Saturday, September 9, 2017

பி.டி.எஸ்., வகுப்புகள், 11ல் துவக்கம் : 'ராகிங்'கில் ஈடுபட்டால் நடவடிக்கை

பதிவு செய்த நாள்08செப்
2017
21:34

சென்னை: ''தமிழகத்தில், பி.டி.எஸ்., வகுப்புகள் வரும், 11ம் தேதி துவங்கும்,'' என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்.

தமிழகத்தில், நீண்ட இழுப்பறிக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பியதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி உள்ளன. ஆனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில், 494 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இவற்றை, அந்தந்த மருத்துவ கல்லுாரிகளே நிரப்பிக்கொள்ள, மருத்துவ கல்வி இயக்ககம் அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.டி.எஸ்., வகுப்பு கள், வரும், 11ம் தேதி துவங்கும். மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களிடம், மூத்த மாணவர்கள், 'ராகிங்' போன்ற செயல்களில் ஈடுபட்டால், இடைநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னை வராமல் இருக்க, விடுதிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு என, தனி வளாகங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்திற்கு, சீனியர் மாணவர்கள் செல்வதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'ஆதார்' மையம் அமைக்காத வங்கிகளுக்கு வருது சிக்கல்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:37

'இம்மாத இறுதிக்குள், அரசு மற்றும் தனியார் வங்கிகளில், 'ஆதார்' பதிவு மையங்கள் அமைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குடன், ஆதார் எண்ணை, இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு ரத்து செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உத்தரவு : இது தவிர, புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவோரும், ஆதார் எண் தருவது கட்டாயமாகி உள்ளது. எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளமானோர், ஆதார் எண்களை, வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். அதனால், ஆதார் அட்டையை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், 'வங்கிகளில், ஆதார் பதிவு மையங்களை, ஆகஸ்டுக்குள் அமைக்க வேண்டும்' என, ஜூலையில் உத்தரவிட்டது. 

ஆனால், பெரும்பாலான வங்கிகள், மையங்களை அமைக்கவில்லை.

அபராதம் : 'ஆதார் பதிவு செய்யும் கருவிகள் கொள்முதல், முகவர்கள் தேர்வு போன்ற பணிகள் முடியாததால், கெடுவை நீட்டிக்க வேண்டும்' என, தனியார் மற்றும் அரசு வங்கிகள் கோரின. அதை தொடர்ந்து, செப்., 30 வரை, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இந்த காலக்கெடுவுக்குள், 10 சதவீத கிளைகளில், ஆதார் பதிவு மையங்களை, வங்கிகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கிளைக்கு, ஒரு மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான வங்கிகள், ஆதார் மைய பணிகளை துவங்கவே இல்லை; அதனால், அவற்றுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
விரைவில், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., ஏற்பாடு
பதிவு செய்த நாள்08செப்
2017
20:35

சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், அதிகவேக இன்டர்நெட் இணைப்புக்காக, '4ஜி' சேவையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கஉள்ளது; இதற்காக, 200 தொலை தொடர்பு கோபுரங்களை நிறுவ உள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை, '௪ஜி' சேவை தருகின்றன. பி.எஸ்.என்.எல்., மட்டும், மிகவும் கால தாமதமாக தற்போது, '௪ஜி'க்கு மாற முடிவு செய்துள்ளது. முதலில், மூன்று மாவட்டங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்டார, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:

எங்கள் வாடிக்கையாளர்களில், 80 சதவீதம் பேர், '4ஜி' வசதி இல்லாத, சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். 20 சதவீதம் பேர் தான், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அதனால் தான், 2ஜி, 3ஜி, 'டவர்'களுக்கு, பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது.
எனினும், தனியார் போட்டியை சமாளிப்பதற்காகவும், இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் நலன் கருதியும், '4ஜி' சேவையைத் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 200 டவர்களை கொள்முதல் செய்ய, 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டு விட்டது; அக்டோபரில் கொள்முதல் நிறைவடைந்து, நிறுவும் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் இன்று இயங்கும்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:34

சென்னை: 'அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள், இன்று இயங்கும்' என, அரசு அறிவித்துள்ளது. 'வாகன ஓட்டிகள் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என, தமிழக அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஏராளமானோர், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாமல் உள்ளனர். பலர், லைசென்சை தொலைத்து விட்டு, நகல் மட்டுமே வைத்துள்ளனர். இது போன்றோர், லைசென்ஸ் பெற, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்; இதனால் அங்கு, கூட்டம் நிரம்பி வழிகிறது.

அவர்கள் பயன்பெறும் வகையில், விடுமுறை நாளான இன்று, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் இயங்கும் என, அரசு அறிவித்து உள்ளது. 

டிரைவிங் லைசென்ஸ் புதிதாக பெறுதல், புதுப்பித்தல், நகல் லைசென்ஸ் வழங்குதல் போன்ற பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



விமானத்தில் ரகளை செய்தால் இரண்டு ஆண்டு பறக்க முடியாது!
பதிவு செய்த நாள்  08செப்
2017
20:42

புதுடில்லி: விமானம் மற்றும் விமான நிலையத்தில், ரகளை செய்வது உள்ளிட்ட குற்றங்களை செய்வோர் மீது, வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட விதிகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வழிமுறை : மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் கூட்டணி கட்சியான சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் மற்றும் மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், எம்.பி., திவாகர் ரெட்டி ஆகியோர், விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதில், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு, விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது. பார்லிமென்டில் அவர் மன்னிப்பு கேட்டதால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ரகளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்தது. ரகளையில் ஈடுபடுவோரை, விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் வரைவு சட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் மற்றும் தொடர்புடையோர் தெரிவித்த கருத்து அடிப்படையில், புதிய வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான, அசோக் கஜபதி ராஜு கூறியதாவது: விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரகளையில் ஈடுபடுவோர் மீது வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதைத் தவிர, அவர்கள், விமானங்களில் பறப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

குற்றங்கள் மூன்று வகை : விமானங்கள், விமான நிலையங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், பயணியர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த புதிய சட்ட வழிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. குற்றங்கள், மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் நிலை - உடல் ரீதியில் மோசமான செய்கைகள் செய்வது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, அதிக போதையில் இருப்பது போன்ற குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்.

இரண்டாவது நிலை - தள்ளுவது, உதைப்பது, அடிப்பது, தவறான முறையில் தொடுவது போன்ற உடல் ரீதியான குற்றங்களுக்கு ஆறு மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்

மூன்றாவது நிலை - உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவது, விமானம் மற்றும் விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்.

இந்தக் குற்றம் செய்யப்பட்டது தொடர்பான புகாரை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலையிலான குழு விசாரித்து, 30 நாட்களுக்குள் முடிவை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இயங்காத ஆட்சி: இணையமே சாட்சி! 30 மாதங்களாக முடங்கியுள்ள கலெக்டர் முகநூல்
பதிவு செய்த நாள்
செப் 09,2017 03:49



ஒரு மாதம், இரு மாதங்களில்லை; முப்பது மாதங்களாக, கோவை மாவட்ட நிர்வாகம், முடங்கிக் கிடப்பதை ஊருக்கு மட்டுமின்றி, உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, மாவட்ட கலெக்டரின் முகநுால்.
புகார் எழுதி, வரிசையில் நின்று, டோக்கன் போட்டு, கலெக்டரைப் பார்த்து, மனு கொடுக்கும் நடைமுறைகள், மலையேறி வருகின்றன. மக்களுக்கு இதில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே, அரசின் துறைகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முகநுால் பக்கங்கள், தனித்தனி முகவரி கொடுத்து, அரசால் தொடங்கப்பட்டுள்ளன.வெறும் 513 பேர் மட்டுமே!
வெள்ளம், புயல் போன்ற அவசர காலங்களிலும், தேர்தல் போன்ற முக்கிய நேரத்திலும் அரசு நிர்வாகங்கள் இலவச தொலைபேசி எண்களை (டோல் ப்ரீ) அறிவித்து தொடர்பு கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களே எல்லா நாளிலும், எல்லா நேரத்திலும் அந்த வேலையை எளிதாக்கி இருக்கின்றன.

அரசுத்துறைகளுக்கு முகநுால் கணக்கு தொடங்கிய பின்னர், பொதுமக்கள் பலரும் தங்களது பகுதி பிரச்னைகள், அரசு நிர்வாகம் தலையிடவேண்டிய விஷயங்களை முகநுாலில் பதிவிடும் பழக்கம் பெருகி வருகிறது. அதற்கு உடனுக்குடன், தீர்வும் காணப்படுகிறது. இந்த விஷயத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகமே, மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.
கடந்த மார்ச் 6ம் தேதியன்று, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பகுதி மக்கள் டாஸ்மாக் கடை பிரச்னையை, கோவை துணை கலெக்டர் முகநுால் பக்கத்தில் 'டேக்' செய்துள்ளது, மக்களின் அணுகுமுறைக்கான உதாரணம். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தனது முகநுால் பக்கத்தில் அரசு நிகழ்ச்சிகளை தவறாது பதிவிட்டு வருகிறார்.பொதுமக்களும் அவரது பக்கத்தில் தெருவிளக்கு பிரச்னை முதல் பல்வேறு புகார்களை அந்த முகநுாலில் பதிவிடுகின்றனர். நேற்றைய நிலவரப்படி, மதுரை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 124 ஆகும். கோவை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர் எண்ணிக்கை, வெறும் 513 மட்டுமே.
இதற்குக் காரணம், அவரது பெயரிலான முகநுால், 30 மாதங்களாக முடங்கிக் கிடப்பது தான். கடந்த 2015, ஜனவரி 28 அன்று மாலை 5:08 மணிக்கு, அன்றைய கலெக்டராக இருந்த அர்ச்சனா பட்நாயக், குடியரசு தினத்தில் கொடியேற்றிய நிகழ்ச்சிக்கான படங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியின் படங்களைப் பதிவேற்றியதே 'கோயம்புத்துார் மாவட்ட முகநுால் பிரிவு' பக்கத்தில் கடைசியாகும்.

'அட... அப்படியா!'

இதேபோல், கலெக்டரின் 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவித்தாலும் கூட, எந்த நடவடிக்கையும் இருப்பதில்லை என்பதே கோவை நகரிலுள்ள சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.இதற்கு சாட்சியாக, அவர்கள் பதிவிட்ட பல்வேறு விஷயங்களையும்கலக்கும் கமிஷனர்!
தமிழகத்தின் 'ஹைடெக்' நகரம் என்று பெயர் பெற்ற மாநகரம், கோவை. சமூக வலைதளங்களில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், கோவை மக்களின் பங்களிப்பு அபரிமிதமாகவுள்ளது. இதற்கேற்ப கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாகத்தை வழி நடத்த, 25 'வாட்ஸ் ஆப்' குழுக்களை (அட்மின்) ஏற்படுத்தி, உடனுக்குடன் பல விஷயங்களுக்கு தீர்வு கண்டு வருகிறார்.

இவை தவிர, நகரிலுள்ள பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் குழுக்களிலும் இணைந்து, அதில் குறிப்பிடப்படும் புகார்களுக்கு கூடுமான வரை உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கிறார்.-நமது நிருபர்-

'நீட்' தேர்வுக்கு எதிராக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களை உடனே நிறுத்தச் சொல்லி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017,23:27 IST



'சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து, 'உள்ளே' தள்ள வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த குழப்பங்களுக்கு, முடிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்கு பின் நடத்தப்பட்டது; 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கூட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில், போதுமான அளவு மதிப்பெண் எடுக்காத, அரியலுாரைச் சேர்ந்த, அனிதா என்ற மாணவி, அத்தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்; மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று, தற்கொலை செய்தார்.இதனால், தமிழகம் முழுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், சில நாட்களாக

போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர், ஜி.எஸ். மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

நீட் எதிர்ப்பு போராட்டங்களால், தமிழகத்தில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் என்று,அரசியல் கட்சிகள்,மாணவர்கள், சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக, தி.மு.க., போராட்டங்கள் நடத்தியபோது, அதை நிறுத்தும்படி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தால், உறுதி செய்யப்பட்டுள்ள, நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும். தற்போது தமிழகத்தில், அசாதாரணசூழ்நிலை உள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசு திணறுகிறது.

அரசியல் காரணங்களுக்காக, இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை கொண்டு வரும்படி மாநில அரசை வலியுறுத்தாமல், போராட்டத்தில் ஈடுபடும்படி, மாணவர்களை, சில
அரசியல் கட்சிகள் துாண்டி விடுகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும், இந்த அரசியல் கட்சிகள்
நடத்தும்போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, போராட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது; அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்

இடைக்கால உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்த, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழக அரசின், தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலரின் கடமை.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறை யில் அடையுங்கள். 18ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும். அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி, எங்களுக்கு உதவ வேண்டும்.இந்த உத்தரவு களை செயல்படுத்தும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் உள்துறை முதன்மை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 15.07.2026