Wednesday, September 13, 2017

போலிநகை அடமானம் : ரூ.20 கோடி மோசடி

பதிவு செய்த நாள்12செப்
2017
23:49

சென்னை: சென்னை அண்ணாநகரில் வங்கி ஒன்றில் போலி நகைகளை அடமானம் வைத்து, ரூ.20 கோடி கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது. இதில் வங்கியின் முன்னாள் மேலாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளதும் அவருடன் நகைக்கடை அதிபர்
ஒருவரும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எத்தனை நாட்களில் இந்த மோசடி நடந்தது என்றும் ஆய்வு நடந்து வருகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்12செப்
2017
23:12

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன்
படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எனவே, தற்காலிக பணியில் உள்ள, 15 ஆயிரத்து, 500பகுதி நேர ஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை, விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர். 

இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

- நமது நிருபர் -


அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு சம்மன் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


பதிவு செய்த நாள்12செப்
2017
23:32

மதுரை: தமிழகத்தில் தடையை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தாக்கலான அவமதிப்பு வழக்கில், சங்க நிர்வாகிகள் 4 பேர் ஆஜராக, சம்மன் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ -ஜியோ' காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு செய்தேன்.செப்.,7ல் நீதிபதிகள், 'வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் தொடர்புடைய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செப்.,14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என்றனர். அதை மீறி போராட்டம் தொடர்கிறது.போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி தலைமைச் செயலாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தாஸ், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் மோசஸ் மற்றும் அச்சங்கங்களின் உறுப்பினர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சேகரன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள சங்க நிர்வாகிகள் 4 பேரும், செப்.,15 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படுகிறது.அவர்கள் சென்னை முகவரியில் உள்ளதால், சம்மனை சென்னை போலீஸ் கமிஷனர் மூலம் வழங்க வேண்டும். சம்மன் வழங்கியதை உறுதி செய்து, மதுரை போலீஸ் கமிஷனர் இன்று (செப்.,13) இந்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
'பரஸ்பர விவாகரத்து வழக்கில் 6 மாத காத்திருப்பை தளர்த்தலாம்'
பதிவு செய்த நாள்12செப்
2017
22:41

புதுடில்லி: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து வழக்கில், ஆறு மாதங்கள் காத்திருப்பு காலத்தை, உச்ச நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து பெற விரும்பும் தம்பதி, நீதிமன்ற உத்தரவுப்படி, ஓராண்டு பிரிவுக்கு பின், விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதைத் தொடர்ந்து, ஆறு மாத காத்திருப்புக்கு பின், அவர்களுக்கு, நீதிமன்றம், விவாகரத்து அளிக்கும். விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதர்ஷ் கே.கோயல், உதய் யு.லலித் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து கோரும் தம்பதி, ஓராண்டு பிரிவுக்கு பின், ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தலாம்.
திருமண உறவு எக்காரணத்தை முன்னிட்டும், சரி செய்ய முடியாமல், முறிந்து போகும் பட்சத்தில், கணவன், மனைவியை சேர்ந்திருக்க வேண்டும் என, நிர்ப்பந்திப்பது முறையற்றது.

அத்தகைய சூழ்நிலையில், விவாகரத்து வழங்குவதற்காக, இந்து திருமண சட்டம், பிரிவு - 13பி உருவாக்கப்பட்டது. திருமண பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவசரமாக, அந்த திருமணத்தை ரத்து செய்யக்கூடாது என்ற நோக்கத்தில், ஆறு மாத காத்திருப்பு விதி அமல்படுத்தப்பட்டது.இந்த காத்திருப்பு காலம், கணவன், மனைவி ஆகியோரின் மனக்கஷ்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கக் கூடாது. திரும்ப சேரும் வாய்ப்பே இல்லை எனும்போது, காத்திருப்பு காலம் தளர்த்தப்படலாம்.

காத்திருப்பு காலம், சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை மனதளவில் மேலும் துன்புறுத்தக்கூடும் என, நீதிமன்றம் கருதினால், காத்திருப்பு காலத்தை தளர்த்தி, விவாகரத்து அளிக்கலாம். 

அவ்வாறு, விவாகரத்து அளிக்கும்போது, ஜீவனாம்சம், குழந்தை களின் எதிர்காலம் போன்ற வற்றை ஆய்வு செய்து, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி
பதிவு செய்த நாள்13செப்
2017
00:49




சேலம்:குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட வழியின்றி, விவசாய படிப்பை தொடர முடியாமல், சேலம் மாவட்ட மாணவி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; சலுான் வைத்துள்ளார். இவருக்கு, தவப்பிரியா, 19, என்பவர் உட்பட, மூன்று மகள்கள். 2014ல், ஆறகளூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த தவப்பிரியா, 500க்கு, 480 மதிப்பெண் பெற்றார். இவரை, தலைவாசல், நத்தக்கரையில் உள்ள தனியார் பள்ளி, பிளஸ் 1 படிப்பில், கட்டணமின்றி சேர்த்து கொண்டது.

தவப்பிரியா, 2016 பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால், விவசாய படிப்பிற்கு விண்ணப்பித்தார். 200க்கு, 190.25, 'கட் - ஆப்' பெற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அக்ரி பட்ட படிப்பை தேர்வு செய்தார்.

கல்லுாரி விடுதியில் தங்கி படித்த நிலையில், இரண்டாம் பருவ தேர்வின் போது, தந்தை ஆறுமுகம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால், இரண்டாம் ஆண்டு, கல்லுாரி கட்டணம் கட்ட இயலவில்லை.
கல்லுாரி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் சேர்த்து, இரண்டாம் ஆண்டுக்கு, 68 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும். தந்தையின் உடல்நிலை, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால், பணம் கட்ட முடியாததால், தவப்பிரியா படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தவப்பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து, சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறேன். தவப்பிரியாவின் கல்லுாரி படிப்புக்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

உதவ விரும்புவோர், 94425 - 25326 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு

பதிவு செய்த நாள்12செப்
2017
23:13

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 1.1 கோடி மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏழாவது சம்பள கமிஷன் அறிமுகத்துக்கு பின், அகவிலைப் படி நிர்ணயம் செய்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. 

இதை அடிப்படையாக வைத்து, இந்தாண்டு மார்ச்சில், 2 சதவீதத்தில் இருந்து,
4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படியை, 1 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தாண்டு, ஜூலை, 1 முதல் கணக்கிட்டு, இது வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள, 49.26 லட்சம் அரசு ஊழியர், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர் பயனடைவர்.
எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்
பதிவு செய்த நாள்12செப்
2017
23:08




முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு 

செய்துள்ளது. முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, மாநிலம் முழுவதும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது; இதை மேலும் சிறப்பிக்கும் விதத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை இருந்தது.

டில்லி வந்து பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, தனித்தனியே இந்த கோரிக்கையை வைத்தனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த வட்ட வடிவில் அமைந்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான இந்திய நாணயச்சட்டம் பிரிவின் கீழ், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. நுாறு ரூபாய் நாணயத்தில், வெள்ளி, 50 சதவீதமும், தாமிரம், 40 சதவீதமும், நிக்கல், 5 சதவீதமும், துத்தநாகம், 5 சதவீதமும் கலந்திருக்கும். 44 மி.மீ., விட்டம் உடைய, இந்த நாணயத்தைச் சுற்றிலும், வரிவரியாக, 200 கோடுகளும் இருக்கும். இந்த நாணயம், 35 கிராம் எடை உடையதாக இருக்கும். ஐந்து ரூபாய் நாணயத்தில், 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து காணப்படும். 23 மி.மீ., விட்டம் உடைய இந்த நாணயத்தைச் சுற்றிலும், 100 கோடுகள் இருக்கும்.இந்த நாணயத்தின் எடை, 6 கிராமாக இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக, அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நாணயங்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும், தமிழக அரசுடன் ஆலோசித்து, ஒரு குறிப்பிட்ட தேதியில், எம்.ஜி.ஆர்., நினைவு நாணயங்கள் வெளியிடப்படுமென, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-- நமது டில்லி நிருபர் -

NEWS TO DAY 16.07.2026