Saturday, September 9, 2017

விமானத்தில் ரகளை செய்தால் இரண்டு ஆண்டு பறக்க முடியாது!
பதிவு செய்த நாள்  08செப்
2017
20:42

புதுடில்லி: விமானம் மற்றும் விமான நிலையத்தில், ரகளை செய்வது உள்ளிட்ட குற்றங்களை செய்வோர் மீது, வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட விதிகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வழிமுறை : மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் கூட்டணி கட்சியான சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் மற்றும் மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், எம்.பி., திவாகர் ரெட்டி ஆகியோர், விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதில், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு, விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது. பார்லிமென்டில் அவர் மன்னிப்பு கேட்டதால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ரகளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்தது. ரகளையில் ஈடுபடுவோரை, விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் வரைவு சட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் மற்றும் தொடர்புடையோர் தெரிவித்த கருத்து அடிப்படையில், புதிய வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான, அசோக் கஜபதி ராஜு கூறியதாவது: விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரகளையில் ஈடுபடுவோர் மீது வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதைத் தவிர, அவர்கள், விமானங்களில் பறப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

குற்றங்கள் மூன்று வகை : விமானங்கள், விமான நிலையங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், பயணியர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த புதிய சட்ட வழிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. குற்றங்கள், மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் நிலை - உடல் ரீதியில் மோசமான செய்கைகள் செய்வது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, அதிக போதையில் இருப்பது போன்ற குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்.

இரண்டாவது நிலை - தள்ளுவது, உதைப்பது, அடிப்பது, தவறான முறையில் தொடுவது போன்ற உடல் ரீதியான குற்றங்களுக்கு ஆறு மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்

மூன்றாவது நிலை - உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவது, விமானம் மற்றும் விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்.

இந்தக் குற்றம் செய்யப்பட்டது தொடர்பான புகாரை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலையிலான குழு விசாரித்து, 30 நாட்களுக்குள் முடிவை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025