிலுவையில் இருக்கும்போது, உள்ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? வேறு எந்த மாநிலமும் இதுபோல் செய்யவில்லை. தமிழக அரசு மட்டும், இவ்வாறு செய்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. உள்ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவுக்கான தடை தொடரும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

கல்வி செயலரை மாற்ற தடை : ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்11ஆக
2017
23:59

சென்னை: 'கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, அரசு நியமித்துள்ள இரு குழுக்களின் உறுப்பினர்களில், எந்த மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறு ஆய்வு செய்யணும் : காஞ்சிபுரம் மாவட்டம், சதுரங்கபட்டினத்தைச் சேர்ந்த, ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், 'அரசு நியமித்துள்ள இரு குழுக்களின் உறுப்பினர்களும், எந்தவித இடையூறும் இல்லாமல், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 'இதற்கு, அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழுக்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வரை, நீதிமன்ற மேற்பார்வையில், குழு இயங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வால், பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால், உயர் கல்வியை தொடர்வதில், மாணவர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது உள்ளது.
எனவே, இரண்டு விதமான குழுக்களை, அரசு அமைத்துள்ளது. பாடத்திட்டத்துக்கான, 10 பேர் அடங்கிய குழு, 13 பேர் இடம் பெற்ற உயர்மட்டக் குழு என, இரு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழுவில், கல்வியாளர்களும், அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுக்கள், ஏற்கனவே செயல்பட துவங்கிவிட்டன. நவீன தொழில்நுட்ப யுகத்தில், சர்வதேச தரத்துக்கு இணையாக, தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிக்கையை, குழுக்கள் விரைவில் அளிக்க உள்ளன.

இடையூறு கூடாது : மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கல்வித் துறை செயலர் உட்பட, உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுவில், அரசு மாற்றம் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. குழுக்களின் செயல்பாட்டிற்கு, எந்தவிதத்திலும் இடையூறு செய்யக் கூடாது.
அகில இந்திய அளவில் போட்டி தேர்வு எழுத, கல்வியின் தரத்தை மேம்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பள்ளிக்கல்வித் துறை செயலர் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மனித நேயமும் மரித்ததா... ஆம்புலன்சுக்கு தவித்த குடும்பம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:58




பெரம்பலுார்:நோயால் இறந்த கணவரின் உடலை, வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, குழந்தைகள், நான்கு மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் தவித்தனர். -

அரியலுார் மாவட்டம், கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 55. காச நோயால், மிகவும் அவதிப்பட்ட இவரை, நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, மனைவி ராணியும், மூன்று குழந்தைகளும், 108 ஆம்புலன்சில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனை வராண்டாவில், ஆம்புலன்ஸ் ஸ்டெரச்சரில் இருந்த துரைராஜை டாக்டர் பரிசோதித்தார். துரைராஜ் இறந்து விட்டதாகவும், வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படியும் டாக்டர் கூறியுள்ளார். கணவர் உடலை எப்படி எடுத்துச் செல்வது, ஆம்புலன்சுக்கு பணம் வேண்டுமே, என்ன செய்வது என்று வழி தெரியாத ராணி, 9 - 11 வயதுடைய தன் மூன்று குழந்தைகளுடன், இரவு, 9:30 மணி வரை, கதறி அழுதபடி நின்றிருந்தார்.
மருத்துவமனை ஊழியர் களிடம், இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு கதறியுள்ளார்; 

அவர்களும் கண்டுகொள்ள வில்லை. இதை பார்த்து, மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்தவர்கள், திரண்டனர்.அதில் ஒருவர், மொபைல் போனில் படமெடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், இரவு, 9:45 மணிக்கு துரைராஜ் உடலை, மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச் சென்றனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறை : கோயம்பேட்டில் நெரிசல்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:01




சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, பல ஆயிரம் பேர், சொந்த ஊர் செல்ல திரண்டதால், கோயம்பேடு பகுதி, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. மழையும் பெய்ததால், பயணியர் பெரிதும் திணறினர்.

சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா என, நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும், பல ஆயிரம் பேர், நேற்று ஒரே நாளில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, சொந்த ஊர் செல்ல முயன்றனர். இதனால், அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியதால், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றி வட்டார பகுதிகள் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், வடபழனி, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி, பல மணி நேரம், ஒரே இடத்தில் முடங்கின. இதுபோல், சென்னையின் பல பகுதிகளிலும், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: போலீசார் மற்றும் போக்குவரத்து துறையின் குளறுபடியால், சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறோம். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய, போதிய போலீசார் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். பயணியர் வசதிக்காக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை இளைஞர் மரணம் : கேரள டாக்டர்கள் கைது?
பதிவு செய்த நாள்12ஆக
2017
00:21

திருவனந்தபுரம்: சிகிச்சை கிடைக்காமல், கேரளாவில், நெல்லை
இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனைகளில் பணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய, போலீசார் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன், 21, சமீபத்தில், கேரள மாநிலம், கொல்லத்தில், விபத்தில் சிக்கினார். அவருக்கு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்த டாக்டர்கள், சிசிச்சை அளிக்க மறுத்து விட்டனர். 

தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால், ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின், ஆம்புலன்சிலேயே, முருகன் உயிர் பிரிந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன், சட்டசபையில் பகிரங்க மன்னிப்பு கோரினார். 

இந்நிலையில், முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, இரக்கமில்லாமல் செயல்பட்ட டாக்டர்களை கைது செய்ய, போலீசார் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், டாக்டர்கள் கைது செய்யப்படுவர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியல்வாதிகளால் கடும் மன உளைச்சல் ரயில் முன் பாய்ந்து கலெக்டர் தற்கொலை

பதிவு செய்த நாள்11ஆக
2017
23:43




காஜியாபாத்: உ.பி.,யில் தற்கொலை செய்த, பீஹார் மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் உடல், காசியாபாத் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் காசியாபாத் ரயில் நிலையத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளத்தில், ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருகில் கிடந்த, தற்கொலை குறிப்பை படித்த போது, அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல், பீஹார் மாநிலம், பக்சர் மாவட்ட கலெக்டர், முகேஷ் பாண்டேயுடையது என தெரிய வந்தது.

நம்பிக்கை இழப்பு : தற்கொலை குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாவது:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான எனக்கு, வாழ்வின் மீதான பிடிப்பு போய்விட்டது. மனிதர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். கடும் மன உளைச்சலால் அவதிப்படும் நான், இனியும் வாழ்வதில் பயனில்லை. என் தற்கொலைக்கான காரணம் குறித்து, விரிவான விபரங்களை, நான் தங்கியிருந்த அறையில் உள்ள பையில் வைத்துள்ளேன். தற்கொலை செய்வதை தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

இரங்கல் : முகேஷ் தங்கியிருந்த ஓட்டலின் ஊழியர்கள் மற்றும் அவரின் நண்பர்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். முகேஷ் பாண்டேயின் தற்கொலைக்கு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், இரங்கல் தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 27.01.2026