Wednesday, September 27, 2017

மர்மக் காய்ச்சலை ஏன் துப்பறியக் கூடாது?

Published : 25 Sep 2017 09:27 IST

அழகிய பெரியவன்





டெங்குவிலிருந்து சற்றே மீண்ட பிறகு இதை எழுதுகிறேன். ஐந்து நாட்களாக அந்தக் காய்ச்சல் என்னைப் படுக்கையில் முடக்கிவிட்டது. இன்னமும்கூட, ’மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்ற நிலைதான். குளிருடன் கூடிய கடும் காய்ச்சல், இருமலும் சளியும், தலைவலி, உடல்வலி, கடும் சோர்வு,உடல் நடுக்கம். இவற்றுடன் தொடரும் அச்ச உணர்வு. நோயாளிகளிடத்தில் மிகுந்த கனிவு காட்டக்கூடிய என் மருத்துவ நண்பர் ஒருவரிடத்தில் சிகிச்சை பெற்றேன்.

முதல் ரத்தப் பரிசோதனையின்போதே, ரத்தத் தட்டுகள் ஒரு லட்சத்து இருபது ஆயிரமாகக் குறைந்திருப்பது தெரியவந்தது (இயல்பளவு:1,00,000-4,00,000 கன மில்லி மீட்டர்). திரவ உணவுகளோடு மருந்துகளை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கச் சொன்ன மருத்துவர், பயப்பட வேண்டாம் என்றார். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால் தினமும் ரத்தப் பரிசோதனை அவசியம் என்று சொல்லிவிட்டார்.

பாதிப்பின் வீச்சு

சிகிச்சைக்குச் சென்ற நான்கைந்து நாட்களிலும் மருத்துவமனையில் காய்ச்சலோடு வந்து நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பார்க்க முடிந்தது. ரத்தப் பரிசோதனை நிலையங்களிலும் இதே காட்சிதான். எங்கள் சிறு நகரில் இருக்கின்ற ஆறேழு தனி மருத்துவ நிலையங்களிலும் இதே எண்ணிக்கையிலான நோயாளிகளின் கூட்டம். அவர்களில் முக்கால் சதவிகிதம் பேருக்குக் காய்ச்சல். அரசு பொது மருத்துவமனைகளிலோ சுற்றுப்பக்க கிராமங்களிலிருந்து காய்ச்சலுடன் மக்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.

குடியேற்றத்திலிருந்து என்னை நலம் விசாரிக்க வந்திருந்த தம்பி, அங்கும் அரசு மருத்துவமனையிலும், தனி மருத்துவ நிலையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் அலைமோதுகிறது என்றார். வேலூர் நண்பர் லிங்கம், “எங்கள் தெருவில் என்னைத் தவிர எல்லாருக்கும் காய்ச்சல்” என்றார். இவை மக்களிடமிருந்து கிடைத்திடும் களத் தகவல்கள். அரசாங்கப் புள்ளி விவரங்களல்ல!

சிகிச்சைக்கு வருகிறவர்களில் பெரும்பகுதியினர் குழந்தைகளும் பெண்களும் 50 வயதைக் கடந்தவர்களும்தான். நான் வாழும் சிறு நகரத்திலும், அருகாமை நகரங்களிலுமே இந்த நிலைமை என்றால் தமிழகம் முழுக்க என்ன நிலைமை இருக்கும் என்று கண்களை மூடிக்கொண்டேன். டெங்கு காய்ச்சலால் பாதிப்புடன் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளின் முன்னால் மரண பயத்தோடு நின்று கொண்டிருக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் மனச் சித்திரமாக வந்து நடுங்கச்செய்தது.

படுக்கையில் சாய்ந்தபடி தொலைக்காட்சி் சேனல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது டெங்கு காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவலாக வந்தபடியே இருந்தன. குறிப்பாக கொங்கு மாவட்டங்களில் மிக அதிகமாகப் பரவியிருப்பதாக ஒரு சேனல் சொன்னது. சில சேனல்களும் நாளேடுகளும் மிகுந்த அரசக் கடமை உணர்வோடு ‘மர்மக் காய்ச்சல்’ என்றே டெங்கு காய்ச்சலைக் குறிப்பிட்டன. ஆனால் டெங்கு குறித்த செய்திகள் இல்லாமல் அண்மையில் நாளேடுகளைப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை.

அச்சுறுத்தும் தரவுகள்

தமிழகத்தில் தற்போது அதிக அளவில் டெங்கு பரவியிருக்கிறது.கடந்த ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 1,200 டெங்கு நோயாளிகள் சிகிச்சை எடுத்திருப்பதாக சில நாளேடுகள் தெரிவிக்கின்றன. ஆண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் எனத் தெரியாது.ஆனால் நமக்குக் கிடைத்திடும் புள்ளிவிவரங்கள் உண்மையை மறைத்துக் காட்டப்படுபவை. மக்கள் பீதியடைந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ண ஆலோசனையின்படி வடிவமைக்கப்படுபவை.

ஆனால் புள்ளிவிவரங்களை எவ்வளவுதான் குறைத்துச் சொன்னாலும் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் நிற்கிறது என்பதை மறைக்க முடியவில்லை. எல்லாச் செய்திகளும் நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்வது இதைத்தான். 2008-2012 வரையிலான ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 22,584 டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவர்களில் 40 பேர் இறந்திருப்பதாகவும் (தென் இந்தியாவில் 245 பேர்) தேசிய நோய்க்கடத்தி நோய்த் தடுப்பு திட்ட அறிக்கை சொல்கிறது. நடப்பு ஆண்டு கணக்கு நமக்கு கிடைக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் கூட எங்கள் சிறு நகரத்தில் மூன்று டெங்கு மரணங்கள் நிகழ்ந்ததை நாளேடுகள் கூறின. இப்படி அவ்வப்போது நாம் படித்தவற்றிலிருந்து ஒரு கணக்கை நாமே போட்டு உண்மை நிலையை அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் தொடக்கத்தில் பருவகாலங்களின் போது மட்டும் வருகின்ற இறப்பு விகிதம் இல்லாத நோயாக அறியப்பட்ட டெங்கு, அண்மை ஆண்டுகளில் ரத்தக்கசிவு காய்ச்சல் நோயாக உருவெடுத்திருக்கிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்ற நன்னீரில் வளரும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிக அளவில் பெருகுவதற்கு பருவநிலை மாற்றங்கள் மட்டுமின்றி மனிதச் செயல்பாடுகளும், அரசின் நிதானப்போக்கும் தான் காரணம்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்க்கைச் சூழல்போலக்கூட இப்போது இல்லை.வேலை இல்லை என்றால் எங்கள் சிறுநகர, கிராமப்புற மக்கள் மும்பை, விஜயவாடா, கொச்சி, பெங்களூரு என்று மிகச் சாதாரணமாகப் போய் வருகிறார்கள். எந்த ஊர் நோய்ப் பரவல் என்றெல்லாம் வேலைக்குப்போகும் மக்களுக்குத் தெரியாது. அந்தந்த ஊர்களில் கிடைக்கும் வருவாயோடு நோய்களையும் சொந்த ஊருக்குக் கொண்டு வருகிறார்கள்.

பொது இடங்களை ஆக்கிரமிப்பது இப்போது ஒரு பொதுவான மனப்போக்கு. புதுவீடு கட்டினால் கழிவு நீர்க்கால்வாய் மீதுதான் வாசல். நீர்நிலைகளை சின்னாபின்னப்படுத்தியாயிற்று. மழை பெய்தால் வெள்ளநீர் போவதற்கும் வழியில்லை. கழிவு நீர் போவதற்கும் வழியில்லை. போக்கிடம் ஏதுமின்றி, வீடற்ற ஏதிலிபோல் பரிதவித்து அங்கங்கே தங்கும் நீரில் கொசு வளர்கிறது.

கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், நெகிழிக் குவளைகள் கொசு பெருக மற்றொரு முக்கிய காரணம். பொது உணர்வற்று வீசி எறியப்படும் நெகிழிப் பொருட்களும், தமிழ் நாட்டைத் திறந்த வெளி மதுபானக்கூடமாகப் பாவித்திடும் நமது ‘குடிமக்கள்’ வீசியெறியும் பிளாஸ்டிக் குவளைகளும், காலி மதுக் குப்பிகளும் மழை நீரால் நிரம்பி கொசு வளர இடம் தருகின்றன.

உணரப்படாத வலி

வெறுமனே நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கச் சொல்லிவிட்டால் டெங்கு ஒழிந்துவிடுமா? கொசுவை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? நன்னீரில் வளரும் டெங்கு பரப்பிக் கொசுக்கள் பெருகுவதற்கு இன்று பெருமளவு காரணமாக இருக்கும் பிளாஸ்டிக்கை ஏன் அரசு முற்றிலுமாகவோ,பாதியளவிலோ தடை செய்யக் கூடாது? குப்பைகளை அப்புறப்படுத்துவதிலும் கால்வாய்களையும் நீர்நிலைகளையும் தூர்வாருவதிலும் என்ன சுணக்கம்? மழைக் காலங்களைத் தொடர்ந்து ஊர்கள் தோறும் டெங்கு மருத்துவ முகாம்களை ஏன் நடத்துவதில்லை? 

இவையெல்லாம் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களிடத்தில் இன்று எழும் கேள்விகள்.

குரல் நலிந்திருக்கும் நோயாளிகளின் இக்கேள்விகள் எவையும் அரசின் காதுகளில் போய் விழுந்ததாகத் தெரியவில்லை. ஊடக விவாதங்களிலும்கூட இவை எதிரொலிப்பதில்லை.அங்கு கண்ணீர் வடியும் கதைகளுக்குப் பதிலாய் நெய்வடியும் கதைகளே பரப்பப்படுகின்றன. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்கு தூசு தட்டிச் தூசு தட்டிச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

நான் சிகிச்சைக்குப் போனபோது தன் அம்மாவை அணைத்து பிடித்தபடி நோயால் கதறி அழும் சிறுமி ஒருத்தியைப் பார்த்தேன். இப்படி தமிழகம் முழுக்கவும் எத்தனைப் பிஞ்சுகளின் அழுகைகள்? எத்தனை ஓலங்கள்? ’ஈசனு’க்கு அடி விழுந்தால் மட்டும் நாட்டு மக்களுக்கு வலிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு அடி விழுந்தாலோ ஈசனுக்கு வலிக்கக் கூடாது! என்ன நியதி?

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்று அறங்கூறிச் சென்றிருக்கிறான் வள்ளுவன். அவன் சொல்லும் கண்ணீரில் நோயாளிகளின் கண்ணீரும் சேர்ந்திருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!

- அழகிய பெரியவன்,

கவிஞர், எழுத்தாளர்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...