Saturday, September 9, 2017

'ஆதார்' மையம் அமைக்காத வங்கிகளுக்கு வருது சிக்கல்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:37

'இம்மாத இறுதிக்குள், அரசு மற்றும் தனியார் வங்கிகளில், 'ஆதார்' பதிவு மையங்கள் அமைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குடன், ஆதார் எண்ணை, இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு ரத்து செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உத்தரவு : இது தவிர, புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவோரும், ஆதார் எண் தருவது கட்டாயமாகி உள்ளது. எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளமானோர், ஆதார் எண்களை, வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். அதனால், ஆதார் அட்டையை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், 'வங்கிகளில், ஆதார் பதிவு மையங்களை, ஆகஸ்டுக்குள் அமைக்க வேண்டும்' என, ஜூலையில் உத்தரவிட்டது. 

ஆனால், பெரும்பாலான வங்கிகள், மையங்களை அமைக்கவில்லை.

அபராதம் : 'ஆதார் பதிவு செய்யும் கருவிகள் கொள்முதல், முகவர்கள் தேர்வு போன்ற பணிகள் முடியாததால், கெடுவை நீட்டிக்க வேண்டும்' என, தனியார் மற்றும் அரசு வங்கிகள் கோரின. அதை தொடர்ந்து, செப்., 30 வரை, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இந்த காலக்கெடுவுக்குள், 10 சதவீத கிளைகளில், ஆதார் பதிவு மையங்களை, வங்கிகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கிளைக்கு, ஒரு மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான வங்கிகள், ஆதார் மைய பணிகளை துவங்கவே இல்லை; அதனால், அவற்றுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025