Wednesday, September 13, 2017

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு சம்மன் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


பதிவு செய்த நாள்12செப்
2017
23:32

மதுரை: தமிழகத்தில் தடையை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தாக்கலான அவமதிப்பு வழக்கில், சங்க நிர்வாகிகள் 4 பேர் ஆஜராக, சம்மன் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ -ஜியோ' காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு செய்தேன்.செப்.,7ல் நீதிபதிகள், 'வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் தொடர்புடைய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செப்.,14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என்றனர். அதை மீறி போராட்டம் தொடர்கிறது.போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி தலைமைச் செயலாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தாஸ், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் மோசஸ் மற்றும் அச்சங்கங்களின் உறுப்பினர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சேகரன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள சங்க நிர்வாகிகள் 4 பேரும், செப்.,15 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படுகிறது.அவர்கள் சென்னை முகவரியில் உள்ளதால், சம்மனை சென்னை போலீஸ் கமிஷனர் மூலம் வழங்க வேண்டும். சம்மன் வழங்கியதை உறுதி செய்து, மதுரை போலீஸ் கமிஷனர் இன்று (செப்.,13) இந்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TO DAY 16.07.2026