Thursday, August 17, 2017

படிக்கும் வயதில் பணிக்கு செல்லும் அவலம்சிவகங்கை அருகே பள்ளி இல்லை

பதிவு செய்த நாள்16ஆக
2017
22:34

சிவகங்கை, சிவகங்கை அருகே உயர்நிலைப்பள்ளி இல்லாததால் படிக்கும் வயதில் மகளிர் பஞ்சாலைக்கு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.
விட்டனேரி சாத்தனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 81 மாணவர்கள் படிக்கின்றனர். அதேபோல் அக்கிராமத்தைச் சுற்றி உடைவயல், காட்டுசூரை ஆகிய கிராமங்களில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும்,
பனங்காடி, ஒய்யவந்தான் பேச்சாத்தங்குடி ஆகிய
கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. 

இந்த நான்கு கிராமங்களிலும் 20 கிராமங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். அவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த பின், உயர்கல்விக்கு பல கி.மீ.,ல் உள்ள கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் கிராமமக்கள் பெண் குழந்தைகளை பாதியில் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். 

மேலும் குடும்ப வறுமை காரணமாக கோவை, திருப்பூர் பஞ்சாலைகளுக்கு பணிக்கு அனுப்புகின்றனர். சாத்தனி நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் உடைவயல், சூரவத்தி, ராணியூர், குருக்கத்தி, இலுகப்பக்கோட்டை, விஜயமாணிக்கம், அல்லுார், பனங்காடி உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயன்பெறுவர்.

சாத்தனி பள்ளி கல்விகுழுத் தலைவர் மணிமுத்து கூறியதாவது: ஏழு கி.மீ., சுற்றளவில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால் 20 கிராமங்களைச் சேர்ந்த பல பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். அவர்களை வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். சாத்தனி நடுநிலைப் பள்ளியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. 

அப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் 20 கிராம மாணவர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து அமைச்சர், கலெக்டரிடம் மனு கொடுத்தும், கல்வித்துறை அதிகாரிகள் கைவிரித்து
விட்டனர், என்றார்.
வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்16ஆக
2017
22:33


சிவகங்கை, வேலைக்காக வெளிநாடு செல்வோர் போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாற வேண்டாம் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்திடம் பதிவு பெற்ற ஏஜன்ட்கள் மூலமாகவே வெளிநாடு செல்ல வேண்டும். பதிவு பெறாத போலி ஏஜன்ட்களை நம்பி ஏமாற வேண்டாம். வெளிநபர்கள் கொடுக்கும் பார்சல்களை விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டாம். எடுத்து செல்லும் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள், மருந்து பொருட்கள் இருந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். வேலைக்கு
அவசியமான திறன் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். வெளிநாடு சென்றதும் இந்திய துாதரகத்தை உடனடியாக அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்த தமிழர் குடும்பத்துக்கு கேரளா உதவி

பதிவு செய்த நாள்17ஆக
2017
01:26




திருவனந்தபுரம் : சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்க, கேரள மாநில அரசு முன்வந்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லம் மாவட்டத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன், பால் வியாபாரம் செய்து வந்தார். சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார்.
ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்க கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகள் மறுத்தன. இதனால் அவர், ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, கேரள முதல்வர், பினராயி விஜயன், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், முருகன் குடும்பத்தினரை, நேற்று முன்தினம் அவர் சந்தித்தார். 'மிகவும் ஏழ்மையில் உள்ளோம்; இரண்டு சிறு குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவ வேண்டும்' என, முருகனின் மனைவி கோரிக்கை வைத்தார்.
இதையேற்று, முருகன் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக, முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில், இந்த தகவலை, பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.


பெங்களூரில், 'இந்திரா உணவகம்'  5 ரூபாய்க்கு சூடான டிபன் ரெடி
பெங்களூரு:தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரில், இந்திரா உணவகத்தை, அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், நேற்று திறந்து வைத்தார்.





கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில்உள்ள ஏழைகளுக்கு,மாதந் தோறும், 'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ்,7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சுதந்திர தின விழாவில் பேசிய, முதல்வர் சித்த ராமையா, 'ஏழை மக்களின் பசியைப் போக்க, 100 கோடி ரூபாய் செலவில், மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்' என்றார்.

இதையடுத்து, பெங்களூரில் நேற்று, முன்னாள் பிரதமரும், காங்.,மூத்த தலைவருமான, மறைந்த, இந்திரா பெயரில், 'இந்திரா உணவகம்' துவங்கப்பட்டது. இந்த உணவகத்தை, காங்., கட்சியின் துணைத் தலைவர் ராகுல் துவக்கி வைத்து,அங்கு வழங்கபட்ட உணவை சுவைத்தார். இந்த உணவகத்தில், காலை உணவு, ஐந்து ரூபாய்க் கும், மதியம் மற்றும் இரவு உணவு, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உணவகத்தின் வெளியில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுடன், சிறுவயது ராகுல் இருப்பது போன்ற படத்துடன் கூடிய போஸ்டர்கள் வைக்கப் பட்டிருந்தன.இந்த விழாவில், ராகுல் பேசியதாவது:

பெங்களூரில் ஏழை மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது. கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ஏழைகளுக்காக இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இது போன்ற உணவகங்கள் திறக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உணவகத்தில் சாப்பிட, பா.ஜ., தலைவர்களும் கண்டிப்பாக வரிசையில் நிற்பர்.இவ்வாறு அவர் பேசினார்.

'அம்மா'வும், ராகுலும்!

உணவகத்தை திறந்து வைத்து, ராகுல் பேசியபோது, இந்திரா உணவகம் என குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, அம்மா உணவகம் என்றார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து, விழாவுக்கு வந்திருந்த காங்கிரசார் கூறுகையில், 'நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் தான், அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் துவங்கப் பட்டது.'இது, ராகுலின் மனதில் நன்கு பதிந்து விட்டது; இதனால் தான்,

இந்திரா உணவகத்தை, அம்மா உணவகம் என குறிப்பிட்டார் போலிருக்கிறது' என்றனர்.

தனியார் நிறுவனங்கள்

உணவகம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு மாநகராட்சியின், 198 வார்டுகளி லும், மலிவு விலை உணவகம் திறக்க, மாநில அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. முதல் கட்டமாக, 101 உணவகங்கள் திறக்கப்பட்டுள் ளன; மீதமுள்ள, 97 உணவகங்கள், அடுத்த சில மாதங்களில் துவங்கப்படும்.இந்த உணவகங் களுக்காக, 27 உணவு தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்படுகின்றன. உணவு தயாரித்து வழங்கல் மற்றும் இதர சேவைகள், இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


நீட்' அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு ஓராண் டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு, மத்திய சட்ட அமைச்சகம், நேற்று ஒப்புதல் அளித்தது; இருப்பினும், இதனால் எதிர்பார்க் கும் பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.





மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலிருந்து, தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும்படி, தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு செவி சாய்க்காததால், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.

இதன்பின், இரண்டு ஆண்டு என்பது, ஓராண் டாக மாறியது. அப்போதும், எந்த உறுதியும் பெறப்படாத நிலையில், சமீபத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களிடம் பேசினார்.அப்போது, 'நீட் தேர்விலிருந்து, ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டு கோரிக்கை வந்தால், அதுகுறித்து பரிசீலிக்க, மத்திய அரசுதயாராக உள்ளது' என்றார். மிக முக்கியமான பிரச்னை யில், மாநில அரசிடம் தெரிவித்து இருக்க வேண்டிய தகவலை, ஊடகங்கள் மூலமாகவே மத்திய அமைச்சர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், மாநில சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் டில்லி விரைந்தார். ஓராண்டுக்கான அவசர சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், வேணுகோபாலி டம்,தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குறித்து கருத்து கேட்கபட்டது.ஓரிரு நாட்களில்  என் கருத்தை தெரிவிப்பேன்,'' என, காலையில் கூறிய வேணுகோபாலிடம், மதியம் பேசியபோது, நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற் கான ஒப்புதலை அளித்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து, நீட் தேர்வு விஷயத்தில், சட்ட ரீதி யாக தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்ற நிலைக்கு மத்திய அரசு வந்துள்ளது, தெளிவா னது. மீண்டும் டில்லிவந்துள்ள, அமைச்சர் விஜய பாஸ்கரும், மத்திய சட்டத்துறை இணையமைச்சர், சவுத்ரியை சந்தித்துப் பேசினார்.

சட்டத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பிற அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெறும் பணிகளிலும் தமிழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம், அவசர சட்டத்துக்கான ஒப்புதலை, நேற்றிரவு அளித்தது.

இதை தொடர்ந்து, உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங் கள் ஒப்புதல் அளித்த பின், இந்த சட்ட முன்வரைவு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் படும். எந்த நேரத்திலும், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும், அவசர சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு, நீட் விலக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக் கும் தரப்பினர், தயார் நிலையில்உள்ளனர். இது வரையில், நீட் தேர்வை நியாயப்படுத்தும் வகை யில் தான், கோர்ட் உத்தரவுகள் அனைத்துமே உள்ளன.

இதனால், அவசரச் சட்டத்தின் கதி, சுப்ரீம் கோர்ட் கைகளில்தான் உள்ளது என்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றாகவே தெரியும்; இருப்பினும், நீட் விலக்கு, அரசியல் ரீதியாக, தங்களை பாதித்துவிடக் கூடாது என்பதை, இதில்சம்பந்தப்பட்ட கட்சிகள் உணர்ந்துள்ளன.

இதனால்தான், 'முடிவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை; முடிந்தவரை போராடினோம்' என்பதை காட்டுவதில், அந்த கட்சிகள் தீவிரமாக உள்ளன. எனவே, நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம், எதிர்பார்க்கும் பலனை தரப்போகிறதா அல்லது அந்தரத்தில் மீண்டும் தொங்கப்
போகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்?:'நீட்'

தேர்வின் அடிப்படையில், மாணவர்சேர்க்கை நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

காவ்யா நக்கீரன் உட்பட, ஐந்து மாணவியர் சார்பில், மூத்த வழக் கறிஞர், நளினி சிதம்பரம் இதற்கான மனுவை தாக்கல் செய்தார். நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், நேற்று ஆஜரான, நளினி சிதம்பரம், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்கும்படி வாதிட்டார்.

நீட் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதால், இதை தனியாக விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது; அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நீட் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்தும், மாணவர் சேர்க்கை இதுவரை துவங்கவில்லை. மாணவர் சேர்க்கையில், 85 சதவீதம் உள் ஒதுக் கீடு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டது. மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என, மாணவர்களும், பெற்றோரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்தும் படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Wednesday, August 16, 2017


பெங்களூரில் 2வது நாளாக தொடரும் மழை.. வெள்ளம் சூழ்வதால் மக்கள் அச்சம்




பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து 2வது நாளாக பெய்த கன மழையால் நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பெங்களூரில் நேற்று இரவு விடிய, விடிய கன மழை பெய்தது. 24 மணி நேரத்தில் பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் மையத்தில் 14.4 செ.மீ., மழையும் சிட்டி ரயில் நிலையம் பகுதியில் 12.9 செ.மீ அளவு மழையும் பெய்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது.

இந்த கன மழைால் பெங்களூரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. மக்கள் வீட்டை விட்டு வர முடியாமல் அவதிப்பட்டனர். கனமழைக்கு தமிழகத்திலிருந்து சென்று பெங்களூரில் வேலை பார்க்கும், ஐடி ஊழியர்கள் கணிசமாக வசிக்கும் கோரமங்களா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. நகரின் பல பகுதிகளிலும் பல மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டன. ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட், சாந்திநகர், வில்சன் கார்டன், கே.ஆர்.புரம், அல்சூர், விவேக் நகர், முருகேஷ் பாள்யா, பழைய விமானநிலைய சாலை, குர்ரப்பனபாளையா, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, ஆடுகோடி, மடிவாளா, சிக்கலட்சுமைய்யா லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழையால் பெருகிய வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தெருக்களில் முழங்கால் அளவு நீர் தேங்கியது. தொடர்ந்து தொல்லை தரும் பெல்லந்தூர் ஏரியில் நுரைமூட்டம் மிகவும் அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று மதியத்திற்கு பிறகு சூரியன் வெளிப்பட்டது. ஆனால், இரவானதும் மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரின் அருகேயுள்ள தமிழக தொழில் நகரமான ஒசூரிலும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt

ராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் அலட்சியம் காட்டிய அரசியல்வாதிகள்!





ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. தொகுதி அமைச்சரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான மணிகண்டன் முதல்வர் பங்கேற்ற நிகழ்சியில் பங்கேற்ற நிலையில் மற்றவர்களான பரமக்குடி முத்தையா, திருவாடானை கருணாஸ் ஆகிய இருவரும் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டி தனது தொகுதியில் தேசிய கொடி ஏற்றினார். அங்கும் பிரச்சனைதான். கொடியேற்ற விழாவை ஏற்பாடு செய்தவர்கள் தேசிய கொடியினை தலைகீழாக கட்டி வைக்க இதனை அறியாத எம்.எல்.ஏ பாண்டி, கொடியை அப்படியே ஏற்றி விட்டார். பின்னர் அதனை கீழிறக்கி சரி செய்து மீண்டும் ஏற்றி வைத்தார்.

அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் அதிகாரிகள் அதற்கு ஒரு படி மேலாக சென்று தேசியக் கொடியை அவமதித்து உள்ளனர். சாயல்குடி காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றுவதற்கு என தனி கொடி கம்பம் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதை விடுத்து, காவல் நிலைய கட்டடத்தின் மேல் இருந்த சிறு கம்பி ஒன்றில் தேசியக் கொடியினை கட்டி தங்கள் தேசப் பற்றை வெளிகாட்டியுள்ளனர்.


Dailyhunt

NEWS TODAY 28.01.2026